Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Saturday, 28 October 2023

உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” – மிரியம்மா ஆடியோ

 ”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா







“பணம் முக்கியம் இல்லை, கதாபாத்திரமே முக்கியம்” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா


“சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில்  இயக்குநர் மாலதி நாராயணன்


”வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை” - மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் ”பிக்பாஸ் விஜய் வர்மா”


ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.  ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள, யாத்திசை புகழ் ரஞ்சித் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.


விழாவில் பேசிய நடிகர் ஆஷிக், இந்த மிரியம்மா படத்தின் புராஜக்ட் மிக வேகமாக நடந்து முடிந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் சில படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்தாண்டு விஜயதசமிக்கு வெளியாகும், படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும். அப்படியெல்லாம் இங்கு நடப்பது சகஜம். ஆனால் இந்த படத்தின் வேலைகளை இவ்வளவு வேகமாக முடித்திருக்கும் இயக்குநர் மாலதி நாராயணுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் கூறிக் கொள்கிறேன்.  ரேகா மேடம் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் கொண்டு வந்த உணவை கூட்டாஞ்சோறு போல எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். அதில் ஒரு தாய்மை உணர்வு இருக்கும்.  2017ல் செஞ்சிட்டாளே என் காதலை படம் வெளியான போதிருந்தே எனக்கு எழிலை நன்றாகத் தெரியும்..  அப்படத்தின் டிரைலரைப் பார்க்கும் போதே இப்படம் நன்றாக இருக்கும் என்கின்ற உணர்வை ஏற்படுத்தியது.  ஏ.ஆர்.ரெஹனா எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர், என் படத்திற்கு அவர் இசையமைப்பாளராக கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்.  யாத்திசை படத்தில் இருந்தே கலை இயக்கத்தில் ரஞ்சித் மிரட்டி வருகிறார். அந்த மிரட்டல் இப்படத்திலும் தொடர்கிறது.  என் நட்புக்காக கடைசி நேரத்தில் அழைத்தும் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் விஜய் வர்மாவிற்கு என் நன்றிகள். இது போன்ற சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு பத்திரிக்கை  நண்பர்களான நீங்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.  இப்படத்தை  மக்களிடம் கொண்டு போய் சேர்த்து மிகப்பெரிய வெற்றியடையச் செய்ய வேண்டும்  என்று கேட்டுக் கொள்கிறேன்..” என்று பேசினார்.


நடிகர் எழில் பேசும் போது, சிறு முதலீட்டுப் படங்களே தேவை இல்லை என்று பேசிக் கொண்டு இருக்கும் போது, இந்த சிறு முதலீட்டுப் படத்திற்கு ஆதரவு தந்து இவ்வளவு பத்திரிக்கை நண்பர்கள் வந்திருக்கிறீர்கள்.  உங்களுக்கு நன்றி.  இப்படத்தின் இயக்குநர் மாலதி நாராயணன் ஒரு டாக்டர், அயர்லாந்தில் படித்து செட்டில் ஆனவர்.  அவர் இங்கு வந்து ஒரு தமிழ்ப்படத்தை இயக்கி தயாரித்து சிறப்பான முறையில் வெளியீட்டிற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அவர் வேலை செய்யும் வேகத்தைப் பார்த்தால் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.  ஏ.ஆர்.ரெஹனா மேடத்தின் பாடல்களை படப்பிடிப்பில் ஒலிக்கச் செய்து, அதைக் கேட்டுக் கொண்டே தான் பாடல் படப்பிடிப்பு நடந்தது.  மிகச்சிறப்பான பாடல்களைக் கொடுத்த  அவருக்கு நன்றி.  அது போல் பின்னணி இசை அமைத்திருக்கும் மூன்ராக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்தப் படத்தின் கதை மிகவும் வித்தியாசம் ஆனது.  நீங்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.


மிரியம்மா படத்திற்கு பின்னணி இசை அமைத்திருக்கும்  “மூன் ராக்” குழுவினர் பேசும் போது, “மிகவும் எமோஷ்னலாக இருக்கிறது. பெரிய பெரிய இசையமைப்பாளர்களின் பெயர்களை எழுதிய பத்திரிக்கையாளர்கள் எங்களது பெயரை இசையமைப்பாளர் என்று எழுதப் போவதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய ஆதரவு தாருங்கள்”  என்று பேசினர்.


படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா பேசும் போது, ”ஒளிப்பதிவாளர் ஜேஷனின் அறிமுகத்தால் தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். இயக்குநர் மாலதி நாராயணன் தேனீயைப் போல் சுறுசுறுப்பானவர், இருக்கின்ற எல்லா வேலைகளையும் அவர் பார்ப்பார். தயாரிப்பு, இயக்கம் மட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் தேவைப்படும் சிறு சிறு வேலைகளைக் கூட கூச்சமின்றி இறங்கிச் செய்வார்.  இக்கதை மிகவும் வித்தியாசமான கதை, நடிகை ரேகாவிற்கு இக்கதை மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறினார்.  நடிகை ரேகா எனக்கு நெருங்கிய தோழி போன்றவர், இப்படத்தில் பின்னணி இசை அமைத்திருக்கும் மூன் ராக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.  இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்” என்று பேசினார்.


