Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Monday, 17 June 2024

கல்வித்துறையில் ஒரு மாற்றம் வருவதற்கான விதையை போட்டுள்ளது

 *”கல்வித்துறையில் ஒரு மாற்றம் வருவதற்கான விதையை போட்டுள்ளது ‘அஞ்சாமை’” ; இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பெருமிதம்* 





*”‘அஞ்சாமை’ திரைப்படம் நியாயத்தை பேசுகிறது” ; இயக்குநர் பேரரசு பாராட்டு* 


தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளையும் நல்ல படைப்பாளிகளையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செவ்வனே செய்துவரும் நிறுவனம்  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்தவகையில் கடந்த ஜூன்-7 ஆம் தேதி ‘அஞ்சாமை’ திரைப்படத்தை வெளியிட்டது. திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.. 


விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். 


நீட் தேர்வை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் நீட் தேர்வு அவசியமா, இல்லையா என்பதை விட அந்த தேர்வால் மக்கள் நடைமுறையில் எந்த அளவுக்கு பாதிப்புகளை சந்திக்கிறார்கள் என ஒரு சாமானியனின் வலியை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் சுப்புராமன். அதனாலேயே படம் வெளியான நாளில் இருந்து பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. 


இந்தநிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்காக இந்தப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்த இயக்குநர்கள், உதவி இயக்குனார்கள் அனைவரையும் நெகிழ வைத்து விட்டது ‘அஞ்சாமை’.


படம் பார்த்துவிட்டு இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கூறும்போது, “மிக அற்புதமான படம். விதார்த் தன் குழந்தையை படிக்க வைப்பதற்காக வேலையை விட்டுவிட்டு அதன்பின் வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதன் மூலம் எதிர்காலத்தில் கல்வித்துறையில் ஒரு மாற்றம் வருவதற்கான விதையை போட்டுள்ளார் என்று சொல்லலாம். திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதிற்குள் ஒரு விஷயத்தை ஏற்றும் முயற்சியை சிறப்பாக செய்த விதார்த், வாணி போஜன் மற்றும் இதில் நடித்த அந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.


நாயகன் விதார்த் பேசும்போது, “என்னை வழிநடத்திக் கொண்டு இருக்கும் குருக்கள் நீங்கள் தான்.. இன்று நல்ல நடிகன் என நான் பேசப்படுகிறேன் என்றால் நீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நீங்கள் எல்லாம் ஆதரிக்க கூடிய ஒரு இடத்தில் நல்ல படத்துடன் நான் வந்திருப்பது சந்தோஷம். இதுநாள் வரை நான் நடித்த படங்களிலேயே நான் ரொம்பவே பெருமைப்படக்கூடிய படம் ‘அஞ்சாமை’ தான். இயக்குநர் சுப்புராமனிடம் இருந்த கதைகள் எல்லாமே கமர்சியலான கதைகள். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு என்னுடைய முதல் படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என இப்படி ஒரு படத்தை கொடுத்துள்ளார். அதற்கே அவருக்கு ஒரு மிகப்பெரிய நன்றி.


இந்தப் படத்திற்கு ஆதரவு கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற படங்களை எடுக்க வேண்டும் என நீங்கள் இன்னும் ஆர்வமுடன் முன் வருவீர்கள் என நாங்கள் அனைவருமே நம்புகிறோம். அந்த நம்பிக்கை வீண் போகாது என்றும் நினைக்கிறேன். இப்படி ஒரு படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. இந்த படத்தைப் பார்த்துவிட்டு அரசியல்வாதிகள் மிகப்பெரிய ஆதரவு தருவார்கள் என்கிற விதமாக பத்திரிகையாளர்கள் இந்த படத்தை கொண்டு சென்றார்கள். அப்படி ஒரு முக்கியமான அழைப்பிற்காக தான் தயாரிப்பாளர் சென்றுள்ளார். இந்த நேரத்தை விட்டு விடக்கூடாது.. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம்” என்று கூறினார்.


இயக்குநர் பேரரசு பேசும்போது, “ஒரு சுற்றுலா சென்று வந்தாலே நாம் எவ்வளவு அவஸ்தைப்படுகிறோம். ஒரு தேர்வு எழுதுவதற்கான அந்த அலைச்சல் இன்னும் ரொம்பவே கஷ்டம். அரசாங்கத்திற்கு இது தெரிய வேண்டும். அவரவர் மாநிலத்தில் அவரவர் தேர்வு எழுத வழி செய்ய வேண்டும். தமிழ்நாடு இதை ஏன் அனுமதிக்கிறது ? இங்கே ஏன் தேர்வு மையம் ஒதுக்கவில்லை ? இங்கே இடம் இல்லையா ? இதே கேள்வியை மாநிலத்தை நோக்கியும் வைக்கிறார் இயக்குனர். எல்லா கேள்விகளும் நியாயமான கேள்விகள் தான்.. இந்த படம் நியாயத்தை பேசுகிறது. நியாயத்தை வலியுறுத்துகிறது. இந்த நியாயத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment