Featured post

Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present

 *Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present, Hari directorial, Actor Vishal starrer 'Rathnam&...

Friday 9 April 2021

99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் சதம்

99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் சதம் அடிக்கப் போகும் ஏ ஆர் ரஹ்மான்: தனது முதல் தயாரிப்பு குறித்து மனம் திறக்கிறார் ஆஸ்கார் நாயகன்*


ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான 99 சாங்ஸ், 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.


ஜியோ ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.


ரஹ்மானின் முதல் தயாரிப்பான இந்த லட்சியப் படைப்பின்  கதாசிரியரும் அவரே ஆவார். ‘தி தேவாரிஸ்ட்ஸ்’ மற்றும் ‘பிரிங் ஆன் தி நைட்’ புகழ் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திறமைமிக்க நடிகரான ஏஹன் பட்டை ‘99 சாங்ஸ்’ மூலம் ரஹ்மான் அறிமுகப்படுத்துகிறார். நடிகை எடில்ஸி வர்காஸுக்கு ஜோடியாக ஏஹன் பட் நடிக்கிறார்.


திரைப்படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ ஆர் ரஹ்மான், “என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸின் சார்பாக இந்த பரீட்சார்த்தமான திரைப்படத்திற்காக ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது,” என்றார்.


*இப்படம் குறித்து அவர் அளித்த சிறப்பு பேட்டி:*


*கே: 99 சாங்ஸ் படக்கதையின் ஆரம்ப புள்ளி என்ன?*


ப: 2010-ம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம். அப்போது நிறைய விஷயங்கள் நடந்தன. அவற்றை முடித்து டிசம்பரில் விமானத்தில் வந்தபோது தேவதை கதை மாதிரி ஒரு யோசனை வந்தது. ஒரு பையன், ஒரு பெண்ணை அடைவதற்கு 100 பாட்டுக்கள் எழுதினால் எப்படியிருக்கும். இந்த கருவிலிருந்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு இந்த கதையை உருவாக்கினேன். இந்த படத்தை இயக்குவதற்கு விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி கிடைத்தார். இதற்கு நிதியளிக்க ஐடியல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கிடைத்தது. அதன்பின் ஒவ்வொரு கூட்டாளியாக கண்டுபிடித்துதான் இந்த படம் உருவானது.


*கே: முழுக்க இசைப் பின்னணி கொண்டது என்பதால் எளிதாக எழுதிவிட்டீர்களா?*


ப: எதுவும் எளிதாக வராது. எளிதாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும். வாழ்க்கை, அனுபவ அறிவு, இசையின் பல கோணங்கள் ஆகியவற்றை சேர்த்து எழுதினேன். சினிமாத்துறையில் மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் இசை சற்று எளிதானது. வெளியே செல்லத் தேவையில்லை. ஆனால் இந்த படப்பிடிப்புக்காக, நான் வெளியே செல்லும்போது பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. வழக்கமாக, நான் அதிகம் பேசமாட்டேன். ஆனால், தற்போது படப்பிடிப்பில் பலர் முன்னிலையில் நாம் சொல்ல வரும் கருத்தை எப்படி தெளிவாக தெரிவிப்பது என்பது எல்லாம் பழகிவிட்டது. அந்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.


*கே: கதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். திரைக்கதை அமைப்பை ஏன் நீங்களே உருவாக்கவில்லை?*


ப: திரைக் கதையில் நிறைய விஷயங்கள் உள்ளன. திரைப்படத் தயாரிப்பு என்பது வெறும் கதை மட்டும் அல்ல. அதில் சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் உள்ளன. இசை, காட்சிகள், சவுண்ட் டிசைன் ஆகியவை சேர்ந்து ஒரு மேஜிக் தான் சினிமா. அது டைரக்டராக இருந்த அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் வரும். விஸ்வேஷ் நிறைய விளம்பரம் பண்ணியிருக்கிறார். இசை ஆவண படங்கள் தயாரித்திருக்கிறார். இருவரும் அமர்ந்து, சிந்திந்து உருவாக்கிய திரைப்படம்தான் இது.


