Featured post

We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt

 We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt acclaim at the prestigious 14th DSPFF-24. ...

Monday 16 August 2021

சுதந்திர தின நிகழ்வில் சமூக சேவைக்கான மாநில

 சுதந்திர தின நிகழ்வில் 

சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது பெற்ற அரவிந்த் ஜெயபால் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான முதல்வரின் மாநில அளவிலான இளைஞர் விருது சென்னையைச் சேர்ந்த சமூக சேவகரும், ரெயின்ட்ராப்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான அரவிந்த் ஜெயபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.  


பல்துறை சார்ந்த இளைஞர்களின் துணை கொண்டு ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பை வழிநடத்திச் செல்லும் அதன் நிறுவனர் அரவிந்த் ஜெயபால், கடந்த 10 ஆண்டுகளாக சமூகத்தின் பல தரப்பட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார். மேலும் ஊடகங்கள் மற்றும் பல்வேறு கலை சார்ந்த நிகழ்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மக்கள் நெஞ்சங்களில் விதைத்து வருகிறார். இந்த அமைப்பு தொடங்கப்பட்ட காலம் முதலே கடந்த ஒரு சதாப்தமாக ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா உள்ளார். 




மாற்றுத் திறனாளிகளுக்கு கடல் அலையில் கால் நனைக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் ரீச் தி பீச் திட்டம், சமூக நற்பணியை முன்னிறுத்தி வெளியிடப்படும் வருடாந்திர காலண்டர், பெண் சாதனையாளர்களை ஆண்டுதோறும் கவுரவிக்கும் சாதனைப் பெண்கள் விருதுகள் சாலையோரம் பசித்திருக்கும் ஏழை எளியவர்களுக்கு உணவளிக்கும் விருந்தாளி திட்டம், சமூக அக்கறையுடன் கூடிய மாணவர்கள் பிரிவு மற்றும் மருத்துவ பிரிவின் குறிப்பிடத்தக்க பெரு முயற்சிகள் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் மற்றும் அவரது குழுவினரின் சீரிய பணிகளுக்கு சான்றுகளாக உள்ளன. 


குறிப்பாக கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழை, எளிய குழந்தைகள் சுமார் 700-க்கும் மேற்பட்டோருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க உதவி புரிந்துள்ளார். வானமே எல்லை என்ற நிகழ்ச்சியின் மூலம் விளிம்பு நிலையில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கும் விண்ணைத் தொடும் ஆவலை உண்டாக்க விமானத்தில் அழைத்துச் செல்லும் திட்டத்தை பல ஆண்டுகளுகளாக செயல்படுத்தி வருகிறார். சமூக ஏற்றத் தாழ்வுகளை புறம் தள்ளும் நோக்கில் பெரும் தொழிலதிபர்கள், சாதனையாளர்களுடன் ஏழை குழந்தைகள் கைக்கோர்த்து நடை போடும் ராம்ப் வாக் நிகழ்ச்சியும் இவரது எண்ணத் தூரிகையில் உருப்பெற்றதாகும். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 கின்னஸ் சாதனைகளை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு நிகழ்த்தியுள்ளது.  


கடந்த 2011-ம் ஆண்டு ஆக 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த வகையில் இந்த அமைப்பானது இன்றுடன் தனது 10 ஆண்டு கால சேவையை நிறைவு செய்திருப்பது சிறப்புக்குரியது. தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பலரும் பல்வேறு தருணங்களில் ரெயின்ட்ராப்ஸ் அமைப்புடன் இணைந்து சமூக நலத் திட்டப் பணிகளை செய்து வருகின்றனர். சமூகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளும், பொறுப்புணர்வுமிக்க தொழிலதிபர்களும் கூட அரவிந்த் ஜெயபால் தலைமையில் இயங்கும் இந்த இளைஞர் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு ஆக்கபூர்வமான பல சமூக முன்னேற்றப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழை எளிய குழந்தைகளின் இலவசக் கல்விக்கு உதவுவதோடு அவர்தம் கனவுகளுக்கு வெளிச்சம் தரும் கலங்கரை விளக்கமாக ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு இருப்பதில் மகிழ்ச்சி என்கிறார் அரவிந்த் ஜெயபால். முதல்வரின் இளைஞர் விருது பெறும் அவருடன், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பசுருதீன், நீலகிரியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், திண்டுக்கல்லைச் சேர்ந்த மகேஸ்வரி, கடலூரைச் சேர்ந்த ஜெனிபர், சென்னையைச் சேர்ந்த  மீனா ஆகியோருக்கும் இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment