*“அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்” ; குஷியான இறுகப்பற்று நாயகி அபர்ணதி*
*“அப்படின்னா சிவாஜி என் தாத்தா இல்லையா ?” ; கண்ணீர் விட்டு அழுத இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன்*
*“13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படி நடக்கிறது” ; ‘இறுகப்பற்று’ வெற்றி சந்திப்பில் நெகிழ்ந்த விதார்த்*
*“நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு*
*“உண்மையான விக்ரம் பிரபு யார் ?” ; இறுகப்பற்று பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு ஏற்பட்ட குழப்பம்*
*”ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு கிடைத்த வெற்றி தான் இறுகப்பற்று” ; வெற்றிச்சந்திப்பில் நெகிழ்ந்த விக்ரம் பிரபு*
சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ‘இறுகப்பற்று’ படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இந்த படத்தில் நான் பாடல்கள் எழுதுவதற்கு ஜஸ்டின் பிரபாகரன் தான் காரணம். ஏற்கனவே அவருடன் இணைந்து பல படங்களில் எழுதியிருந்தாலும் இந்த படத்தில் பாடல் எழுதியது ஸ்பெஷல் என்று சொல்லலாம். இப்படத்தின் காட்சிகளை பார்த்து அதற்கேற்றபடி தான் பாடல்களை எழுதினேன். அதற்கு வசதியாக பாலாஜி மணிகண்டன் தேவையான காட்சிகளை அழகாக படத்தொகுப்பு செய்து தந்தார். எனக்கும் இயக்குனருக்கும் ஒவ்வொரு பாடலை உருவாக்கும்போதும் ஆரோக்கியமான விவாதம் நடந்தது. இப்படத்தில் விக்ரம் பிரபுவின் காஸ்டியூம் எனக்கு ரொம்பவே பிடித்தது. இந்த படத்தில் அவரை பார்த்துவிட்டு இதுதான் நிஜமான அவரா, இல்லை டாணாக்காரன் படத்தில் பார்த்த அவர் தான் உண்மையா என்கிற ஒரு குழப்பமே எனக்கு ஏற்பட்டு விட்டது. ஸ்ரீ, சானியா அய்யப்பன் ஜோடியினர் இன்றைய இருக்கிற இளைஞர்களை அழகாக பிரதிபலித்திருக்கின்றனர். லாப நோக்கில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் மத்தியில் நல்ல கதைக்காக படம் எடுக்கும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு நன்றி” என்று கூறினார்
ஆடை வடிவமைப்பாளர் ஏகன் பேசும்போது, “இதுவரை சார்பட்டா பரம்பரை, தங்கலான் என பீரியட் படங்களுக்கு பணியாற்றி வந்த எனக்கு இப்படத்தில் பணியாற்றுவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவரவர் தொழிலுக்கு ஏற்ற மாதிரி ஆடைகளை வடிவமைத்தோம். அந்த ஆடைகள் கூட அவர்களை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்த்தனர்” என்று கூறினார்.
படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பேசும்போது, “தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இந்த சமூகத்திற்கு நல்ல நல்ல படங்களாக கொடுத்து வருகிறார். படம் பார்த்த பல ஜோடிகள் தங்களுடைய உணர்வுகளை என்னிடம் பேசும்போது வெளிப்படுத்தினார்கள். அதிலேயே இந்த படம் எந்த அளவிற்கு அவர்களை பாதித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது” என்றார்.
நடிகை அபர்ணதி பேசும்போது, “இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்கள் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்ட என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி 'கிழித்து' போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்தான்.
இப்போதுதான் சினிமாவில் வெற்றியை பார்க்கிறேன். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் நான் அழுதது நிஜமான அழுகைதான். என்னடா டைரக்டர் இப்படி போட்டு வேலை வாங்குகிறாரே என்று நினைத்ததால் வந்து அழுகை. இப்படத்தில் நடித்தது ஒரு சவாலாகவே இருந்தது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றியது சந்தோஷம். விதார்த்தை பார்க்கும்போது மைனாவில் இருந்த அதே பவர் இதிலும் இருந்தது. விக்ரம் பிரபு இப்படத்தில் உணர்வுகளை சரியாக பேலன்ஸ் செய்திருக்கிறார். இயக்குனர் யுவராஜ், ஸ்ரீயை நன்றாக வேலை வாங்கி இருந்தார்.” என்று கூறினார்.
