Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Monday, 21 November 2022

என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன்

 *என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன் ; சசிகுமார் திட்டவட்ட அறிவிப்பு*


*காரி இயக்குநருக்கு பரிசாக கார் வேண்டாம்.. கார்த்தி படம் கொடுங்கள் ; தயாரிப்பாளரிடம் சசிகுமார் வேண்டுகோள்*


*வெடிகுண்டு நடிகர் ; ரெடின் கிங்ஸ்லிக்கு வில்லன் நடிகர் வழங்கிய பட்டம்*


*டூவீலரே ஓட்ட தெரியாது..  ஆட்டோ ஓட்ட வைத்து விட்டார்கள் ; பதறிய ரெடின் கிங்ஸ்லி*


*‘காரி’ ரிலீஸ் தேதியில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு சசிகுமார் தரப்போகும் பரிசு*


*ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு ? ; அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ‘காரி’ பட இயக்குநர்* 


*எத்தனை தடை போட்டாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது ; சசிகுமார் ஆவேசம்*


*குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்து ; இளம் நடிகைக்கு சசிகுமார் அட்வைஸ்*


பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.


வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்காதிருந்த சமயத்தில் தான் இந்த கதையை இயக்குனர் ஹேமந்த் என்னிடம் கூறினார். இந்த கதையை கேட்டதும் எப்படியாவது இதை படமாக எடுத்துவிட வேண்டும் என முடிவு செய்தோம். அதன்பிறகு தமிழக இளைஞர்களின் புரட்சி மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. சசிகுமாருக்கு என்றே அளவெடுத்து தைக்கப்பட்ட ஒரு சட்டை போல இந்த கதையும் கதாபாத்திரமும் அமைந்துவிட்டது. 


காளைகள், குதிரைகளை வைத்து மிகுந்த சிரமத்திற்கு இடையே தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். அதிலும் மைசூர் எடுக்கப்பட்ட காட்சிகளில் பெரும்பாலும் ரேஸ் குதிரைகளை வைத்தே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.  சமீப காலமாக நம் நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக சில விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ஆனால் அதை தடுத்து, நம்பிக்கை கொடுக்கும் விதமாக இந்தப்படம் இருக்கும்” என்று கூறினார்.


நடிகர் பிரேம் பேசும்போது, “என்னுடைய கதாபாத்திரம் குறித்து சொன்னதுமே இந்த படத்தில் நான் நடிக்க வேண்டுமா என முதலில் தயங்கினேன். ஆனாலும் இந்த துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து தான் பார்ப்போமே என முடிவெடுத்து ஒப்புக்கொண்டேன்.. ரேஸ் குதிரை ஓட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.. மைசூரில் இந்த காட்சிகளில் நடித்தபோது ரொம்பவே சிரமப்பட்டுத்தான் படமாக்கினோம்” என்று கூறினார்.


ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா பேசும்போது, ‘தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் முழுமையாக இந்த படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். இயக்குனர் வசந்தபாலனுக்கு அடுத்து விஷுவலாக கதை சொல்லும் இயக்குனராக ஹேமந்த்தை தான் பார்க்கிறேன். அதற்கு இமான் தனது பின்னணி இசையால் உயிர் கொடுத்துள்ளார் நடிகை பார்வதி அருண் இன்டர்வெல் பிளாக் காட்சியில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நிஜமாகவே உயிரை கொடுத்து நடித்துள்ள ஜல்லிக்கட்டு வீரர்கள் காட்சிகளை எதார்த்தமாக படமாக்க உதவினார்கள்” என்றார்.


படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் பேசும்போது, “தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிய படம் காரி. இந்த படத்திற்கு கச்சிதமான இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் அமைந்துவிட்டது. சில உண்மைகளை சிலர் பேசினால்தான் சரியாக இருக்கும். இந்த படத்தில் பேசப்படும் விஷயங்களை சசிகுமாரால் தான் பேச முடியும். இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது” என்று கூறினார்.


நடிகர் நாகிநீடு பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக மாறிமாறி நடைபெற்றது. எனக்கு சரியான நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அதை புரிந்துகொண்ட சசிகுமார் எனக்கு படம் முழுவதும் தனது ஆதரவை கொடுத்தார். என்னுடன் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லியை வெடிகுண்டு என்று தான் சொல்வேன். காரணம் நான் சீரியசாக பேசிக்கொண்டிருக்கும்போது ரெடின் கிங்ஸ்லி வெடிகுண்டு வீசுவது போல ஏதாவது ஒன்றை பேசிவிடுவார். அதன்பிறகு அவரைப்பற்றி விசாரித்த பின்னர் தான் அவர் எல்லா படங்களிலும் இதே மாதிரிதான் பண்ணிக்கிட்டு வர்றார் என்பது தெரிந்தது” என்று கூறினார்.


நடிகை அம்மு அபிராமி பேசும்போது, “சசிகுமார் படம் மட்டுமல்ல.. அவரும் கூட ரொம்பவே எதார்த்தமான மனிதர் தான்” என்று கூறினார்.


ஆடுகளம் நரேன் பேசும்போது, “சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு சசிகுமாருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். நான் பொதுவாக எந்த இயக்குனரிடமும் முழு கதையும் கேட்க மாட்டேன். ஆனால் இயக்குனர் ஹேமந்த் என்னிடம் மூன்று மணி நேரம் இந்த கதையை கூறினார். அந்த அளவிற்கு படத்தில் நடிக்கும் அனைவருமே படத்தின் முழு கதையையும் தெரிந்திருக்க வேண்டும் என அவர் நினைத்தார்” என்று கூறினார்.


நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசும்போது. “எனக்கு டூவீலரே சரியாக ஓட்டத்தெரியாது. ஆனால் இந்த படத்தில் என்னை ஆட்டோ ஓட்ட வைத்து விட்டார்கள். அதிலும் சசிகுமார், நாயகி பார்வதி அருண் இருவரையும் வைத்து நான் ஆட்டோ ஓட்ட வேண்டும்.. பயந்துகொண்டே தான் ஆட்டோ ஓட்டினேன்.. லவ்டுடே படம் எப்படி பெரிய வெற்றி பெற்றதோ அதேபோல இந்த படமும் வெற்றி பெறும்” என்றார்.


நடிகை பார்வதி அருண் பேசும்போது, “ஆரம்பத்தில் சசிகுமாரை பார்த்து பயந்தேன். ஆனால் போகப்போக படப்பிடிப்பில் எனக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் வசதி ஏற்படுத்தி தந்தார் சசிகுமார். இயக்குனர் என்னிடம் கேட்கும்போதே மாடு பிடிக்குமா என்றுதான் கேட்டார். நானும் பிடிக்கும் என்று தலையாட்டி விட்டேன். எல்லோரும் குறிப்பிட்டு சொன்னது போல அந்த இடைவேளை காட்சி மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.


இசையமைப்பாளர் இமான் பேசும்போது, “திரையுலகில் என்னுடைய 20ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளேன். இயக்குனர் ஹேமந்த் என்னிடமும் மூன்று மணி நேரம் கதை சொன்னார். அதேபோல எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார். அனைத்து காட்சிகளையும் நம்பகத்தன்மையுடன் பண்ணியிருக்கிறார். பல விஷயங்களை இந்த படம் பேசும். இதில் இடம்பெற்ற சாஞ்சிக்கவா என்கிற பாடல் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த பாடலாசிரியர் லலித் ஆனந்த் எழுதிய கடைசி பாடல் இதுதான். சசிகுமார் நிறைய படங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரொம்பவே அழகாக இருக்கிறார்” என்று கூறினார்.


இயக்குனர் ஹேமந்த் பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமாரை மேன் ஆப் தி ஆக்சன் என்று கூறினால், ஹீரோ சசிகுமாரை மேன் ஆஃப் ட்ரூ வேர்ட்ஸ் என்று சொல்வேன். படத்தின் கதையை கேட்ட சசிகுமார் நீங்க கதை சொன்ன மாதிரியே படமும் எடுத்துட்டா வெற்றிதான் என்று உற்சாகப்படுத்தினார். 


லோக்கல் என்ற வார்த்தையை மோசமான வார்த்தையாக நினைக்கவேண்டாம் லோக்கல் என்றால் நேட்டிவிட்டியை குறிக்கும்.. எவ்வளவு நேட்டிவிட்டியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு மதிப்பு இருக்கும். ஆனால். இப்போது அந்த நேட்டிவிட்டியை தகர்க்கும் விதமாக தான் பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுக்கு தடை விதிக்க முயற்சிப்பது. 


ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு என்றால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும்தான் இளைஞர்கள் இன்னும் கலாச்சாரம் தொடர்பான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை திசை திருப்புவதற்காகத்தான் ஜல்லிக்கட்டு தடை போன்ற விஷயங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த படத்தில் மனிதர்களின் நம்பிக்கை, உறவு சிக்கல்கள் ஆகியவற்றை கூறியுள்ளோம். மொத்தத்தில் இந்த படம் எமோசனல் ஆக்சன் ட்ராமாவாக இருக்கும்” என்றார்.


