’யாரு போட்ட கோடு’ திரைப்பட விமர்சனம்
அரசு பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் அவர்கள் மனதில் விதைக்கிறார். அதன்படி, ஊரில் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த, அரசு சம்மந்தப்பட்ட மதுபான கடையை அந்த இடத்தில் இருந்து அகற்றுகிறது. இதனால், பார் நடத்தும் வில்லன் லெனின் வடமலைக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதால், ஆசிரியர் பிர்பாகரன் மீது கோபம் கொள்கிறார்.
இப்படி தொடர்ந்து ஆசிரியர் பிரபாகரனின் அதிரடி நடவடிக்கையால், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் லெனின் வடமலை பாதிக்கப்படுகிறார். இதனால், ஆசிரியர் பிரபாகரனை பழிவாங்குவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியை மேஹாலி மீனாட்சியும், பிரபாகரனும் காதலிக்கிறார்கள். அதே சமயம், மேஹாலி மீனாட்சி ஏற்கனவே திருமணமானவராக இருக்கிறார். இந்த விசயம், லெனின் வடமலைக்கு தெரிய வர, இதை வைத்தே ஆசிரியர் பிரபாகரனை பள்ளியில் இருந்து விரட்டியடிக்க திட்டம் போடுகிறார்.
திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனை காதலிப்பது ஏன் ?, வில்லன் லெனின் வடமலை திட்டத்தின்படி நாயகன் பிரபாகரன் பள்ளியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டாரா? ஆகிய கேள்விகளுக்கான விடையை, நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கான தீர்வாக சொல்வதே ‘யாரு போட்ட கோடு’ படத்தின் மீதிக்கதை.
முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக் கொண்டு, சமூக பிரச்சனைகளை பேசும் ஒரு திரைக்கதையை கமர்ஷியலான திரைப்படமாக மட்டும் இன்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் லெனின் வடமலை.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் பிரபாகரன், கிராமத்து ஆசிரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தோற்றத்தில் மட்டும் இன்றி தனது இயல்பான நடிப்பு மூலம் ஆசிரியராகவே வாழ்ந்திருக்கும் பிரபாகரன், முதல் படம் என்ற அடையாளமே தெரியாதவாறு மிக சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக ஊரில் எந்த பிரச்சனை நடந்தாலும், அதை தனது அறிவுரை மூலமாகவே சரி செய்யும் ஆற்றல் படைத்தவராக வலம் வரும் பிரபாகரன், வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்தையும் நேர்த்தியாக கையாண்டு மக்கள் மனதில் வாத்தியாராக இடம் பிடித்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மேஹாலி மீனாட்சி, ஆசிரியை கதாபாத்திரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் குறை இல்லாமல் நடித்திருப்பதோடு, பாடல் காட்சிகளில் வறண்ட நிலத்தை குளிர்விக்கும் அடை மழை போல், பார்வையாளர்களின் மனதுக்கும், கண்களுக்கும் கவர்ச்சி விருந்தும் படைத்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மறைந்த டேனியல் பாலாஜியை நினைவுப்படுத்துகிறார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக உருவெடுப்பது உறுதி.
வில்லன் லெனின் வடமலையின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துகின் சே குவேரா, வியக்கும் வைக்கும் விதத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று நடிப்பில் மிரட்டுகிறார். நீளமான வசனங்களை, உணர்ச்சி பொங்க பேசியிருக்கும் துகின் சே குவேராவுக்கு திரையரங்கில் கைதட்டல் கிடைப்பது உறுதி.
படத்தின் தயாரிப்பாளர் டாக்டர். வினிதா கோவிந்தராஜன் மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் புதியவர்கள் என்றாலும், தங்களது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
செளந்தர்யன் மூன்று
பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்
லெனின் வடமலையின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. ஜெய்குமார்
இரண்டு பாடல்களுக்கு
இசையமைத்து
பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரின், எளிமையான லொக்கேஷன்களை கூட தனது தனித்துவமான கேமரா கோணங்கள் மூலம் பிரமாண்டமாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கும் ஜான்ஸ் வி.ஜெரின், படம் முழுவதும் புது புது லொக்கேஷன்களை தேடிப்பிடித்து படமாக்கியிருப்பது படத்திற்கும் மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
படம் முழுவதும் அறிவுரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இருந்தாலும், அவற்றை பிரச்சாரம் தோணியில் சொல்லி போராடிக்காமல், கமர்ஷியல் படமாக நகர்த்தி, ரசிகர்களை ரசிக்க வைத்து மகிழ்விக்கும் வகையில், படத்தொகுப்பாளர் ஸ்ரீராம், காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் லெனின் வடமலை, முதல் படத்தை வெறும் கமர்ஷியல் படமாக அல்லாமல், மக்களை சிந்திக்க வைக்கும் படைப்பாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் மூலமாக சமூகத்திற்கு அவர் சொல்லும் கருத்துகள் அனைத்தும் வலிமை மிக்கதாகவும், பாராட்டும்படியும் உள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில், அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தாலும், இன்னமும் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, அத்தகையவர்களுக்கு பள்ளி ஆசிரியர் மூலம் அறிவு சாட்டையை சுழற்றியிருக்கிறார்.
சமத்துவம், பெருகி வரும் போதை கலாச்சாரம், தலைக்கவசம் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு அபாரதம் விதிக்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய அவசியமான நடவடிக்கை, காதல் மோகத்தில் சுற்றி திரியும் இளைஞர்களுக்கான புத்திமதி உள்ளிட்ட பல நல்ல விசயங்களை படம் முழுவதும் பேசியிருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, வாழ்க்கைக்கான ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வை பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
குறிப்பிட்ட பட்ஜெட்டில், முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக் கொண்டு, அனைத்து சமூக பிரச்சனைகளையும் ஒரே படத்தில் பேசினாலும், அதை அளவாக சொல்லி, நடிகர்களிடம் சரியான முறையில் வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, பிரச்சனைகளை பிரச்சார பாணியில் சொல்லாமல், திரை மொழியில் கமர்ஷியலாக சொல்லி சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தியிருப்பதோடு, ஒரு தரமான திரை படைப்பாக, சமூக புரட்சியை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்க்க வேண்டிய ஒரு படமாக மட்டும் இன்றி, அனைத்து தரப்பினருக்குமான ஒரு படைப்பாக உருவாகியுள்ள ‘யாரு போட்ட கோடு’ நிச்சயம் பல எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என்பது உறுதி.









No comments:
Post a Comment