Featured post

Actress Sreeleela to Feature in Special Song in Allu Arjun Starrer Pushpa

 *Actress Sreeleela to Feature in Special Song in Allu Arjun Starrer Pushpa 2: The Rule! Here comes the poster!* South sensation Sreeleela i...

Saturday 20 January 2024

சிக்லெட்ஸ்' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு

 *'சிக்லெட்ஸ்' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு*




'திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் தமிழ் சினி கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார். 


இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன் போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்களும், நடிகர்களுமான ஆர். வி. உதயகுமார், பேரரசு, 'மஞ்சள் வீரன்' பட இயக்குநர் செல்லம், நடிகரும் தொழிலதிபருமான சூரிய நாராயணன், நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நடிகை அமிர்தா ஹல்தார் இயக்குநர் எம். முத்து, ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார், தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தின் கதை விவாதம் கோவிட் காலகட்டத்திற்கு முன்னர் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மற்றொரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். அப்போது இப்படத்தின் இயக்குநரான முத்து அடிக்கடி என்னை சந்திப்பதுண்டு. அப்போது சிக்லெட்ஸ் படத்தின் கதையை சொல்லி, இப்படத்தை உருவாக்கலாம் என சொல்வார். நான் இதன் திரைக்கதையை வாங்கி என்னுடைய மகள் ஸ்வர்ணா ஸ்ரீயிடம் கொடுத்து படிக்குமாறு சொன்னேன். அவர் இந்த கதையைப் படித்துவிட்டு 2k கிட்ஸ்க்கான  கதையாக இருக்கிறது. இதனை முதலில் தயாரிக்கலாம் என சொன்னார். அதன் பிறகு மீண்டும் இயக்குநர் முத்துவை அழைத்து, இப்படத்தின் கதையை சொல்லச் சொன்னேன். அவரும் கதையை விவரித்து பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு செய்து தரமான படமாக உருவாகி இருக்கிறோம். இந்த படம் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார் . 


நடிகர் சாத்விக் வர்மா பேசுகையில், ''  தமிழ் திரையுலகில்  'சிக்லெட்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகை அமிர்தா ஹல்தார் பேசுகையில், ''  'சிக்லெட்ஸ்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகர் ஜாக் ராபின்சன் பேசுகையில்,'' 'சிக்லெட்ஸ்' திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஆடிசன் வைத்து என்னை தேர்வு செய்து, அதற்குப்பின் வாய்ப்பளித்தார். என்னை தேர்வு செய்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு நிறைய பிரச்சனைகள், தடங்கல்கள் வந்தது. இருந்தாலும் தயாரிப்பாளர் மனம் தளராமல் இப்படத்தை வெளியீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். 


இந்த திரைப்படத்தில்தான் நான் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறேன். இதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறேன். இயக்குநர் முத்து இப்படத்தின் கதையையும், என்னுடைய கதாபாத்திரத்தையும் சொல்லி நிறைய நம்பிக்கையை அளித்தார். இப்படத்தில் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 


'மஞ்சள் வீரன்' பட இயக்குநர் செல்லம் பேசுகையில், '' ஒரு தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கிறார் என்றால்.., அதற்குப் பின்னால் சினிமாவை நம்பி இருக்கும் எத்தனை குடும்பங்கள் வாழ்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். தற்போதுள்ள கடினமான சூழலில் படத்தை தயாரித்திருப்பதற்காக தயாரிப்பாளரை நாம் மனதார பாராட்ட வேண்டும்.  


இயக்குநர் முத்து ஏற்கனவே 'திறந்திடு சிசே' என்ற படத்தினை இயக்கியவர். அதன் பிறகு போராடி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் சிப்பிக்குள் இருக்கிற முத்து அல்ல சினிமாவுக்குள் இருக்கிற முத்து. அவர் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள். 

'' என்றார். 


