Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Wednesday 26 June 2024

நீட் தேர்வுக்கான ஒரு பிரச்சார யுத்தத்தை ‘அஞ்சாமை’ படம் தொடங்கி

 *“நீட் தேர்வுக்கான ஒரு பிரச்சார யுத்தத்தை ‘அஞ்சாமை’ படம் தொடங்கி வைத்திருக்கிறது”* 










*அஞ்சாமை படத்திற்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு* 


சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்த கூடிய, மாற்றங்களுக்கு விதை போட கூடிய நல்ல படங்களை கொடுத்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அஞ்சாமை’. திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். 


எப்போதுமே அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளாக இருந்து வரும் நீட் தேர்வை மையப்படுத்தி உருவாகியுள்ள முதல் படம் என்பதாலோ என்னவோ படம் வெளியான நாளிலிருந்தே பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் தமிழகத்திற்கு  நீட் தேர்வு வேண்டாமென தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.   


இந்தநிலையில் சமீபத்தில் சில அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ‘அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரவித்துள்ளனர்.


*திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறும்போது*, “நீட் தேர்வு கொடுமைகளை பற்றி விவரிக்க கூடிய, எதார்த்தமான உண்மையான நிகழ்வுகளை கூட்டாமல் குறைக்காமல் சமூகத்தில் நடப்பதை அப்படியே ‘அஞ்சாமை’ திரைப்படத்தில் இரண்டு மணி நேரத்தில் காட்டி இருக்கிறார்கள். ஒரு தேர்வு என்பது எந்த அளவு முரட்டுத்தனமாக, சமூக விரோதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய உள்நோக்கம் கொண்டவர்கள் இன்றைக்கு விடாப்பிடியாக நடத்திக் கொண்டிருப்பதிலே, எத்தனை சூழ்ச்சிகளை கையாளுகிறார்கள் என்பதையெல்லாம் நடைமுறை எதார்த்தமாக கொஞ்சம் கூட மிகைப்படுத்தாமல், தந்தை பெரியாரின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் உண்மையை அதன் நிர்வாணத்தன்மையில் அப்படியே எடுத்து காட்டி இருக்கிறார்கள்.


சில நேரங்களில் உண்மை கசப்பாக இருக்கும். மற்றவர்களால் செரிமானம் செய்யப்பட முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை எப்போதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர உண்மை கலப்படமாக இருக்க முடியாது என்பதை ‘அஞ்சாமை’ படம் மூலமாக அஞ்சாமல் செய்திருக்கும் தயாரிப்பாளரின் அஞ்சாமையை முதலில் பாராட்ட வேண்டும். அவர் ஒரு மனோ தத்துவ மருத்துவர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்களையும் நடப்புகளையும் இணைத்து இருக்கிறார். இது வெறும் படம் மட்டுமல்ல.. மாணவர் உலகத்திற்கு மட்டுமல்ல சமூகத்தின் கோணல்களை திருத்தக் கூடிய ஒரு அற்புதமான பாடம்” என்று கூறினார்.


*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறும்போது*, “அஞ்சாமை என்கிற படத்தின் பெயரே ஒரு சிறப்பு வாய்ந்த பெயர். இன்று நாடு முழுவதும் ஒரு பெரும் விவாதத்தில் இருந்து கொண்டிருப்பது நீட் நுழைவுத் தேர்வு அடுத்ததாக நெட் தேர்வு. எல்லாவற்றையுமே ரத்து பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் துன்பங்கள், துயரங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி எத்தனை பேர் மடிந்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நிகழ்ந்து கொண்டிருக்கிற சம்பவங்களை, மிக எதார்த்தமான முறையில் படமாக்கி மக்களிடம் காட்டுவதற்கு உள்ள ஒரு துணிச்சலான முயற்சி இது. இந்த படத்தில் அச்சப்படாமல் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும் துணிச்சலாக படத்தை இயக்கிய இயக்குனருக்கும் இதில் நடித்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இதில் நடித்தவர்கள் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதுதான் இந்த படத்தின் வெற்றியே” என்று கூறினார்.


*காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சு.திருநாவுக்கரசர் கூறும்போது*, “இது ஒரு துணிச்சலான தயாரிப்பு. இன்றைக்கு சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை தவறுகளை வெளிச்சம் போட்டு சுட்டிக் காட்டும் விதமாக இந்த படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வால் எப்படி சாதாரண குடும்பங்கள், அதுவும் குறிப்பாக கிராமத்தில் இருக்கும் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களில் இருந்து குழந்தைகள் வரை எந்தவிதமான சிரமங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், பொருளாதார ரீதியாக என்னென்ன கஷ்டங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது, நீட் தேர்வுக்கு செல்லும் முன் அதற்காக தயாரிப்பு என்கிற பெயரிலே எப்படி சுரண்டல் நடக்கிறது, அதற்காக சாதாரண குடும்பங்கள் எவ்வளவு கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது, பள்ளித் தேர்வில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகும் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போவது என இன்றைக்கு சமுதாயத்தில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே படம் பிடித்து வெட்ட வெளிச்சமாக காட்டி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசாங்கம் இந்த படத்தை உற்சாகப்படுத்த வேண்டும். இந்த படத்தை கீழ்மட்ட மக்கள் வரை பார்க்கும் விதமாக அரசே ஏற்பாடு செய்து உதவலாம். நீட் தேர்வுக்கான கஷ்டங்களிலிருந்து எப்படி விடுவது என்பதை திட்டமிடுவதற்கும் அவர்களுக்கு இதுபோன்ற பொருளாதார நஷ்டங்கள் நடக்காமல் தடுப்பதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு இந்த படம் முன்னுதாரண படமாக இருக்கும்” என்று கூறினார்.


*அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன் கூறும்போது* ‘அஞ்சாமை’ திரைப்படம் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. நீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே குரல் கொடுக்கிற மாநிலம் தமிழ்நாடு. அந்த அளவிற்கு நீட்டை வேண்டாம் என மறுதலித்து பிளஸ் டூ தேர்வுகளின் மூலமாகவே மருத்துவ கல்வியை தொடர வேண்டும் என்கிற கருத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ‘அஞ்சாமை’ என்கிற படத்தை மருத்துவர் திருநாவுக்கரசு மற்றும் இயக்குனர் சுப்புராமன் இருவரும் ஒரு சிறந்த கலைப்படைப்பாக தந்திருக்கிறார்கள். இவ்வளவு பணம் செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்களே, இதை யார் பார்ப்பார்கள், போட்ட பணம் திரும்பி வருமா வராதா என ஆயிரம் சந்தேகங்கள் எழுந்து நிலையிலும் கூட பெரியார் சொல்வது போல “கேட்கிறான் கேட்கல.. படிக்கிறான் படிக்கல.. ஆனால் நாம் கடமையை செய்ய வேண்டும்” என்பதற்கு ஏற்ப தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்கிற உயர்ந்த இலக்கோடு இந்த படத்தை தயாரித்திருக்கிறார் மருத்துவர் திருநாவுக்கரசு. நீட் தேர்வுக்கான ஒரு பிரச்சார யுத்தத்தை இந்த படம் தொடங்கி வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு திரைப்படத்தின் மூலம் அழுத்தமான, ஆழமான கருத்துக்களை எடுத்து வைக்க முடியும் என்று நீட்டுக்கு எதிரான முதல் திரைப்படமாக இதை நாம் பார்க்கலாம். அந்த வகையில் நீட் தேர்வை ரத்து செய்யும் அளவிற்கு இந்த படம் கொண்டு செல்லும். இந்த படைப்பின் மூலமாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.


*சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி கூறும்போது*, “’அஞ்சாமை’ படம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். அந்த காலத்தில் நாம் பார்த்த, கேட்ட செய்திகளை தொகுத்து அந்த செய்திகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல், அந்த நிகழ்வுகளில் வழியாக பாதிக்கப்பட்ட மக்கள், மாணவர்கள் என்று பல தரப்பினருடைய துயரங்களையும் அவர்களுடைய கோரிக்கைகளையும் நியாயங்களையும் தொகுத்து ஒரு சிறந்த திரைப்படமாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிகச் சிறந்த வகையில் மக்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய ஒரு திரைப்படமாக இந்த அஞ்சாமை உருவாகி இருக்கிறது. இயக்குநர் சுப்புராமன் மிக கவனமாக இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடிய வகையில் மட்டும் மட்டுமல்ல, பொழுதுபோக்கிற்காக பார்க்கக் கூடியவர்கள் கூட இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், மாணவர்கள் எதை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு சமூக அக்கறையோடு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்,


சமூகப் பிரச்சினைகளை பேசுகின்றதால், கருத்துக்களை சொல்கின்ற படமாக இருக்குமோ, ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காதோ என்பதற்கே இதில் இடம் இல்லை. இப்படியான ஒரு திரைப்படம் பெருமளவில் மக்களிடம் சென்று சேர வேண்டும். மக்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும். தன்னுடைய முதல் படத்தில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர் சுப்புராமனுக்கும் படத்தை தயாரித்த மருத்துவர் திருநாவுக்கரசு அவர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் தமிழில் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட வேண்டிய ஒரு திரைப்படமாக ஒரு தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்கிற வகையில் இது ஒரு மிக மிக முக்கியமான திரைப்படம்” என்று கூறினார்.

No comments:

Post a Comment