Featured post

Legend Saravanan’s blockbuster 'Leader' to premiere on Amazon Prime Video on May 29

 Legend Saravanan’s blockbuster 'Leader' to premiere on Amazon Prime Video on May 29* *'Leader' starring Legend Saravanan wi...

Showing posts with label கஜா புயல் நிவாரண நிதி. Show all posts
Showing posts with label கஜா புயல் நிவாரண நிதி. Show all posts

Sunday, 20 January 2019

சூர்யா - கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர்

சூர்யா - கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர்
கஜா புயல் பாதிப்பில் வீடு இழந்த விவசாயிகளுக்கு

கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர்.

தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக; நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி விவசாயிகள் துயர் துடைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து  அவர்களின் ரசிகர்
மன்றத்தினர் நேரடியாக களத்தில் இறங்கினர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் தங்கி தேவையான உதவிகளைச் செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவா விடுதி கிராமம் அருகே 'தண்டா குளத்துக்கரை' என்ற குக்கிராமத்தில் வசித்த 50 குடும்பங்கள் கஜா புயலில் தங்கள் வீடுகளை முற்றிலும் இழந்து விட்டனர். தலைமுறையாக அதே இடத்தில் வசித்தாலும் மின் இணைப்பு கூட இல்லாத வறுமையான சூழலில் வாழ்ந்த அந்த மக்களுக்கு மீண்டும் வீடு கட்டித் தரும் முயற்சியில் சூர்யா - கார்த்தி நற்பணி இயக்கத்தினர் இறங்கினர்.

நற்பணி இயக்கத் தலைவர் பரமு அவர்கள் நேரடியாக சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டார். தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடுகள் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகள்
தொடங்கப்பட்டன. பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பதினைந்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இரண்டு வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சூர்யா - கார்த்தி நற்பணி இயக்கத்தினர் தண்டா குளத்துக்கரை கிராமத்துக்கு நேரடியாக சென்று அந்த மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். இந்த திட்டத்திற்கு செலவாகும் முழு தொகையையும் சூர்யா - கார்த்தி ரசிகர்களே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இது பற்றி தண்டா குளத்துக்கரை கிராமத்தில் வசிக்கும் பாலு கூறும்போது,

"ரசிகர்கள் என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்ற எங்களின் மனநிலையை சூர்யா - கார்த்தி ரசிகர்கள் முற்றிலும் மாற்றிவிட்டனர். புயல் பாதிப்பில் நாங்கள் துவண்டு போய் இருந்தபோது அரிசி, பருப்பு, காய்கறி, சோலார் விளக்கு என அனைத்தையும் வழங்கினர். தற்போது யாரிடம் இருந்தும் ஒரு பைசா வாங்காமல், தங்கள் சொந்தச் செலவில் எங்கள் வீடுகளைக் கட்டித்தருகின்றனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைபட்டுள்ளோம்" என்றார்.


தஞ்சாவூரில் கலந்து கொண்ட நிர்வாகிகளின் பெயர்கள்  
பரமு , வீரமணி , சுந்தர் , ஆரி  , குணா , ஹரிராஜ் , சுரேஷ் , வாஸீம்ராஜா , மாரிமுத்து , ஜெகதீஷ் , பெருமாள் , சரவணன் , ரமேஷ் கார்த்திக் , ஆனந்த் ,  சதிஷ் ,





Saturday, 29 December 2018

டெல்டா மாவட்ட மறுசீரமைப்பு குழு - ஒரு புதிய உதயம்


டெல்டா மாவட்ட மறுசீரமைப்பு குழு - ஒரு புதிய உதயம் 



கஜா புயலால் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து நிற்க டெல்டா மாவட்டங்களை இயல்பு  நிலைக்குக் கொண்டுவரும் பொருட்டு  நடிகர் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும்  பல்வேறு துறைசார்த்த அறிஞர்களும் ஒன்றிணைந்து  "டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு” வை உருவாக்கியிருக்கிறார்கள். 

அதன் நோக்கம் மற்றும் , பணிகளைப் பற்றி இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் ஆரி, நல்லோர் வட்டம் பாலு, ஜெகன்,ஹரி, பூவுலகின்  சுந்தர்ராஜன் ,  இன்ஸ்பையர் ரேவதி,தினேஷ்,  ஆகியோர் கலந்துகொண்டு விளக்கினர்.

ஆரி பேசும் போது, “ டெல்டா மாவட்ட மறுகட்டமைப்பு குழுவை அறிமுகப்படுத்தி எதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது என்பதை விளக்கினார். 