இயக்குநர் எம். முத்து பேசுகையில், ''புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தின்  ஆன்மா சாந்தியடைய நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம். எங்களுடன் பணியாற்றிய இயக்குநரும், நடிகருமான மனோபாலா மற்றும் மயில்சாமி ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களுடன் இணைந்து பணியாற்றிய இணை இயக்குநரும், புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் விசுவாசியுமான வேலுமணியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 


'சிக்லெட்ஸ்' படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே தருணத்தில் இயக்கி இருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை கிரியேட்டிவ்  புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ படித்ததும் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு இந்த கதை பிடித்ததால், படமாக தயாராகி பிப்ரவரி இரண்டாம் தேதியன்று வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் தமிழ் சினி கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார். தெலுங்கில் எம் ஜி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எம். அச்சு பாபு வெளியிடுகிறார். இவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த திரைப்படத்தின் பணிகளை கோவிட் காலகட்டத்தின் போது தொடங்கினோம். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. 


இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகனான இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, தொடர்பு விமானம் கிடைக்காததால் சரியான நேரத்தில் இங்கு வருகை தர இயலவில்லை. படத்தின் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. 


பெற்றோர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் இருக்கும் அன்பு.. ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இருக்கும் அன்பு.. இந்த அன்பு ஒருவரிடம் சேரும்போது வாழ்க்கையில் தோல்வி இருக்காது. வெற்றி பெறுவோம். ஆனால் அந்த அன்பு தோற்று விட்டால்.. வாழ்க்கையில் தோற்று விடுவோம் ‌. பெற்றோர்களைப் பற்றி பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளை பற்றி பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


டூகே கிட்ஸ் என்றால்... நான் இந்த தலைமுறையை தவறு சொல்லவில்லை‌. தற்போது கலாச்சாரம் மாறி இருக்கிறது. அதற்கேற்பதான் அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரம் மாற மாற அதனால் பாதிப்பை சந்திப்பவர்கள் இளைய தலைமுறையினர் தான். வேறு யாரும் அல்ல. 


பெற்றோர்களாகிய நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஏனெனில் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறை என்பது வேறு. தற்போதுள்ள இளைய தலைமுறையினர் வாழும் வாழ்க்கை வேறு. ‌இதைப் பற்றி ஓப்பனாக பேசப் போனால்.. எங்களுக்கு கிடைத்திருக்கும் சர்டிபிகேட் 'ஏ'. 


இதை ஓப்பனாக யார் பேசுவது? சமுதாயம் பேசாது. ஏனெனில் அதற்கு ஒரு பயம் இருக்கிறது. பிறகு யார் தான் பேசுவது? பெற்றோர்கள் தான் இது குறித்து அவர்களுடைய பிள்ளைகளிடம் பேச வேண்டும். இது செய்.. இது செய்யாதே.. இது சரி.. இது தவறு.. இதை சொல்லக்கூடிய ஒரே உரிமை பெற்றோர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. 


எல்லோருக்குள்ளும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதை வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதற்காக தமக்குள்ளே வைத்துக் கொண்டவர்கள் தான் 80'ஸ் 90'ஸ்  காலகட்டத்தினர். ஆனால் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசுபவர்கள் தான் இன்றைய இளம் தலைமுறையினர். தவறு என்று தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பேசுவார்கள். தவறு என்றால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் மனதில் பட்டதை பேசாமல் அவர்களால் இருக்க முடியாது. 


அவர்களுடைய பேச்சு எப்படி இருக்கும்? அணுகுமுறை எப்படி இருக்கும்? காதல் எப்படி இருக்கும்? காமம் எப்படி இருக்கும்? அவருடைய மனநிலை எப்படி இருக்கும்.  இவை எல்லாவற்றையும் இப்படத்தில் பேசியிருக்கிறோம். அதே சமயத்தில் பெற்றோர்களின் வலியையும் பேசியிருக்கிறோம். 


பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் வாழ்க்கையில் தோற்கக் கூடாது என்று தான் நினைப்பார்கள். அனைத்து பெற்றோர்களின் மனதிலும் இவைதான் இருக்கும். ஆனால் அதை ஒருபோதும் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். 


'எப்படி வேண்டுமானாலும் வாழு. ஆனால் வாழ்க்கையில் நீ சிறந்தவனாக வெற்றி பெற வேண்டும்' என்று சொல்லிப் பாருங்கள். பிள்ளைகளின் மனதிற்குள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 


இந்தப் படத்தில் நாங்கள் ஒரு நல்ல விசயத்தைத்தான் சொல்லி இருக்கிறோம்.


