அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! - ‘யாரு போட்ட கோடு’ பட இயக்குநர் லெனின் வடமலையில் அதிரடி அப்டேட்
அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’. டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரித்திருக்கிறார். இதில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாக, நடிக்க மேஹாலி மீனாட்சி நாயகியாக நடித்திருக்கிறார். இயக்குநர் லெனின் வடமலை வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக கலைஞர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி திரை பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும், தற்போதைய காலக்கட்டத்திற்கு மிக அவசியமான படமாக இருப்பதாக பாராட்டியதோடு, இப்படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும், என்று தெரிவித்தனர்.
படம் முடிவடைந்த பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்களை சந்திப்பில் பேசிய இயக்குநர் லெனின் வடமலை, “இது எனது முதல் படம், முதல் படம் மக்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். என் தந்தை தமிழ் தேசியவாதி, கம்யூனிஸ்ட், அவர் மூலம் தான் எனக்கு இப்படிப்பட்ட சிந்தனைகள் வந்தது, அதனால் தான் எனக்கு லெனின் என்ற பெயர் வைத்தார். நான் பள்ளி மற்றும் கல்லூரி படித்தது அனைத்தும் அரசு நிறுவனங்களில் தான். அதாவது மக்களில் வரி பணத்தில் தான் படித்தேன். அனைத்து சாதியினரும் வரி செலுத்துகிறார்கள், அனைத்து மதத்தினரும் வரி செலுத்துகிறார்கள். எனவே, என் உடம்பில் மக்கள் இரத்தம் ஓடுகிறது. எனவே அந்த மக்களுக்காக திரைப்படம் மூலம் நல்லதை சொல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம். என் இறுதி மூச்சு உள்ளவரை திரைப்படங்கள் மூலமாக இந்த சமூகத்திற்கும், மக்களுக்கும் எதாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பேன்.
இந்த படத்தை ரூ.5 கோடி பட்ஜெட்டில், பெரிய ஹீரோ ஒருவரை வைத்து தான் எடுப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் படம் எடுப்பது தள்ளி தள்ளி போய் நீர்த்து போய் விட்டது. இதனால் என் உறவினர்கள் நான் படம் இயக்க மாட்டேன், என்று பேச தொடங்கி விட்டார்கள். எனவே, சிறிய பட்ஜெட்டில் படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். அந்த பட்ஜெடுக்காக தான் நான் வில்லனாக நடித்தேன். அறிமுக நடிகர் பிரபாகரனை நாயகனாக நடிக்க வைத்தேன். என்னுடைய அடுத்த படம் பெரிய பட்ஜெட் படமாக தான் இருக்கும். 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் என் அடுத்த படம் எடுப்பேன், ஹாலிவுட் பாணியில் படம் இருக்கும். என் முதல் படம் சாமிக்கு, அதாவது மக்களுக்காக இருக்க வேண்டும், என்பதால் இந்த படம். இந்த படத்தை பார்த்த பிறகு நான் யார் என்பது தெரியும். நீ என்ன புத்தகம் படிக்கிறார் உன்னை பற்றி சொல்கிறேன், என்று சொல்வார்கள். அதுபோல் இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு நான் யார் என்பது தெரியும்.
அரசுக்கு சொல்வதற்கு நிறைய இருக்கிறது, இந்த படத்தில் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லியிருக்கிறேன். என் அடுத்தடுத்த படங்களில் பல விசயங்களை சொல்ல இருக்கிறேன். நான் படத்தில் வில்லனாக நடித்தேனே தவிர, நிஜத்தில் அப்படி இல்லை. என் நடிப்பு மற்றும் தோற்றத்தை பார்த்து, சுமார் 1000 பேர் டேனியல் பாலாஜி போல் இருப்பதாக சொல்லி விட்டார்கள், ஒரு சிறந்த நடிகரோடு என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், அவரை போல் நடிக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லை. கதைக்கு என்ன தேவையோ அதை தான் செய்தேன்.” என்றார்.
படத்தின் நாயகன் பிரபாகரன் பேசுகையில், “இது எனக்கு முதல் படம். சமூகத்திற்கான சிறந்த படைப்பாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தில் பேசப்பட்டிருக்கும் சாதி வேறுபாடு இன்னமும் நம் நாட்டில் இருக்கிறது. பல முன்னோர்கள் அதற்கு எதிராக போராடி அதை குறைத்திருந்தாலும், இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. நாம் தொடர்ந்து போராடினால் மாற்றத்தை கொண்டு வரலாம், அதை தான் இயக்குநர் படத்தில் சொல்லியிருக்கிறார். சாதி பற்றி மட்டும் படத்தில் பேசவில்லை. பல நல்ல விசயங்களை பேசப்பட்டிருக்கிறது. மக்களுக்கான படமாக ‘யாரு போட்ட கோடு’ வந்திருப்பது மகிழ்ச்சி. பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.” என்றார்.
நடிகை மேஹாலி மீனாட்சி பேசுகையில், “கிராமத்து பள்ளி ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் சிறப்பான வேடத்த்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் இயக்குநர் என்ன சொன்னாரோ அதை செய்தேன், படம் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் ஆதரவு வேண்டும், நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் பேசுகையில், “படம் தயாரிக்க வேண்டும், பெரிய தயாரிப்பாளராக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படம் தயாரிக்கவில்லை. எனக்கு சினிமா பின்புலம் கிடையாது, சினிமா அறிவு கூடா இல்லை. டிவி முன்பு கூட உட்காராத ஆள் நான். ஆனால், நான் இன்று ஒரு திரைப்படம் தயாரித்ததற்கு காரணம் இயக்குநர் லெனின் வடமலை தான். அவர் நீண்ட காலமாக படம் இயக்கும் முயற்சியில் இருந்தார், ஆனால், அவரது முதல் படம் என்ன ? என்று பலர் கேட்பார்கள், சரி அவருக்கான ஒரு அடையாளத்தை கொடுப்பதற்காக தான் இந்த படம் தயாரித்தேன்.
திரைப்படம் தயாரிப்பு என்பது மிகப்பெரிய அனுபவம் மட்டும் அல்ல மிகவும் கடினமான வேலையும் கூட. இன்று படத்தை தயாரித்து முடித்திருப்பதே எனக்கு பெரிய வெற்றியாக தெரிகிறது. படம் இப்போது வெளியீடு வரை வந்திருக்கிறது, இதற்காக விநியோகஸ்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இசையமைப்பாளர் ஜெயகுமார் பேசுகையில், “நான் இளையராஜாவிடம் பல வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இந்த படத்திற்கு செளந்தர்யன் இசையமைத்திருக்கிறார். சில காரணங்களால் அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்ட போது, இயக்குநர் என்னை அணுகினார். அவர் சொன்ன சூழலுக்கு ஏற்ப ஒரு பாடல் போட்டுக் கொடுத்தேன், அது நன்றாக இருந்ததால் தொடர்ந்து மற்றொரு பாடலும் கொடுத்தார். ஒரு பாடலை என் மகன் கீர்த்தி வாசன் பாடியிருக்கிறார். பின்னணி இசை அமைப்பதற்கான வாய்ப்பும் எனக்கு கொடுத்தார். மிக மகிழ்ச்சியாக இந்த படத்தில் பணியாற்றினேன். படம் வெற்றி பெற இறவனை பிரார்த்திக்கிறேன், நன்றி.” என்றார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் துகில் சே குவேரா பேசுகையில், “இந்த படத்தில் உதயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் பெயர் சே குவேரா என்பதால் அவரைப் போல் நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த படமும் அவரது கருத்துக்கு ஒத்து இருப்பதால், இதில் நடிக்க எனக்கு மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருந்தது. படத்தில் பல புரட்சிகரமான வசனங்களை பேசி நடித்தது எனக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது. நன்றி.” என்றார்.
செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீராம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தீனா, ராதிகா, சிவாஜி ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கார்த்திக் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார்.
பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாராட்டினால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘யாரு போட்ட கோடு’ டிசம்பர் 12 ஆம் தேதி தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.






No comments:
Post a Comment