சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் "Drive Against Drugs" போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !!
இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 300க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியிடப்பட்டது. இவ்விழாவினில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் திரு பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பேசியதாவது..
போதைப்பொருள் நம் சமுகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. மாணவர்களிடம் மிக எளிதாகப் பரவி விடுகிறது. போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு என்பது பொதுவாகவே மக்களிடமும் மாணவர்களிடமும் மிகக் குறைவாக இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டுமென்ற முன்னெடுப்பில், காவல்துறை பல பணிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த குறும்பட போட்டி சிறப்பாக நடந்தேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவினில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. அவருக்கு என் சிறப்பு நன்றிகள். மாணவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான விழிப்புணர்வை அனைவரிடமும் எடுத்துச்செல்ல வேண்டும்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது…
நானும் சின்ன வயசில் போலீஸ் ஆக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளேன், ஆனால் எனக்கு வாழ்க்கை வேறு பாதையைத் தந்துவிட்டது ஆனால் என்னையும் காவல்துறை நண்பர்கள் நெருங்கிய வட்டத்தில் வைத்திருப்பது மிக மகிழ்ச்சி. டிரக்ஸ் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்ன போது ரம்யா மேடமுடன் இந்த மாதிரி குறும்படம் எடுக்கலாம் எனச் சொன்னேன். கமிஷனரும் ஆர்வமாகி நல்ல முறையில் செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அந்த வகையில் இந்த குறும்பட போட்டிக்கு 300க்கும் மேலானவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பினார்கள். போதைப்பொருள் விழிப்புணர்விற்காக பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட படங்களில் 3 படங்களைத் தேர்வு செய்துள்ளோம் அவர்களுக்குப் பரிசளிப்பது மகிழ்ச்சி.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையாக நடக்கும் குறும்பட போட்டி மற்றும் காமிக்ஸ் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை மிக அற்புதமாக நடத்தும் காவல்துறை நண்பர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோருக்கு நன்றி. முக்கியமாக இந்தப் படங்களைப் பார்த்துத் தேர்வு செய்த திரைப்பட இயக்குநர் நண்பர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. சத்யம் தியேட்டரில் நிறையத் திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன் ஆனால் சமீபத்தில் நான் எந்த ஒரு திரைத்துறை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, ஆனால் இது போதைப்பொருளுக்கெதிரான குறும்பட போட்டி என்பதால் உடனே ஒப்புக்கொண்டு வந்தேன். போதைப்பொருளுக்கெதிரான சிறந்த முயற்சி இதை முன்னெடுத்த காவல்துறைக்கு என் பாராட்டுக்கள். விக்னேஷ் சிவன் போன வருடம் உலகம் வியந்து பார்த்த செஸ் ஒலிம்பியாட்டை தொகுத்து இயக்கியவர் அவர் தான். நானும் ரௌடிதான் படமெடுத்தவர் இங்கு இந்த விழாவை ஒருங்கிணைக்கிறார் அவருக்குப் பாராட்டுக்கள். இப்போதெல்லாம் நிறையத் தவறான செய்திகள் வாட்ஸப் மூலம் மிக எளிதாகப் பரவி விடுகிறது. இங்கு இந்த மேடையில் மாணவர்களிடம் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை அறிந்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கான நல்ல செய்தியை இந்த குறும்படங்கள் சொல்கிறது. இதனை உருவாக்கிய அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகள். காவல்துறை இது போல் இன்னும் பல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி பேசியதாவது…
நல்லொழுக்கம் எப்போதும் இன்பத்தைத் தரும் தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும். காவல்துறை சார்பில் நடத்தப்படும் பல்வேறு போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகப் போதைப்பொருள் விழிப்புணர்வு ஆவணப்பட போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தற்கு நன்றி. போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு எப்போதும் ஊக்கமளித்து வரும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்நிகழ்ச்சி திறம்பட அமைய என்னுடன் இணைந்து பணியாற்றிய துணை ஆணையாளர் திரு பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கு நன்றிகள். இக்குறும்பட போட்டியைச் சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு நன்றி. திரைப்படம் மிகச் சக்தி வாய்ந்தது இனி வரும் காலங்களில் உங்கள் படைப்புகளில் போதைப்பொருளைப் பயன்படுத்தாதீர்கள். நமது மாண்புமிகு முதல்வரின் சொல்லுக்கிணங்க போதைப்பொருள் எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் யாருக்கும் வேண்டாம் என்ற உறுதிமொழியை ஏற்போம். அனைவருக்கும் நன்றி.
பரிசு பெற்றவர்கள் விவரம்:
முதல் பரிசு - எழவு - - இயக்குநர் - பிரகதீஸ்
2வது பரிசு - அன்பு - இயக்குநர் கிரிஷாங் பாலநாராயணன்
3வது பரிசு - அன்பின் போதை - இயக்குநர்
ஹேமந்த்
3வது பரிசு - போலீஸ் - இயக்குநர் மனோஜ் கண்ணன்
No comments:
Post a Comment