காஜா புயல் கடந்த மாதம்15ம் தேதி இரவு தொடங்கி 16 காலை வேதாரண்யத்தில் கரையை கடந்தது இதில் பல லட்சக்கணக்கான மரங்களும்  சுமார்   71 பேர்  மரணித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை  14 பேர் என்றானது. இவர்களை மீட்டெடுக்க ஒரு கை போதாது ஓராயிரம் கைகள் வேண்டும் .

சென்னை வர்தா புயலில் நாம் கார் பைக் போன்ற வாகனங்களைதான் இழந்தோம் ஆனால் டெல்டா மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் இந்த மக்களை மீட்கவே இந்த டெல்டா மாவட்ட மறுசீரமைப்பு குழு உருவாக்கப்பட்டது .

 எங்களது பணிகள்  பெரும்பாலும் உதவி தேவைப்படுபவர்களையும் உதவி செய்பவர்களையும் இணைப்பதே. 

புயல் பாதித்த அடுத்த நாளிலிருந்தே களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களிடம் புயல் சேதம் குறித்தான துல்லியமான விபரங்கள் தர இருக்கின்றனர். பெரு நிறுவனங்கள் ஆண்டு தோறும் சேவைக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை ச் செலவு செய்கிறார்கள்.  அவர்களிடம் கழிப்பறைகள், வீடுகள் இன்ன பிற அத்தியாவசிய த் தேவைகளுக்கான பட்ஜெட் ஐ சொல்லி அவர்களது பிரதிகளே நேரிடையாக பணிசெய்யுமாறு பணிக்கின்றோம். நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவதில்லை.மாறாக ஒவ்வொரிடம் இருந்தும் ஆதரவையும்நல்ல ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

எங்கள் குழுவில் இருப்பவர் இதுவரை  37000 குடும்பங்களுக்கு நேரடியாக  நிவாரணங்களை வழங்கியுள்ளார்கள் 1000 கிராமங்களை மேல் தத்தெடுக்கும் முயற்சியில் உள்ளோம்   290 கிராமங்களில் இன்றும் கலப்பணியாற்றி வருகிறோம்.  


சாய்ந்த மரங்களை இன்னும் கணக்கெடுக்காததால் அப்புறப்படுத்த முடியவில்லை. அரசு உடனடியாகக் கணக்கெடுப்பு நடத்தினால் விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்கும்..

 ஒரு சிலரால் மட்டுமே மறுசீரமைப்பு பணிகளை ச் செய்து விடமுடியாது. ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.

நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியில் ஆலோசனை வழங்குவதுடன்,

மாற்று விவசாயம் செய்ய உதவுதல், வண்ண மெழுகுவர்த்தி, பாக்குமட்டை தட்டுகள்   தயாரித்தல் போன்ற  மாற்று தொழில்கள் தொடங்கவும் ஏற்பாடு செய்யவும் அப்படி தயாரித்த பொருட்களை விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்ய உள்ளோம் .

மேலும் உதவிகள் தேவைப்படுவோர்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்குபவர்கள் எளிதில் தொடர்புகொள்ள ஏதுவாக    ஒரு டோல் பிரீ Toll Free Number ஐயும் இணையதளத்தையும் விரைவில் அறிமுகம் செய்து  ஒவ்வொரு பாதிக்கப்பட்ட கிராமங்களிலும் ஒரு  பொருப்பாளர்களை நியமித்து அங்குள்ள சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட  மக்களின் புள்ளி விவரங்களை வலைதளங்களில் பதிவேற்றி அரசும், உதவும் எண்ணம் கொண்டவர்களும் நேரடியாக உதவ ஒரு பாலமாக  செயல்பட உள்ளோம் என்றார். 

மேலும், இந்த மறுசீரமப்பு குழு, தமிழகத்தில் எதிர்காலத்தில் எங்கு பேரிடர்கள் நடந்தாலும் உடனடியாகக் களத்தில் இறங்கும் பொருட்டு ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் எனவும் கூறினார்.



