Featured post

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai

 Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai* The team of ‘Bethlehem Kudumba Unit’ recent...

Tuesday, 25 August 2026

தமிழ் திரைப்படத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள்

 *தமிழ் திரைப்படத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள்*







*மரியாதைக்குரிய தமிழ்நாடு அரசிற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும்,*


பொருள்: செப்டம்பர் 1 முதல் திரைப்படப் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து சுகமான தீர்வு காண தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கும் வேண்டுகோள்.


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சிரமங்களை திரைப்படத் தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சி (FEFSI) நன்கு உணர்ந்து வருகிறது. தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இருந்தது இல்லை.


சமீபத்தில் திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டைத் தீர்ப்பதற்காக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்த தமிழ் திரைப்பட  தயாரிப்பாளர் சங்கம் , தமிழ் திரைப்பட  நடப்பு தயாரிப்பாளர் சங்கம்  படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் கூட செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது தான் எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது


திரைப்படப் படப்பிடிப்புகள் மற்றும் பணிகள் நிறுத்தப்படும்போது, அதன் நேரடி பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல; தினசரி வேலைவாய்ப்பை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏற்படுகிறது.


கடந்த காலங்களில் திரை உலகின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படப் பணிகள் நிறுத்தப்பட்டதன் பின் விளைவுகள் என்னவாக இருந்தது என்பதை இங்கே எடுத்துச் சொல்வது அவசியம் என்று நினைக்கிறோம் 


குறிப்பாக, 2023ஆம் ஆண்டு திரு. விஷால் அவர்கள் தலைவராக இருந்த காலகட்டத்தில், சுமார் 45 முதல் 50 நாட்கள் வரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட திரைப்படப் பணிகள் நிறுத்தப்பட்டன. அப்போது தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையே அரசின் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் மூலம் பல முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டன.


ஆனால், எந்த முடிவுகளை எடுப்பதற்காக அப்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டனவோ, அந்த முடிவுகளில் பல இன்றளவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்கிறது என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.


ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் ஏற்படும் போதும் முதலில் படப்பிடிப்புகளை நிறுத்துவது, அதன் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்துவது, சில முடிவுகளை எடுப்பது, ஆனால் அந்த முடிவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் போவது என்ற நிலை தொடர்ந்தால், அது ஒட்டுமொத்த திரைப்படத் துறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


அப்படி செயல்படுவதின் காரணமாக ஒவ்வொரு முறையும் தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள்; திரைப்படத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள்; ஒட்டுமொத்த திரைப்படத் துறையும் பாதிக்கப்படுகிறது.


திரைப்படப் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்போது தினசரி வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உடனடியாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களைச் சார்ந்து வாழும் குடும்பங்களும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகின்றன என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


திரைப்படத் தொழில் என்பது தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மேக்கப் கலைஞர்கள், ஆடைத் தொழிலாளர்கள், லைட்மேன்கள், செட் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்தத் துறையுடன் இணைந்துள்ளது.


எனவே, தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள செப்டம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் நிறுத்தும் முடிவை தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுமாறு ஃபெப்சி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து, அரசின் முன்னிலையில் ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றும் ஃபெப்சி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 


இந்தப் பேச்சுவார்த்தையின் போது இப்போது சினிமாவில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் பற்றி பேசி முடிவு எடுத்து விட்டால் திரைத்துறை இன்னும் கூட வேகமாக செயல்பட அது உதவும்


பேச்சுவார்த்தை நடத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், அந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தெளிவான காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்தால் தான் இந்த பேச்சுவார்த்தைக்கான பலன்கள் முழுமையாக திரை உலகிற்கு கிடைக்கும்.


ஏற்கனவே அரசின் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க, இந்த முறை எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு தெளிவான செயல்திட்டமும் உருவாக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.


திரைப்படத் துறையைப் பற்றியும், திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பற்றியும் நன்கு அறிந்த தற்போதைய முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப்  விஜய் அவர்கள், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தையும், திரைப்படப் பணிகள் நிறுத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஃபெப்சி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


வேலைநிறுத்தம் என்பது எந்தப் பிரச்சினைக்கும் உடனடியான தீர்வாக இருக்க முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், எடுக்கப்படும் முடிவுகளை முறையாக நடைமுறைப்படுத்துவதுமே திரைப்படத் துறையின் நீண்டகால நலனுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது ஃபெப்சியின் உறுதியான கருத்தாகும்.


எனவே, தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகள் பாதுகாக்கப்படுவதோடு, திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வகையில், தமிழ்நாடு அரசு, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


திரைப்படத் துறை என்பது பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மிகப்பெரிய தொழில்துறையாகும். எனவே, இந்தப் பிரச்சினை மேலும் நீடிக்காமல், திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், செப்டம்பர் 1 முதல் அறிவிக்கப்பட்டுள்ள படப்பிடிப்புகள் உள்ளிட்ட திரைப்படப் பணிகள் நிறுத்தப்படும் முடிவை தயாரிப்பாளர் சங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஃபெப்சி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், தமிழ்த் திரைப்படத் துறையின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அனைவரும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்போம்.


அன்புடன்,


ஃபெப்சி (FEFSI)

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்

No comments:

Post a Comment