*கே: தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்?*


ப: ஒரு இசையமைப்பாளராக இருந்து விட்டு, திடீரென வேறு வேலை பண்ணும்போது, அத்துறையைச் சார்ந்த பிரபலத்திடம் சென்று நமது யோசனையை தெரிவித்தால், அவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். அதனால் புது நபர்களை வைத்து இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். அனுபவம் வாய்ந்த இயக்குநரிடம் சென்றால், அவர்கள் தங்கள் அனுபவ அறிவை தருவார்கள். ஆனால் அதைவிட எனக்கு சுதந்திரம் முக்கியம். சின்ன சின்ன விஷயங்கள் தவறாக போனாலும், சரி செய்து கொள்ளலாம். கற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் வெற்றியும் பெற வேண்டும். அந்த சமநிலை இந்த குழுவால் கிடைத்தது.


*கே: கதை எழுதும் போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?*


ப: முதல் முறையாக கதை எழுதும் போது, நமக்கு தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என முயற்சி செய்வோம். 300 சதவீதம் கதை எழுதி அதை 100 சதவீதமாக வடிகட்டி அதை எப்படி கொடுக்க முடியும் என்பதை நான் இந்த படத்தில் கற்றுக்கொண்டேன்.


*கே: பல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளீர்கள். அவர்களை வைத்து ஏன் இந்தப் படத்தை உருவாக்கவில்லை?*


ப: நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மிகச் சிறந்த படம் எடுத்தவர்கள். இந்த படம் ஒரு சின்ன முயற்சி. அதாவது புது வாய்ஸ். இது தற்போதைய நெட்பிலிக்ஸ், யூ ட்யூப் பார்க்கும், பல செயலிகளை பார்க்கும் தலைமுறையினருக்கான படம். உலகம் முழுவதும் உள்ள புதிய தலைமுறையினர் நமது கதையையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட படம் இது.


*கே: விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி குறித்து சிறு அறிமுகம்...*


ப: 10 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அது எனக்கு பிடித்திருந்தது. அதை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். நிறைய விளம்பரப் படம் எடுத்திருக்கிறார். அவர் இசை அறிஞர், சண்டை கலைஞர், விளையாட்டு நுணுக்கங்களை அறிந்தவர். அவர் பல திறன்கள் கலந்த கலவையாக இருந்ததால், அதனால் அவருடன் பேசி இந்த படத்தை உருவாக்கினோம்.


*கே: நடிகர்கள் தேர்வில் உங்களுடைய பங்கு என்ன? ஏன் புதுமுகத்தை வைத்து இப்படம் படமாக்கப்பட்டது?*


ப: இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இருவரும் இசை கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் ஒரு வருடம் இசை கருவி பயிற்சி பெற்றனர். பின் அவர்கள் அமெரிக்கா சென்று நடிப்பு கற்றனர். புது முகங்களை வைத்து படம் எடுத்தால் கால்ஷீட் பிரச்னை இருக்காது. சுதந்திரமாக படம் எடுக்கலாம். அதுதான் காரணம்.


*கே: பலரும் இந்தக் கதை உங்களுடைய வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதி என்று கருத்து தெரிவித்து வருகிறார்களே. அது உண்மையா?*


ப: என் வாழ்க்கை கதை முற்றிலும் வித்தியாசமானது. நான் இசைத் துறையில்தான் செல்ல வேண்டும் என என் அம்மா கூறினார். ஆனால், பொது வாழ்வில் யாரும் இசைத் துறைக்கு செல்லும்படி தங்கள் பிள்ளைகளிடம் கூற மாட்டர்கள். அரசு வேலைக்கு செல்லும்படி அறிவுறத்துவர். ஆனால் தற்போது இந்த தலைமுறை மாறிக் கொண்டிருக்கிறது. என்னுடைய அனுபவங்களில் இருந்து திரட்டிய விஷயங்களை வைத்து இந்த படத்தில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளேன். அது எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.