Monday, 10 December 2018

மத்திய அரசு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
மத்திய அரசு பெருந்தொகை ஒதுக்க வேண்டும்
கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தின் பல்வேறு ஊர்களைச் சார்ந்த 1008 குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து ஆடுகள் வழங்கிய நிகழ்ச்சி தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்றது. கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி.டி.செல்வகுமார் ஆடுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவைத் தஞ்சை வெற்றித்தமிழர் பேரவைவைச் சேர்ந்த  செழியன், செழியன், கலப்பை மக்கள் இயக்கத்தின் வி.கே.வெங்கடேசன் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :
“கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படுமாறு 1008 குடும்பங்களுக்கு இன்று ஆடுகள் வழங்கியிருக்கிறோம். ஒரு விவசாயி வீட்டில் ஆடுமாடுகள் என்பவை ரேசன் கார்டில் சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினர்கள். ஆள் செத்த வீட்டைவிட ஆடு செத்த வீடு துன்பமானது; மனிதர் செத்த வீட்டைவிட மாடு செத்த வீடு துன்பமானது. ஒரு பசுமாடு – ஓர் ஆடு - ஒரு முருங்கை மரம் - ஒரு வெட்டரிவாள் - 50டன் அரிசி – 5000 வார்த்தைகள் இவ்வளவோடு ஒரு விவசாயியின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் இழந்துவிட்டால் கிராமத்து மக்களுக்கு ஏது வாழ்க்கை? புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் வேளாண் குடும்பத்து பெருமக்களே... எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள். சமுதாயத்தில் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை. உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களில் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது. வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது.
கஜா புயலை கணக்கெடுக்க வந்த மத்தியக் குழுவினர் கால்களில் விழுந்து சிலபேர் கண்ணீர் விட்டார்கள். யாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை. கேட்பது உங்கள் உரிமை; கொடுப்பது அவர்கள் கடமை. ஒதுக்கப்பட்ட நிதி போதாது என்பது எங்கள் எண்ணம். சுட்ட ஓட்டில் சொட்டுநீர் விழுந்ததுமாதிரி இருக்கிறது இந்தச் சிறிய தொகை. இன்னும் பெருந்தொகை வழங்கப்பட வேண்டும்.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் சமுதாயம் இரக்கத்திற்குரியது. இந்தியா முழுதும் விவசாயத்திற்கு மாற்றுத் தொழிலும் கண்டறியப்பட வேண்டும். மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று தேவைகள் இருக்கின்றன. இன்றைய தேவை சோறு; நாளைய தேவை அரிசி; எதிர்காலத் தேவை விதைநெல். இந்த மூன்றுக்கும் உத்திரவாதம் வழங்கப்படாவிட்டால் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது. சொந்த ஊரில் பிறந்து படித்து ஊரைவிட்டுப் போன இளைஞர்கள் தாய் கிராமத்திற்கு திரும்ப வரவேண்டும். குடும்பம் – ஊர் – உறவு ஆகிய மூன்றுக்கும் உதவி செய்ய வேண்டும். நிலங்களிலெல்லாம் தென்னை மரங்கள் பிணங்களாக விழுந்துகிடக்கின்றன. தென்னை மரத்திற்கு உயிருண்டு என்று நம்புவதால் அதை ‘தென்னம்பிள்ளை’ என்று விவசாயி அழைத்தான். இழந்த மரங்கள் நடப்பட வேண்டும். இந்தியா முழுவதிலிருந்தும் பிலிப்பைன்சிலிருந்தும் தேவையான தென்னங்கன்றுகள் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். தென்னை மரங்கள் பலன்தரும் வரைக்கும் அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்”. இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.



Wednesday, 5 December 2018

வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்

கஜா புயலால் பாதித்தவர்களுக்கு  வித்தியாசமாக உதவிய நடிகர்  விஷால்   

மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகள் இன்னும் மீளாத் துயரில் தத்தளிக்கிறது. இந்நிலையில் கஜா புயலில் பாதித்த 14 குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக கடலூர் கவிதாலயா தியேட்டரில் திண்பண்டங்கள் விற்பனை செய்தும், அந்தப் பகுதியில் மூட்டைத் தூக்கி அதில் கிடைத்த தொகையையும் கஜா புயலில் பாதித்தவர்களுக்காக அளித்துள்ளார்.


















இது வரும் ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் ‘சன் நாம் ஒருவர்’ நிகழ்ச்சியில் வரவிருக்கிறது.  இந்நிகழ்ச்சியில் இதுவரை வாரம்  ஒரு நபருக்கு மட்டுமே உதவி என்ற வரிசையில் நடைபெற்று வந்தது. ஆனால் வரும் வாரம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு உதவி செய்யும் அத்தியாயம் வர உள்ளது. நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களின் பரிதாப நிலை குறித்தும் பேசுகிறார்கள்.  நடிகர் விஷால் நடத்தும்  இந்த நிகழ்ச்சியில்  இந்த வாரம் சமுத்திக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதை கேட்டு கண்ணீர் வடித்ததோடு,

‘‘கஜா புயல் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களை திண்றுவிட்டது. இது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடந்ததைப் போல இப்போதும் பலர் நினைப்பதுதான் வேதனையாக இருக்கிறது!’’ என்றார்

கஜா புயல் நிவாரண நிதி

கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வாடும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு  நிவாரண நிதியாக ரூ.5,000/- வீதம் மொத்தம் ரூ.8,60,000/- “தென்னிந்திய நடிகர் சங்கம்’’ மூலம் வழங்கப்பட்டது. 


இவ்வேளையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி சேவை புரியும், நிறுவனங்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் “தென்னிந்திய நடிகர் சங்கம்” நன்றி தெரிவித்து கொள்கிறது.