நடிகர் விதார்த் பேசும்போது, “மைனா படம் ரிலீஸான போது உங்களை எல்லாம் சந்தித்து அந்த வெற்றியை பகிர்ந்து கொண்டேன். அதன்பிறகு நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அதன் தயாரிப்பாளரே வந்து இது வெற்றிப்படம் என சொல்வார்கள் என எதிர்பார்த்தேன். 13 வருடம் கழித்து இந்த படத்தில் அது நடந்திருக்கிறது. படம் வெளியான பிறகு தொடர்ந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஒவ்வொரு அழைப்பையும் பேசி முடிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இந்த வெற்றி இயக்குனர் யுவராஜுக்கு போய் சேரவேண்டும் என்கிற எண்ணம் தான் ஏற்பட்டது. இன்ஸ்டாகிராமில் எல்லோரது கமெண்டிலும் பெரும்பாலும் லவ் மற்றும் கண்ணீர் குறியீடுகள் தான் அதிகம் இடம் பெற்றன. இப்படி ஒரு படத்தின் நானும் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெருமை. கடந்த இரண்டு நாளாக கோயம்புத்தூரில் ஆயுர்வேத டயட்டில் இருந்து வந்தேன். நான் ஒரு டிரீட்மெண்டுக்காக கோவையில் இருந்த எனக்கு, இப்படி ஒரு நன்றி சொல்லும் சந்திப்பு இருக்கிறது என தகவல் வந்தது. இந்த தருணத்திற்காக தானே காத்திருந்தேன் என உடனே கோவையில் இருந்து கிளம்பி வந்தேன்” என்று கூறினார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இறுகப்பற்று படம் ரிலீஸான அக்டோபர் 6ஆம் தேதி தான் என் மனைவியின் பிறந்தநாள் என்பதால் அவருக்காக இதை டெடிகேட் பண்ணுவதாக கூறினேன். டெடிக்கேட்டும் பண்ணிவிட்டேன். அப்போது என்னிடம்,
நீங்களும் கிட்டத்தட்ட படத்தில் பார்த்த கதாபாத்திரம் போல தான் இருக்கிறீர்கள் என்று கூறினார்.
இந்த படத்தை தியேட்டரில் பார்த்தபோது படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரங்களுடனும் என்னை தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது. எந்த ஒரு படமும் ஏதோ ஒரு விதத்தில் நம்முடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிய வேண்டும்.. அல்லது நம்மை முழுதாக பொழுதுபோக்கு உணர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும்.. எல்லா படத்திற்கும் ஒரே மாதிரியாகத்தான் பாடுபடுகிறோம். சில படங்கள் தான் மக்களிடம் சேருகின்றன. எந்த ஊருக்கு போனாலும் அங்கே உள்ள வீடுகளில் என்னுடைய தாத்தா படம் இருக்கும். இறுகப்பற்று படமும் அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் போய் சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. சில படங்களை ரசிகர்களுக்கு சரியாக கொடுக்காததற்காக அவர்களிடம் பலமுறை வருத்தம் தெரிவித்திருக்கிறேன். அந்த வருத்தம் தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது” என்றார்.