இப்படத்திற்கு பிரபலமானவரின் பின்னணி குரல் அவசியம் என்பதை உணர்ந்தோம். இதற்காக இயக்குநர் 'லெஜன்ட்' பாக்யராஜை தொடர்பு கொண்டோம். அவர் படத்தை பார்த்துவிட்டு சில நிறைகுறைகளை சுட்டிக்காட்டினார். அவர் பார்க்கும் போது இந்த படத்தின் கால அவகாசம் இரண்டரை மணி நேரம். அவர் சுட்டிக் காட்டிய குறைகளை நீக்கிய பிறகு  இரண்டு மணி நேர படமானது. 30 நிமிட காட்சிகளை நீக்கி விட்டோம். இதற்காக இயக்குநர் பாக்கியராஜுக்கு நன்றி. 


இந்தப் படத்தின் கிளைமாக்ஸை என்னுடைய உதவியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. படத்தில் இடம் பெறும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் நியாயப்படுத்தும் வகையில்  கிளைமாக்ஸ் இருந்தது. தயாரிப்பாளருக்கு நான் சொன்ன கிளைமாக்ஸ் பிடித்திருந்தது. பாக்யராஜ் சாரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார். கண்டிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ்.. படம் வெளியான பிறகு பேசப்படும். மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். கிளைமாக்ஸ் புதிது இல்லை என்றாலும்.. இது இருந்தால்தான் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். இது யாருக்குத் தேவை? யாருக்கு தேவை இல்லை? என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறோம். எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. 


நம்மால் ஒரு விசயத்தை சாதிக்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு... இந்த சமுதாயத்தை எதிர்த்து வாழ முடியும் என்று நினைப்பவர்களுக்கு.. யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஒருத்தருடைய ஆதரவில் தான் மற்றவர்களால் வாழ முடியும் என்றால்.., நிச்சயமாக அவர்கள் ஆயுள் முழுவதும் அடுத்தவர்களை சார்ந்து தான் வாழ்வார்கள். ‌ இதைத்தான் நான் இப்படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.'' என்றார். 


இயக்குநர் பேரரசு பேசுகையில், '' இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள், நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்டு, இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும். இதனை ஒரு ஆலோசனையாக முன் வைக்கிறேன்.  


இப்படத்தின் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநரை, இயக்குநர் சங்கத்திற்கு வரவழைத்து பேசினோம். அவர் சிக்லெட்ஸ் படத்தின் கதையை விவரித்தார். உடனே இது போன்ற படத்தின் விழாவிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்து தான் இங்கு வருகை தந்திருக்கிறேன். 


இந்தப் படத்தில் பிள்ளைகளின் விசயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படத்தை பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் தங்களது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டு, ஏமாளிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. 


இயக்குநர் ஒரு புத்திசாலி. அதனால் தான் படத்தினை இளம் தலைமுறையினர் திரையரங்கிற்கு வர வைக்கும் வகையில் முன்னோட்டத்தை  உருவாக்கி இருக்கிறார். படத்திற்கான டிசைனும் அவர்களை கவரும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  


2கே கிட்ஸ்களை இயக்குநர் நன்றாக புரிந்து வைத்திருப்பதால்.. இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழை விரும்பி வாங்கி இருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. 


இன்றைக்கு விவாகரத்து அதிகரித்து விட்டது. அதற்காக பெற்றோர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. இன்று ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பேசாமல் பல ஆண்டுகளாக கணவன்- மனைவி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காக தான் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.  இதனை பிள்ளைகளும் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்காக அம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதையும், தனக்காக அப்பா எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்.  இதனை பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள் தான் இதனை செய்ய வேண்டும். ஆனால் இன்றைய இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அப்பா அம்மா என்பது ஒரு பிராப்பர்ட்டி ஆகிவிட்டது. இதுபோன்ற சூழலில் 'சிக்லெட்ஸ்' போன்ற படங்கள் வெளிவருவது அவசியம். அதனால் இந்த திரைப்படத்தை பெற்றோர்கள் மட்டுமல்லாமல் இளம் தலைமுறையினர் கண்டு ரசித்து, தங்களது பெற்றோர்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.


தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ''    'சிக்லெட்ஸ்' படத்தின் டிரைலரை பார்த்தோம். வெரி நீட். இந்த காலகட்டத்திற்கு தேவையான அற்புதமான படம். 'ஏ'வா.. 'யு/ஏ' வா.. என்பது வேறு. அப்பா- அம்மா- பிள்ளைகள் அண்டர்ஸ்டாண்டிங்கை பற்றி பேசுகிறது. அப்பா அம்மாவின் பேச்சை பிள்ளைகள் கேட்கிறார்களா..? அல்லது பிள்ளைகளின் பேச்சை அப்பா அம்மா கேட்கிறார்களா.. ? என்ற பிரச்சினையை பற்றி இப்படம் பேசுகிறது. 


இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கின்ற விசயம். விஞ்ஞான வளர்ச்சியில் பல சாஃப்ட்வேர்கள் வந்து வளர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அழிவையும் கொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு ஆன்லைன் ரம்மியை சொல்லலாம். 


இன்றைக்கு நாம் ஃப்ளாட்டுக்களில் தான் வசிக்கிறோம். தாய் ஒரு ரூம். தந்தை ஒரு ரூம். பிள்ளைகள் ஒரு ரூம். எல்லோரும் எப்பவாது ஒரு முறை தான் ஹாலில் ஒன்றாக இருப்பார்கள். அம்மாவுக்கு ஒன்னு.. அப்பாவுக்கு ஒன்னு.. பொண்ணுக்கு ஒன்னு.. பையனுக்கு ஒன்னு.. என ஆளாளுக்கு ஒரு செல்போனை கையில் வைத்திருக்கிறார்கள். போன் வந்தால் அம்மா சமையல் அறைக்கும், அப்பா ரூமிற்கும், பையன் தெருவுக்கும், பொண்ணு மொட்டை மாடிக்கும் சென்று பேசுகிறார்கள். யாருக்கும் யாருடனும் அண்டர்ஸ்டாண்டிங் இல்லை. 


முன்பெல்லாம் அப்பா அம்மா.. பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். அப்போதெல்லாம் நிறைய கல்யாணம் நடந்தது. நல்ல பண்பாடாகவும் இருந்தது. ஆனால் இப்பொழுது அம்மா அப்பா தங்களுடைய பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் பொண்ணு திடீரென்று ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து, 'இவர்தான் என் கணவன்' என்று அறிமுகப்படுத்துகிறார். அப்பா- அம்மாவிற்கு முன் கல்யாணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார்கள். இது வருத்தமாக தான் இருக்கிறது. இந்த வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


இப்படத்தின் நாயகன் அறிமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவிக்க நடிகர் போல் நீளமான வசனத்தை ஒரே ஷாட்டில் பேசி பிரமாதமாக நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். 


இப்படத்தின் கதை பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அற்புதமான விசயத்தை சொல்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும். மேலும் தற்போது நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை ரசிகர்கள் வெற்றி பெற செய்கிறார்கள். '' என்றார். 


இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், '' இந்தப் படத்தைப் பற்றி இங்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேசிவிட்டார்கள்.  அதனால் நான் படத்தைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் இங்கு படத்தின் டிரைலரை பார்த்தோம். ட்ரெய்லர் கண்களுக்கு விருந்தளித்தது. இங்கு அனைவரும் இளைஞர்கள் தான் ஆசை இல்லாத மனிதர்கள் யார்? ஆசை இல்லாதவர்கள் மனிதனே இல்லை. அதனால் இப்படத்தின் ட்ரெய்லருக்கு ஹாட்ஸ் ஆஃப்.  


தயாரிப்பாளர் பாராட்டும் அளவிற்கு ஒரு இயக்குநர் இருக்கிறார் என்றால்.. அவரை நாமும் பாராட்ட வேண்டும். தயாரிப்பாளர் வேறு ஒரு படத்தின் பணிகளை நிறுத்திவிட்டு இப்படத்தின் இப்படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார் என்றால், இதற்காக இயக்குநரை பாராட்ட வேண்டும். அவருக்கு ஆதரவாக நின்ற தயாரிப்பாளரின் புதல்வியையும் பாராட்ட வேண்டும். 'லவ் டுடே' படத்திற்குப் பிறகு இந்த 'சிக்லெட்ஸ்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். '' என்றார்.

No comments:

Post a Comment