*கே: உங்களுடைய இயக்குநர் நண்பர்கள் இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு என்னச் சொன்னார்கள்?*


ப: நிறைய பேரிடம் காட்டவில்லை. ஹாலிவுட் படம் போல் இருக்கிறது என இயக்குநர் ஷங்கர் கூறினார். கலை மற்றும் கமர்ஷியல் கலந்த கலவையாக இருப்பதாக அட்லி கூறினார். புதுவிதமாக இருக்கிறது என சிலர் கூறினர். இது மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


*கே: பல்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறீர்கள். அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் அளவுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன?*


ப: நான் பல மொழிகளில் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். சில படங்கள் வெற்றி பெற்றன. சில வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் கதை, தயாரிப்பு, இசை ஆகியவை எந்த மொழியில் பார்த்தாலும் மக்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.


*கே: இசையைப் பின்னணியாகக் கொண்டு பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. இதில் என்ன புதுமையாக இருக்கும்?*


ப: இசை பின்னணியில் நிறைய படம் வந்திருக்கிறது. இந்த படத்தில் நான் சொல்ல வரும் விஷயம் சற்று வித்தியாசமாக இருக்கும்.


*கே: இந்தப் படத்தின் மூலம் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். விரைவில் இயக்குநர் ரஹ்மானை காண வாய்ப்பு உள்ளதா?*


ப. இயக்குநராக பல காலம் ஆகும். நிறைய விஷயங்களை மனதில் வைத்து படம் பண்ணுவதற்கு எனக்கு நேரம் இல்லை. ஆனால் படம் தயாரிக்க ஒரு குழுவை வைத்து கதை எழுதி, ஒரு இயக்குநரை வைத்து படம் எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது.


*கே: 99 சாங்ஸ் படத்தைத் தொடர்ந்து கதை எழுதும் எண்ணம் உள்ளதா? ஏதேனும் எழுதி வைத்துள்ளீர்களா?*


ப: நிறைய கதைகளை எழுதி வைத்துள்ளேன். ஆனால், ஒன்றை செய்தால், அது ஒழுங்காக செய்ய வேண்டும் என்பது என் ஆசை. முதலில் இந்த படம் எப்படி மக்களை சென்றடைகிறது என்பதை பார்த்து விட்டு, அதற்குப்பின் அடுத்த கட்டத்தை பற்றி யோசிப்பேன்.


*கே: ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்கு கதை எழுதும் எண்ணம் இருக்கிறதா?*


ப: நிறைய தமிழ் கதையும் என்னிடம் இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை பொருத்துதான் எல்லாமே.


*கே: ஒரு பாடலில் சில காட்சிகளில் தோன்றுகிறீர்கள். எங்களால் நடிகர் ஏ.ஆர்.ரஹ்மானை காணவே முடியாதா?*


ப: இல்லை. நான் என் சொந்த உலகில் இருக்க விரும்புகிறேன். நடித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன். அதனால் அமைதியாக இசை, கதை எழுதவே விரும்புகிறேன்.


*கே: சமூகவலைதளத்தில் விமர்சனம் என்பது மிகவும் எளிமையாகிவிட்டது. இதைப் பற்றிய உங்களுடைய பார்வை என்ன?*


ப: விமர்சனம் வருவது தப்பே இல்லை. முதல் படத்திலிருந்தே எனக்கு விமர்சனம் பழகிவிட்டது. அதில் நல்ல விஷயங்களை நான் எடுத்துக் கொள்வேன். மற்ற விஷயங்களை தவிர்த்து விடுவேன். நாம் உண்மையாக உழைத்திருக்கிறோமா என்பதுதான் முக்கியம்.

No comments:

Post a Comment