நாயகன் சசிகுமார் பேசும்போது, “இது எனக்கான கதை.. என் மண்ணின் கதை.. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம் தான் பண்ணுவேன்.. அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்..? என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயற்சித்தேன் அது முடியவில்லை. லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. 


அம்மு அபிராமி இந்த படத்தில் மிக அருமையான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்னைக் கேட்டால் அவர் இதுபோன்று நிறைய கேரக்டர் ரோல்களில் நடிக்க வேண்டும். ஏனென்றால் இப்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் நடிகைகள் ரொம்ப குறைவாகவே இருக்கிறார்கள். 


இதில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஜேடி சக்கரவர்த்தி, நான் ரிஸ்க் எடுத்து நடித்த காட்சிகளை பார்த்துவிட்டு, என்னை அழைத்து முதலில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் என அறிவுரை கூறினார்.


இந்த படத்தின் மூலம் ஒன்பதாவது முறையாக புதிய இயக்குனரை அறிமுகப்படுத்துகிறேன். ஹேமந்த் நிச்சயமாக மிகப்பெரிய இயக்குனராக வருவார். இந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் இயக்குனர் ஹேமந்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். 


படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாக, பக்கபலமாக இருந்தனர். அவற்றையும் மீறி ஒரு சில சமயங்களில் ஜல்லிக்கட்டு காளை மோதலில் இருந்து மயிரிழையில் தப்பித்தேன். இதில் நடித்ததற்காக அவர்கள் கேட்ட ஒரே பரிசு இந்த படம் வெளியாகும்போது முதல்நாள் மதுரையில் அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பது தான்.. ரிலீஸ் நாளன்று அவர்களது ஆசையை நிறைவேற்ற போகிறேன்..


ஜல்லிக்கட்டு மீது தடைகேட்டு யார் எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை.. எதிர்ப்பவர்கள்தான் அதன்மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்த படத்தில் பதினெட்டு வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கிறோம். என்னுடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.


முன்பெல்லாம் விஜயகாந்த் சார் படப்பிடிப்பிலும் அவரது அலுவலகத்திலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சுவையான சாப்பாடு வழங்கப்படும். அதை கேள்விப்பட்டு நான் என்னுடைய தயாரிப்பில் படங்கள் தயாரித்தபோது அதேபோல பின்பற்றினேன். நீண்டநாளைக்கு பிறகு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் படப்பிடிப்பில் அதேபோன்று எல்லோருக்கும் சரிசமமான சிறப்பான சாப்பாடு வழங்கப்பட்டதை பார்த்தேன்.. காலம் கடந்தும் இது பேசப்படும்.. ஒரு படத்தில் நடித்தபோது சாப்பாடு சரியில்லை என்று அதன் தயாரிப்பாளரிடம் என் சம்பளத்தில் கூட கொஞ்சம் பிடித்துக்கொண்டு அதற்கு பதிலாக நல்ல சாப்பாடு போடுங்கள் என்று கூறினேன். அவர் நல்ல சாப்பாடும் போடவில்லை.. என்னுடைய சம்பளத்தையும் கொடுக்கவில்லை. 


இது மக்களுக்காக எடுத்த படம்.. ஜல்லிக்கட்டு பற்றிய படம்.. அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும்.. அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்ஷனில் படம் இயக்குகிறேன்.. அதற்கான அறிவிப்பை இந்த படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்” என்று கூறினார்.


*தொழில்நுட்ப குழுவினர் விபரம்*


தயாரிப்பு ; பிரின்ஸ் பிக்சர்ஸ் கே.லக்ஷ்மன் குமார்


இயக்கம் ; ஹேமந்த்


இசை ; டி.இமான்


ஒளிப்பதிவு ; கணேஷ் சந்திரா


படத்தொகுப்பு ; சிவநந்தீஸ்வரன்


கலை ; மிலன்


நடனம் ; ஹரி கிரண்


சண்டைப்பயிற்சி ; அன்பறிவு, தினேஷ் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா


பாடல்கள் ; லலித் ஆனந்த், ஹேமந்த்


ஆடை வடிவமைப்பு ; பூர்த்தி பிரவீண்


உடை அலங்காரம் ; பெருமாள் செல்வம்


ஒப்பனை கலைமாமணி வி.சண்முகம்


மக்கள் தொடர்பு ; A.ஜான்


No comments:

Post a Comment