இயக்குனர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “அக்-3ஆம் தேதி பத்திரிகையாளர் காட்சி முடிந்த அன்று இரவு தான் நிம்மதியாக தூங்கினேன். அதுவரை எங்கள் படமாக இருந்தது. அதன்பிறகு உங்கள் படமாக எடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். ஒரு படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது, சூப்பர் என்று சொல்வார்கள். ஆனால் முதன்முறையாக நன்றி என சொல்வது எனக்கு புதிதாக இருந்தது. படம் பார்த்துவிட்டு மனைவி தனது கணவனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், கணவன் நீண்ட நாளைக்கு பிறகு தன்னிடம் இரண்டு மணி நேரம் செலவிட்டு பேசியதாகவும், இப்படம் முன்பே வந்திருந்தால் எங்களது ரிலேஷன்ஷிப்பை காப்பாற்றி இருப்பேன் என்பது போன்று பலரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட என்னை ஒரு மனோதத்துவ நிபுணராகவே ஆக்கி விட்டார்கள் என நினைக்கிறேன்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கோகுல் பற்றி ஜோதிகா மேடம் பேசும்போது, ரொம்ப உயர்வாக பில்டப் கொடுத்து பேசினார். அது உண்மைதான்.. கோகுல் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் அவரையே திருமணம் செய்திருப்பேன். இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு வழக்கமான ஆடைகளாக இல்லாமல் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா புதிதாக முயற்சி செய்துள்ளார்.
படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரத்திற்கு அவரை கடைசி சாய்ஸ் ஆகத்தான் நினைத்து வைத்திருந்தேன். காரணம் இதே கதாபாத்திரத்தை கஷ்டப்பட்டு நடிக்கும் ஒரு நடிகையை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தேன். ஆனால் சூப்பர் என சொல்லும் அளவிற்கு ஸ்ராத்தாவிற்கு இந்த கதாபாத்திரம் அமைந்துவிட்டது படத்தின் மொத்த வசனங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு மட்டுமே 38 சதவீதம் வசனங்கள். படப்பிடிப்பில் அவர் அதை அழகாக பேசியதற்கும் அவருக்கு பொருத்தமாக டப்பிங் குரல் கொடுத்த ஸ்மிருதிக்கும் எனது நன்றி.
ரீ ரெக்கார்டிங்கிற்காக ஜஸ்டின் பிரபாகரன் ஸ்டுடியாவுக்கு படுக்கையுடன் சென்று விட்டேன். இந்த படத்தின் இன்னொரு டைரக்டர் என்றால் அது படத்தொகுப்பாளர் மணிகண்டன் பாலாஜி தான். நான் சொன்னதை சரியாக புரிந்து கொண்டு படத்திற்கு முழு வடிவம் கொடுத்தார்.
நடிகை அபர்ணதி இப்போது என்னை எவ்வளவு புகழ்ந்து பேசுகிறார். ஆனால் என்னை டார்ச்சர் பண்ணிய நடிகை என்றால் அது அவர் தான்.. அவர் காலில் மட்டும் தான் விழவில்லை.. அந்த அளவுக்கு கெஞ்சினேன். நான் எந்த காட்சியை படமாக்குகிறேனோ அதை மூடிலேயே இருக்க விரும்புவேன். ஆனால் அவர் சீரியஸான காட்சியில் நடித்துவிட்டு வந்து என்னிடம் ஜாலியாக பேசி மூடை மாற்ற முயற்சி செய்வார். ஆனால் சானியா ஐயப்பனை பொறுத்தவரை என்ன காட்சி எடுக்கிறோமோ அதே மூடில் இருப்பார் அவர் அழும்போது நானும் அழுவேன்..
விதார்த்தம் நானும் 13 வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தில் இணைந்து பணியாற்றினோம். பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தான் வடிவேலுவின் படம் எனக்கு வந்தபோது வேறு வழியின்றி அந்தப்படத்தை கைவிட நேர்ந்தது. விதார்த்தும் அதை பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு என்னை அனுப்பி வைத்தார். அந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தை அவருக்கு கொடுத்திருக்கிறேன்.
ஸ்ரீ என்னிடம் உதவி இயக்குனராக வேலை பார்க்கத்தான் வந்தார். அதன்பிறகே இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்தில் நடிக்கும் போதே நான் எவ்வளவு கெட்டவனாக இருந்திருக்கிறேன் என பெர்சனல் ஆகவே ஃபீல் பண்ணி பேசுவார். இப்படம் பார்த்துவிட்டு அவரை வைத்து ரொமான்ஸ், லவ் படம் எடுக்கலாம் என யாரும் நினைக்காதீர்கள். லவ் சீனௌ பொறுத்தவரை அவருக்கு நடிக்கவே தெரியாது. யாராவது அவரை வைத்து லவ் படம் எடுக்கதா இருந்தால் என்னிடம் கேட்டி விட்டு படம் பண்ணுங்கள். அந்த அளவிற்கு என்னை வேலை வாங்கி இருக்கிறார், ஶ்ரீ.
விக்ரம் பிரபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறைய பேர் தயங்கினார்கள். காரணம் இது மல்டி ஸ்டாரர் படமாக இருந்தது. அது மட்டுமல்ல ஹீரோயினை மையப்படுத்திய படமாகவும் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று கூறி ஒப்புக்கொண்டார். அவரும் ஷ்ரத்தாவும் நடிக்க வேண்டிய ஏழு நிமிட காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கினோம். விக்ரம் பிரபு நடிக்க ஆரம்பித்ததுமே அதை மீண்டும் ஒருமுறை படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அவர் நடித்து முடித்ததும் சுற்றி இருந்தவர்கள் பலமாக கைதட்டி பாராட்டினார்கள். இருந்தாலும் இன்னொரு டேக் போகலாம் என கூறியபோது இத்தனை பேர் கைதட்டினார்களே இது சரியாக இல்லையா என்று அவர் கேட்டாலும் கூட, எனக்காக மீண்டும் ஒருமுறை அந்த காட்சியில் நடித்தார் விக்ரம் பிரபு.
அவருக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. என்னுடைய தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர். சிறுவயதில் சிவாஜியின் படத்தைக் காட்டி இவர்தான் உன்னுடைய தாத்தா என்று சொல்வார். நானும் அவரையே என்னுடைய தாத்தா என்று எல்லோரிடமும் கூறுவேன். பள்ளி தலைமை ஆசிரியரே என் தந்தையை அழைத்து விசாரிக்கும் அளவிற்கு சிவாஜி தான் என் தாத்தா என நம்பினேன். அதன்பிறகு அவர் என் தாத்தா இல்லை என சொன்னதும் அழுதுவிட்டேன். சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது. சிவாஜி இறந்த அன்று இரவு என் தந்தை ரொம்பவே அழுதார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் ஒத்துழைப்பால் இப்படத்தை முழுவதுமாக நான் நினைத்தபடி எடுக்க முடிந்தது. நான் டென்ஷனாக இருந்தாலும் கூட அவர் ரொம்பவே கூலாக விஷயங்களை டீல் செய்தார். நான் சில பேர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைப்பவர்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு சாரும் ஒருவர். இன்று நடப்பதை எல்லாம் பார்க்கும்போது நாளை தான் என் படம் ரிலீஸ் ஆகிறது என்பது போல உணர்கிறேன்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. வழக்கமாக பெரிய படங்களை எடுக்கும்போது ஓடுமா ஓடாதா என யோசிக்காமல் படத்தை எடுப்போம். ஆனால் யாராவது சின்ன படம் எடுக்கிறேன் என என்னிடம் சொன்னால் நல்ல படமாக எடுங்கள் என்று சொல்வேன். அப்போது என் மீது பலரும் கோபப்படுவார்கள். ஆனால் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நிலைமை எல்லாமே மாறியது. சின்ன பட்ஜெட்டில் அதுவும் நான்கு கோடிக்குள் படம் எடுத்தால் மக்கள் ஆதரவு கிடைக்குமா என சந்தேகம் ஏற்பட்டது. காரணம் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து சிறிய படங்களை பார்ப்பது குறைந்துவிட்டது. த்ரில்லர் படம் என்றால் கூட இளைஞர்கள் படம் பார்க்க வருவார்கள். அவர்கள் மூலமாக படம் பற்றி வெளியே பரவிவிடும். ஆனால் குடும்ப படத்திற்கு அப்படி வருவார்களா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் நல்ல கதை என்றால் தைரியமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கலாம் என்கிற நம்பிக்கையை இறுகப்பற்று படத்திற்கு கிடைத்த வெற்றி மூலம் மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.. அதற்காகத்தான் இந்த நன்றி தெரிவிக்கும் சந்திப்பு” என்றார்.
-- Johnson,Pro
No comments:
Post a Comment