நடிகை ரேகா பேசும் போது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.  நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.  இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த அந்தக் கடவுளுக்கும், பத்திரிக்கை நண்பர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அது போல் என் உயிரினும் மேலான என் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும்.  தமிழில் ஜெனிபர் டீச்சர்,  ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அது போல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம் பெறும் என்று நம்புகிறேன்.  செல்போனில் இயக்குநர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு  வாய்ப்பளித்த இயக்குநருக்கு என் நன்றிகள். இப்படத்தில் நான் எழிலுக்கு தாயாக நடித்திருக்கிறேன். எங்களுக்குள் அந்த பாண்டிங் வந்தால் தான் காட்சிகள் இயல்பாகத் தெரியும். ஆனால் நான் பல படங்களில் நடித்த சீனியர் என்பதால் எழில் ஆரம்பத்தில் விலகியே இருந்தான்..  பின்னர் நான் அவனை “டேய் இங்க வாடா” என்று உரிமையாக அழைத்துப் பேசத் துவங்கியதும் எழில் இயல்பாகி விட்டான். காட்சிகளும் அருமையாக வந்திருக்கின்றது.


நான் நடித்த சில கதாபாத்திரங்கள் சற்று திமிர்பிடித்த கதாபாத்திரங்கள் என்பதால் என்னைப் பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை.  என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிருபிக்க விரும்புகிறோம்.  நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல் எங்களை எறிந்துவிடுகிறார்கள். கமர்ஸியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய் விட்டது. எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா..? என்று கேட்கிறார்கள். நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன்..  நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்…  உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. 


சின்ன பட்ஜெட்டில் தொடங்கிய இப்படம் முடியும் போது பெரிய பட்ஜெட் திரைப்படமாக மாறிவிட்டது. இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தந்து படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.


படத்தின் இயக்குநர் மாலதி நாராயணன்  பேசும் போது, “இப்படம் தொடங்கும் போது நான், ஆஷிக் மற்றும் கேமராமேன் ஜேஷன் மட்டுமே இருந்தோம். இங்கு இருக்கும் அனைவரையும் இந்த புராஜக்டிற்குள் அழைத்து வந்தது ஆஷிக்கும் ஜேஷனும் தான். அவர்களுக்கு என் நன்றிகள்.  முதலில் நான் இப்படத்தை தயாரிக்கும் எண்ணத்தில் இல்லை. இயக்கவே விரும்பினேன். பின்னர் ஒரு சூழலில் இப்படத்தை தயாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு  தள்ளப்பட்டேன்.  இப்படத்தில் நிறைய நபர்கள் உள்ளே வந்துவிட்டுப் பின்னர் வெளியேறி இருக்கிறார்கள்.  ஒரு தயாரிப்பு நிறுவனம் கூட இப்படத்தை தயாரிக்க முன் வந்தது. ஆனால் படத்தின் பூஜைக்கு மூன்று நாட்கள் இருக்கும் போது, அந்நிறுவனம் காணாமல் போனது. எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை.  இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம். 

அவர்கள் யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை. அயர்லாந்தில் இருந்து வந்திருக்கிறார்கள். படத்தை எடுத்து முடிப்பார்களா..? பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளிநாடு சென்று விடுவார்களா…? என்று பல சந்தேகங்கள் அவர்களுக்கு. அவர்களால் எங்களை நம்பமுடியவில்லை. அவர்கள் இந்த புராஜெக்டை விட்டு வெளியேறியது ஒருவிதத்தில் நல்லது என்றே தோன்றுகிறது. அதனால் தான் எனக்கு என் மீதான நம்பிக்கை அதிகரித்தது.  என்னை நம்பி இவ்வளவு பெரிய அணி உருவாகி இருந்ததால் ஒரு கட்டத்தில் நானே தயாரிக்க முன் வந்து இப்படத்தை தயாரித்திருக்கிறேன். மீண்டும் படம் தயாரிப்பேனா என்று தெரியாது.  ஆனால்  கண்டிப்பாக படம் இயக்குவேன்.


இங்கு எழில் சிறுமுதலீட்டுப் படங்கள் எடுக்க வேண்டியதில்லை என்று யாரோ பேசியதைக் குறித்துப் பேசினார்.  சிறு முதலீட்டுப்படங்களே எடுக்கக் கூடாது என்று கூறினால் அறிமுக இயக்குநர்களுக்கான எல்லா கதவுகளும் அடைபட்டுவிடும். ஏற்கனவே படம் செய்த இயக்குநர்கள் மட்டும்தான் திரும்ப திரும்ப படம் செய்வார்கள்.  முதல் வாய்ப்பு என்பது மிகப்பெரிய விசயம், அதனால் தான் மூன் ராக் குழுவினரை கண்டிப்பாக இப்படத்தில் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களின் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  என்னுடைய அளவிற்கு இது பெரிய முதலீட்டுப் படம் தான்.  எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்த என் குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று பேசினார். 


தற்போதைய பிக் பாஸ் சீசனில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா பேசும் போது, “நட்பின் அடிப்படையில் தான் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்டேன். நான் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. மக்கள் தரும் ஆதரவைப் பார்க்கும் போது வியப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.  மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று பேசினார்.

No comments:

Post a Comment