ஒரு மதிய வேளை, திடீரென அமீர் நடித்த 'உயிர் தமிழுக்கு' படத்தின் முன்னோட்ட காட்சி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
மதுரை, தேனி பின்னணியில் வரும் படங்கள் என்றாலே ஒரு தனி குஷி தான். அதுவும் அரிவாள்களைத் தவிர்த்து.. மதுரை வட்டாரத்தின் இன்னொரு பரிமாணமான நட்பு, லந்து,அலப்பரை, காதல்,அரசியல் என மாசி வீதி இட்லியும், மட்டன் சுக்காவுமாக ஒரு ட்ரீட் கிடைத்தால்.. டபுள் குஷி தானே.!!
சமீபத்தில் திரையரங்குகளுக்குள் நுழைந்தாலே.. இடைவிடாது சுடும் எந்திரத் துப்பாக்கிகள், திடீரென துண்டிக்கப்பட்டு உருளும் தலைகள், திரையெங்கும் நிறையும் ரத்த சகதிகள், வெடித்து சிதறும் கார்கள்.. இவைதான் நம் கண்களிலும், காதுகளிலும் ரீங்காரமிடுகின்றன. கண்ணையும் காதையும் மூடினாலும் இந்த ரீங்காரங்கள் நிற்பதில்லை.
'உயிர் தமிழுக்கும்' அப்படியான ரத்தம் தெறிக்கும் அரசியல், கேங்கஸ்ட்டர் படமாகத் தான் இருக்குமென்ற எதிர்பார்ப்போடு அரங்கில் உட்கார்ந்தேன்.
ஆனால், ரத்த படலத்தை முற்றிலுமாகத் தவிர்த்து.. ஒரு அழகான காதல் கதையை அரசியல் பின்னணியில் நகைச்சுவையும், கொண்டாட்டமும் நிறைத்து சொல்லியிருக்கிறார்கள்.
மதுரை பகுதிகளின் ஆளுமைகளுக்கு ஒரு அலட்சியமும், திமிரும், லந்தும் கலந்த வசீகரமான மேனரிசம் இருக்கும். அமீரிடம் இந்த மேனரிசம் ஒரு மாஸ் கதாநாயகனுக்கான கரிஷ்மாவாக அழகாக விளையாடுகிறது. சில காட்சிகள் பார்த்து பழகிய காட்சிகள் என்றாலும் அதை அமீர் மதுரை அலப்பரையோடு நிகழ்த்தும் போது.. நமக்கு ஒரு புது சுவாரஸ்யம் கிடைக்கவே செய்கிறது.
சமகால வாழ்க்கைச் சூழலில்.. சிரித்து கொண்டாடி மனதை லேசாக்கும் ஒரு படம் கொடுத்ததற்கு 'உயிர் தமிழுக்கு' குழுவினருக்கு மனநிறைந்த பாராட்டுக்கள்.
எழுதி,இயக்கி, தயாரித்திருக்கும் ஆதம் பாவா தமிழ் திரையுலகிற்கு ஒரு நல்வரவு. வித்யாசாகரின் மறுவரவு.. படம் நமக்கு கொடுக்கும் இன்னொரு ட்ரீட்.
படத்தை தன் தோளில் சுமக்க வல்ல ஒரு கரிஸ்மேட்டிக் ஹீரோ இந்தப் படத்தின் மூலம் அவதரித்துள்ளார் என்றால் அது மிகையல்ல.!
தமிழ் வெல்லும் 💐💐
அருண்
உதவி இயக்குநர்
No comments:
Post a Comment