Featured post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம்

 *பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்* சினிமாவில் நாளுக்கு நாள் எ...

Thursday 26 January 2023

என் பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக தான் நான் சினிமாவை விட்டு விவசாயத்திற்கு

 *என் பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக தான் நான் சினிமாவை விட்டு விவசாயத்திற்கு முழுமையாக மாறினேன் - இயக்குநர் பாண்டிராஜ்* 


விவசாயம் செய்பவர்கள் பலர் நஷ்டம் அடைகிறார்கள். ஆனால், விவசாயத்தை மாற்று வழியில் செய்பவர்கள், லாபத்தை சம்பாதிக்கிறார்கள். நான் இந்த வருடம் 114 மூட்டை நெல் அறுவடை செய்தேன். எனது மனைவி அறுவடை செய்யும் வரை ஆனா செலவை ஒரு டைரியில் எழுதி வைத்திருந்தார். நெல் விற்று பணத்தை கணக்கிட்டு இந்த வருடம் நமக்கு லாபம் என்று கூறினார். சினிமா எடுத்து பல கோடிகள் சம்பாதித்து கிடைத்த மகிழ்ச்சியை விட, விவசாயம் மூலம் வரும் நெல்லில் சாப்பிடும் போது அதிகமான மகிழ்ச்சி கிடைக்கிறது.


விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் தொடர்ந்து விவசாயிகள் அதையே தான் செய்கிறார்கள். இந்த வருடமாவது லாபம் பார்த்து விடுவோம் என்று மனம் தளராமல் இருப்பதுதான் விவசாயத்தின் சக்தி. ஒவ்வொரு முறை நான் ஊருக்கு செல்லும்போதும் காரில் தான் செல்வேன். அப்போது மாலை 6 மணிக்கு முன்பு ஓட்டுநரை வேகமாக ஓட்டுங்கள் என்று அழுத்தம் கொடுப்பேன். நீராக வீட்டிற்கு செல்ல மாட்டேன். விவசாய நிலங்களுக்கு சென்று அங்கு விளைந்த காய்கறிகள் பழங்களை அப்படியே சாப்பிட்டால் தான் எனக்கு திருப்தியாக இருக்கும்.


எனது பெற்றோர்கள் விவசாயிகள், நான் சினிமாவிற்கு வந்துவிட்டேன். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு முன்பு விவசாயிகளின் வலிகளை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால், எனது பெற்றோர் பத்து வருடமாக விவசாயம் செய்யவில்லை. இப்போது நான் விவசாயம் செய்ய முடிவெடுத்து எடுப்பதற்கான கதையை கூறினால் நேரம் போதாது. ஒரு படமே எடுக்கலாம். ஆனால், என் நண்பன் ஒரு நாள் நீ தேசிய விருது முதல் பல விருதுகளையும் வாங்கி விட்டாய். பெரிய நாயகர்களைக் கொண்ட படம் இயக்கி விட்டாய். இதனால் உனது பெற்றோர்களின் ஆத்மா சாந்தியடையுமா என்று கேட்டான். அவர்கள் சந்தோஷமாக தானே இருக்கிறார்கள் என்று கூறினேன். அவர்கள் விவசாயம் செய்த நிலம் வீணாக கிடக்கிறது. அதை பார்க்கும்போது அவர்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று கேட்ட ஒரு கேள்விதான் என்னை சென்டிமெண்டாக விவசாயத்தை செய்ய வேண்டும் என்று முடிவை தீர்க்கமாக எடுக்க வைத்தது. எங்களது நிலத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. எனது பெற்றோர் வாழ்ந்த நிலம் பாழாய் இருந்தது. அங்கே மது அருந்திவிட்டு பாட்டில் போட்டு சாராயம் காய்ச்சுவது முதல் என் அப்பாவின் நிலம் மோசமாக இருந்தது. அதனால் நான் அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து துவங்கினேன். நிறைய சிக்கல்களை சந்தித்தேன். வேலி, கிணற்றில் தண்ணீர் இல்லை, என பல தடைகளை தாண்டவே பணமும், உழைப்பும் செலவானது. சுற்றி இருந்தவர்களும், எனக்கு விவசாயத்தில் அதிர்ஷ்டம் இல்லை என கூற ஆரம்பித்தார்கள். ஆனால் விடாது அதில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பிறகு, நிலத்திற்கு நீர் வந்தது. இதை எல்லாம் பார்க்கும் போது, இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் எதையும் எதிர்பாராமல் இதற்காக தான் உழைத்து இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அவர்கள் அதை தாண்டி பயிரை விளையவைத்து நமக்கு கொடுக்க பாடுபடுகிறார்கள். அப்படிபட்டவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நானும் கார்த்தி சாரும் இணைந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் எடுத்த மகிழ்ச்சியை விட, அவர் இந்த உழவன் அமைப்பு ஆரம்பித்ததில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். இங்கு வந்தவர்களின் முகத்தை பார்க்கும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதோடு அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். அந்த திட்டத்தை ஆக்கபூர்வமாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஒரு நாள் கூலி 250 ரூபாய் பெற்றுக் கொண்டு இரண்டு மணி நேரம் கூட வேலை செய்யாமல் அடுத்தவரின் கதைகளை பேசுவதற்கான இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால் மத்திய அரசு நூறு ரூபாயும் மாநில அரசு 100 ரூபாயும் விவசாயி 50 ரூபாயும் கொடுத்தால் விவசாயத்தில்்் முன்னேற்றம் ஏற்படும். அதேபோல தூர் வாரும் வேலைகளையும் மேலோட்டமாகவே செய்கிறார்கள். சில நாட்களிலேயே மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. தமிழ்நாட்டு அரசு இதற்கு உரிய முறையை முன்னெடுத்து செய்தால் நாடும், விவசாயமும் வளர்ச்சி பாதையில் செல்லும் என்றார்.

No comments:

Post a Comment