*ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தை 'உலக நாயகன்' கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!*
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'உலக நாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார்.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இப்படத்தில் 'இசை அசுரன்' ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் திவ்யபாரதி, 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை திவிக் எழுத, படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார். கடல் பின்னணியில் திகில் சாகச படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கிரியேட்டிவ் புரொடியூசராக தினேஷ் குணாவும், நிர்வாக தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகமும் பணியாற்றுகிறார்கள்.
படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், '' என்னை போன்ற புதுமுக இயக்குநருக்கு 'கிங்ஸ்டன்' போன்ற கனவு திரைக்கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இந்த படைப்பு குறித்த எனது பார்வையை புரிந்துக் கொண்டு முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கியதற்காக ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியோருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் இதனை சாத்தியமாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என்றார்.
ஜீ.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஜீ ஸ்டூடியோஸின் தென்னிந்திய திரைப்படப் பிரிவின் தலைவர் திரு அக்ஷய் கெஜ்ரிவால் பேசுகையில், '' ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் அவரது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் உடனான இந்த மதிப்புமிக்க படத்தில் எங்களுடைய பரிபூரண ஒத்துழைப்பு இருக்கிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஜீ.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய பன்முக திறமையுடன், கமல் பிரகாஷ் இயக்கத்தில் இந்த திரைப்படத்தை வழங்குவது, எங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. கிங்ஸ்டனின் பிரம்மாண்டமான கதைக்களம் - ஒரு தனித்துவமான உலகில் அதன் பிரம்மாண்டமான தயாரிப்புடன் உருவாகி, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது. ஜீ ஸ்டுடியோஸ்- மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் படைப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். இந்த 'கிங்ஸ்டன்' திரைப்படம் அந்த வரிசையில் உருவாகும் அற்புதமான படைப்பாகும்'' என்றார்.
தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து ஜீ.வி.பிரகாஷ் பேசுகையில், “தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். “கிங்ஸ்டன்” கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது, உடனடியாக தயாரிக்க முடிவு செய்து, பணிகளைத் தொடங்கிவிட்டேன். எப்போதுமே ஒரு படத்துக்கு ஆரம்ப புள்ளி என்பது மிகவும் முக்கியம். அப்படி எனது தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கிவைத்து வாழ்த்து தெரிவித்துள்ள ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தினை என்னுடன் கைகோர்த்து தயாரிக்கவிருக்கும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கும் நன்றி. இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் எனக்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் தேவை” என்றார்.
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் 'கிங்ஸ்டன்' எனும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகிறது என்றும், இந்திய சினிமாவில் முதன்முதலாக கடல் பின்னணியில் திகில் சாகச படமாக இந்த திரைப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் முதல் முதலாக பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனத்தைத் தொடங்கி, அவருடைய 25ஆவது திரைப்படமான 'கிங்ஸ்டன்' படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிப்பதுடன் கதையின் நாயகனாகவும் நடித்து, இசையமைப்பது திரையுலகினரின் கவனத்தை கவர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment