*5-வது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போடும் ‘வாரிசு’*
கடந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வெளியானது. தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
மேலும் பல முன்னணி கலைஞர்களுடன் குடும்பப்பாங்கான அதேசமயம் இளைஞர்களை கவரக்கூடிய பாட்டு, நடனம், சண்டை என கமர்ஷியல் அம்சங்களுக்கும் குறைவில்லாமல் இந்தப்படம் உருவாகி இருந்தது. குறிப்பாக ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு ஆகிய பாடல்கள் படம் பார்க்கும் ரசிகர்களை எழுந்து ஆட தூண்டுவதாக இருப்பதை திரையரங்குகளில் பார்க்க முடிகிறது.
அந்தவகையில் பல திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.
அம்பாசமுத்திரம் ஸ்ரீ பாலாஜி திரையரங்கில் இதுவரை வெளியான படங்களிலேயே வாரிசு திரைப்படம் தான் மிக அதிக அளவில் வசூலித்து ஒரு பென்ச் மார்க்கையும் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது.
படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்த நிலையில் இந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்-12) கூட கும்பகோணத்தில் உள்ள வாசு திரையரங்கில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து திரையரங்கிற்குள் நுழைந்ததை பார்க்க முடிந்தது. திரையரங்க வரலாற்றில் சமீப காலமாக நடக்காத ஒரு ஆச்சரிய நிகழ்வு இது. குறிப்பாக ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பம் குடும்பமாக இந்த படத்திற்கு திரளாக வருகை தந்தது ஆச்சரியம் தருவதாக இருக்கிறது என்கிறார்கள் திரையரங்கு நிர்வாகத்தினர்.
சென்னையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் 26 ஆவது நாளில் 3 மணி காட்சி கூட ஹவுஸ்புல் காட்சியாக, அதிலும் 85 சதவீதம் குடும்ப உறுப்பினர்கள் நிறைந்த காட்சியாக நிறைந்து இருந்தது.
திண்டுக்கல்லின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் உமா ராஜேந்திரா சினிமாஸில் 5-வது வாரத்திலும் கூட கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இந்த படத்திற்கு வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள். குறிப்பாக தற்போது திரையிடும் திரைகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டபோதும் கூட இதற்கு முன்பு வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை தாண்டி வாரிசு படம் சாதனை செய்துள்ளது.
திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனத்தினர், வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தை தொடர்கிறது என்றும் ரெக்கார்ட் பிரேக்’கிங்’ என்றும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
வேலூரில் உள்ள விஷ்ணு திரையரங்கில் இந்த படத்தின் 25-வது நாளை ரசிகர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, வட இந்தியாவில் வெளியாகிய வாரிசு படத்தின் இந்தி பதிப்பும் வெற்றிகரமாக 30 நாட்களை கடந்துள்ளது. இப்போதும் கூட ரசிகர்களின் வரவு குறைவில்லாமல் இருப்பதால் நேற்றைய தினம் (பிப்-12) புவனேஸ்வரில் உள்ள சினி போலிஷ் திரையரங்கத்தில் ரசிகர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக சிறப்புக்காட்சியாக நள்ளிரவு காட்சி திரையிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல வடக்கே பல திரையரங்குகளில் இன்று (பிப்-13) திங்கள்கிழமையும் பாதி இருக்கைகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பியுள்ளன.
பிரான்சில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்திற்கு 25வது நாள் கொண்டாட்டம் நடந்துள்ளது என்றால் அது வாரிசு படத்திற்கு தான் என்கிற செய்தி வீடியோவுடன் சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது.
மலேசியாவில் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மூன்றாவது வாரத்தில் இருந்து 10வது இடத்தில் இருந்தாலும் இப்போதும் 30 க்கும் குறையாத காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தரவரிசைப்படி பல திரையரங்குகளில் இன்னும் முதலிடத்தில் தான் வாரிசு திரைப்படம் இருக்கிறது.
விஜய் படங்களிலேயே இரண்டாவது முறையாக உலக அளவில் 300 கோடி வசூலை கடந்த படம் என்கிற பெருமையை பிகில் படத்தை தொடர்ந்து வாரிசு பெற்றுள்ளது. அந்த வகையில் உலக அளவில் 300 கோடிகளை கடந்த ஐந்தாவது தமிழ்ப்படம் என்கிற பெருமையும் வாரிசு படத்திற்கு சேர்ந்துள்ளது.
No comments:
Post a Comment