Featured post

Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception

 *Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception* Angammal, scheduled for its release ...

Monday, 9 January 2023

கடலூர் மாவட்டம் பாலைவனமாவதை வேடிக்கை பார்க்கலாமா

 கடலூர் மாவட்டம் பாலைவனமாவதை வேடிக்கை பார்க்கலாமா?

- தங்கர் பச்சான் ஊடக அறிவிக்கை.


எனது தொடக்கப்பள்ளிக் காலத்தில் என் பாட்டி வீட்டின் சமையலறையில் நீருற்று பொங்கி வழிந்து அங்கே மீன் பிடித்து விளையாடினோம் என்பதை நம்புவீர்களா? ஆர்டீஷியன் ஊற்றுப்பகுதியாக வெறும் எட்டு அடிகளில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது எண்ணூறு அடிகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. அத்தகைய நிலங்களில் ஆழ்துளை கிணறுகளை வெட்டி உற்பத்தி செய்த கரும்புகளைக்கொண்டுதான் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாடி மகிழ்கிறோம் என்பதையும் இவ்வேளையில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். 



தமிழ்நாட்டிலேயே அதிக மூச்சுக் கோளாறு நோயினால் பாதிப்புக்குள்ளாகுபவர்களும், உயிரிழப்பவர்களும் நெய்வேலியைச் சுற்றியுள்ள என் மாவட்டத்துக்காரர்கள்தான். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு அடி அகலமுள்ள மிதிவண்டியின் இருக்கையில் ஒரு மணிநேரம் கழித்துப் பார்த்தால் 24 மணி நேரமும் நிலக்கரி எரிக்கப்பட்டு வெளியேறும் கரும்புகைத் துகள்கள் முழுவதுமாக மூடியிருக்கும். அதில் உங்களின் பெயரை விரலால் எழுதிப் பார்க்கலாம். இம்மாவட்ட நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களில் இதனால் மகரந்தச் சேர்க்கை தடைப்பட்டு எத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்பினை உருவாக்கும் என்பதை எவராவது உணர்ந்திருக்கிறீர்களா?


தமிழ்நாடு மட்டுமின்றித் தென்னகம் மற்றும் வட மாநிலங்களுக்கும் மின்சாரத்தை உருவாக்கித் தந்து பாழ்பட்டுக்கிடப்பது என் மாவட்ட நிலங்களும் மக்களும்தான்.

ஏற்கெனவே இரண்டு சுரங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது சுரங்கம் அமைக்க 37ஆண்டுகளுக்கு முன்பே இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை முடக்கி மக்களை வெளியேற்றி விட்டனர். அந்த நிலங்களே இன்னும் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடக்கின்ற நிலையில் இப்பொழுது மேலும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த மக்களை கட்டாயப்படுத்தி நிலங்களைப் பறித்து வெளியேற்றுவது குறித்து இங்கே எவரும் கண்டுகொள்ளவில்லை.

அடிபணியாத மக்களிடம் இந்தியாவிலேயே எங்கும் தரப்படாத இழப்பீட்டுத் தொகையினை அதிகப்படுத்தித் தருவதாக ஆசை காட்டி மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை ஏன் எவரும் கண்டு கொள்ளாமல் உள்ளீர்கள்?


வெளியேற மறுக்கும் மக்களிடம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பினைத் தருவதாகக் கூறுபவர்கள் இதுவரை 66 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு வேலை வழங்கினீர்கள்? சொந்த ஊருக்குள்ளேயே, மாநிலத்துக்குள்ளேயே அகதிகளாக அலைந்து கொண்டிருப்பவர்களை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

வெளியேற்றப்பட்ட மக்கள் அண்டி வாழும் இடத்தில்தான் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்தின் படக்காட்சிகள் உருவாக்கப்பட்டன. அம்மக்களைக் கொண்டுதான் அக்காட்சிகள் படமாக்கப்பட்டன.

வளர்ந்த ஊரை விட்டு, வணங்கிய கடவுள்களை விட்டு, வளர்த்த ஆடு மாடுகளுடன் போக்கிடம் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் மக்களைப் போலத்தான் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களைப் பறித்து அனுப்பத் துடிக்கும் இந்த மக்களும் அலைய வேண்டுமா? எல்லோருக்கும் மின்சாரத்தை வழங்கி ஒளியூட்டிவிட்டு எதிர்காலத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து இருட்டில் அலையும் இம்மக்கள் குறித்து எவருமே கண்டு கொள்ள மாட்டீர்களா?


தங்கள் பகுதிக்கான சிக்கல்கள் வரும்போதெல்லாம் போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்கத்தினர்களெல்லாம் இப்பொழுது எங்கே தொலைந்து போனார்கள்? நம் விவசாயிகளுக்காக டெல்லிக்கெல்லாம் சென்று போராடியவர்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்? 


விவசாயிகளுக்கான டெல்டா மாவட்ட சிக்கல்கள், கதிராமங்கலம், காவேரி தொடர்பான போராட்டங்களில் நான் தவறாமல் பங்கேற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் என்னை அழைத்தவர்கள் இப்போது எங்கே போனீர்கள்? 


கடலூர் மாவட்டம் பாலைவனமாகப் போய்க்கொண்டிருக்கிறது! இதற்குப்போராட இங்கே வேறெந்த அரசியல் கட்சிகளுமே இல்லையா? தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் எங்கே இருக்கிறீர்கள்?


நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நிறுத்தினால் காவேரி ஆற்றுச் சிக்கல் தீரும் என அவசரமாகக்கூட்டப்பட்ட திரைப்பட வர்த்தகச் சங்கக் கூட்டத்தில் எடுத்துக் காட்டி உரைத்தது நான்தான். அன்றைக்கு வெகுண்டெழுந்து பெரும் போராட்டத்தை நடத்திய திரையுலகக் கலைஞர்களும், இயக்குநர்களும், தொழிலாளர்களும் இன்றும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.


உங்களுக்கெல்லாம் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பிடுங்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவதில் மகிழ்ச்சிதானா? எங்களின் வாழ்வை அழித்து உற்பத்தி செய்யப்படும் அந்த மின்சாரத்தில்தான் அத்தனை ஊடகங்களும், இணையத் தளங்களும் இயங்குகின்றன. பொங்கலன்று வெளியாகப்போகும் இரண்டு வணிக சினிமாக்களுக்காக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே பார்வையாளர்களைத் திரட்டுவதற்காக செயல்பட்டு ஊடகங்கள் என சொல்லிக்கொண்டிருக்கும் பொருப்பற்ற உங்களிடம் இதுபற்றி எதிர்பார்ப்பது பெரும் தவறுதான். 


2025 ஆண்டிற்குள் நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் மற்றும் இது போன்ற சில நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என நாடாளுமன்றத்தில்  நிதி அமைச்சர் பேசியுள்ளதைக் கண்டிருப்பீர்கள். இம்மக்களை வெளியேற்றித் துரத்தி விட்டு என்.எல்.சி நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கத்தான் அரசுகள் முழு மூச்சாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதற்கு குரல் கொடுக்காத விவசாய சங்கங்களும், அரசியல் கட்சியினரும், ஊடகத்தினரும் இனியாவது மனசாட்சியுடன் செயல்பட்டு கடலூர் மாவட்டம் பாலைவனமாவதிலிருந்து காப்பாற்றுங்கள்.

 

​​​​​​​​அன்போடு,

 

​​​​​​​​தங்கர் பச்சான்

​​​​​​​​09.01.2023

No comments:

Post a Comment