Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Wednesday, 16 October 2024

200வது எபிசோட் நினைத்தேன் வந்தாய்’ தொடர் ;

 *200வது எபிசோட்*

 *‘நினைத்தேன் வந்தாய்’ தொடர் ; உற்சாகத்தில் கணேஷ் வெங்கட்ராம்*






இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘அபியும் நானும்’ படத்தில் மனம் கவர்ந்த சாக்லேட் பாயாக  அறிமுகமாகி ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘காந்தகார்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கியபோது முதல் சீசனிலேயே போட்டியாளராக கலந்துகொண்டு தனது மிகச்சிறந்த அணுகுமுறையால் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நன்கு அறிமுகமான நெருக்கமான நபராக மாறிவிட்டார். தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு, மலையாள, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து தனது எல்லையை விரிவுபடுத்திய இவர் தற்போது சினிமாவுடன் சேர்த்து ஒரு பக்கம் வெப்சீரிஸ் இன்னொரு பக்கம் சின்னத்திரை தொடர் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்.


குறிப்பாக இவர் நடித்த ‘அபியும் நானும்; படம் பார்த்தபோது இவரை போல நம் வீட்டிற்கும் ஒரு மாப்பிளை கிடைக்க மாட்டாரா என பல பெற்றோர்களை ஏங்க வைத்த கணேஷ் வெங்கட்ராம், இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘நினைத்தேன் வந்தாய்’ தொடரில் தான் நடித்துவரும் டாக்டர் எழில் கதாபாத்திரம் மூலமாக இப்படி ஒரு கணவன் தான் நமக்கு வேண்டும் என நினைக்க தூண்டும் அளவுக்கு பெண்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளார். 


கடந்த ஜனவரியில் ஆரம்பித்த இந்த தொடர் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. அதற்கென ஒரு தனி ரசிகர்களே உருவாகி விட்டார்கள். கே பாலச்சந்தர் இயக்கத்தில் மம்முட்டி நடித்த அழகன் படத்தின் உந்துதலில் தான் இந்த தொடர் உருவாகி உள்ளது. வரும் திங்களன்று 200வது எபிசோடில் இந்த தொடர் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் இந்த தொடரில் நடிக்கும் அனுபவம், இதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து உற்சாகமாக பகிர்ந்துகொண்டுள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.


“ஆரம்பத்தில் இருந்தே இதில் ஒரு தனித்தன்மையான கதைக்கரு இருந்தது. அதனாலயே உடனே இதில் நான் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. சமீபத்தில் தான் என்னுடைய டாக்டர் எழில் கதாபாத்திரத்தின் மனைவி விபத்தில் மரணம் அடைந்தார். நான்கு குழந்தைகளுடைய மொத்த பொறுப்பையும் சுமக்கும் சூழலுக்கு இப்போது ஆளாகியுள்ளார் டாக்டர் எழில். தாய் இல்லாமல் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தந்தையின் தவிப்பு, அவரது கண்டிப்பு, ஒழுக்கம் இவற்றையெல்லாம் ஓரமாக தள்ளி வைத்துவிட்டு குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைந்து அன்பான பாசமான அப்பாவாக மாறுகிறார் என்பதை சுற்றித்தான் இந்த கதை நகர்கிறது. 


எனக்கும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்பவே ஒரு சவாலான ஒன்றாக தான் இருந்திருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு கனவு நனவான தருணம் ஆகவும் இருந்தது. சினிமாவில் அபியும் நானும் என்கிற ஒரு உணர்ச்சிபூர்வமான படம் மூலமாக நான் அறிமுகமானேன். என்னுடைய கதாபாத்திரமும் அதே போன்று உணர்வுபூர்வமானது தான். அதன் பிறகு ரொம்ப நாளாக அதே போன்ற ஒரு கதையுடன் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமே என்கிற ஒரு ஏக்கம் இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து ஆக்சன், திரில்லர் படங்களிலேயே  நடிக்கும் வாய்ப்பு தான் அதிகம் கிடைத்தது. மீண்டும் வாரிசு படத்தில் தான் அப்படி ஒரு குடும்பம் சார்ந்த ஒரு கதையில் நடிக்க வாய்ப்பு வந்தது.. 


குடும்ப கதைகளுக்கு எப்போதும் ஒரு மதிப்பு இருக்கிறது. இதுபோன்ற கதைகளில் நடிக்க வேண்டும், இது போன்ற கதாபாத்திரங்களை பண்ண வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமான நிலையில் தான் இந்த ‘நினைத்தேன் வந்தாய்’ தொடர் என்னை தேடி வந்தது. ஒரு நடிகனாக எனக்கு மிக திருப்தியாக இருந்தது. 


தனது மனைவியின் மறைவுக்குப் பிறகும் கூட எப்போதுமே மனைவியை பற்றியே நினைக்கிற அன்பான ஒரு கணவன் என்கிற எனது கதாபாத்திரம் பெண் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து போய் உள்ளது. அவர்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. அந்த அளவுக்கு வலுவான பிளாஷ்பேக் காட்சிகளும் காட்டப்பட்டுள்ளன. எங்களுக்கு இது போன்ற ஒரு கணவர் தான் வேண்டும் என பெண் ரசிகைகள் கூறும் அளவிற்கு இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் வாழ்க்கையில் எதுவுமே முடிந்து விடவில்லை, இரண்டாவது வாய்ப்பு ஒன்றும் இருக்கிறது, மீண்டும் எப்போது வேண்டுமானாலும் காதல் அரும்பலாம் என்கிற ஒரு நம்பிக்கையையும் இந்த தொடர் கொடுக்கிறது.


அந்த வகையில் இந்த நான்கு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் ஒரு கதாபாத்திரமாக இந்த வீட்டுக்குள் நுழையும் கதாநாயகி போகப்போக எப்படி ஒரு சில சூழல்களால் டாக்டர் எழிலை திருமணம் செய்யும் நிலை உருவாகிறது அதற்குப் பிறகு அவர்களுக்குள் இருக்கும் அந்த உறவு எப்படி என்பது பற்றி தான் தற்போது கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதைய அத்தியாயத்தில் நாயகிக்கு நாயகன் மீது மிகப்பெரிய காதல் இருக்கிறது. ஆனால் நாயகன் இன்னும் கொஞ்சம் தவறான புரிதலுடன் தான் இருக்கிறார். அதனால் இவர்கள் காதல் விரைவில் கைகூடுமா என்கிற ஆர்வத்தை தூண்டும் விதமாகத்தான் கதை நகரப் போகிறது.


அந்த வகையில் தற்போது ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை, வெப் சீரிஸ் என எல்லாவற்றையும் சரியாக பேலன்ஸ் செய்து தான் நடித்து வருகிறேன். விஜய்சேதுபதி-மிஸ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ படத்தில் ஒரு சுவாரசியமான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். விரைவில் அது வெளியாக இருக்கிறது. அமேசான் பிரைமில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்கிற ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறேன். இன்னும் சில நல்ல வெப் சீரிஸ் வாய்ப்புகளும் வருகின்றன.


அதற்கு காரணம் என்னுடைய முந்தைய படங்களும், இப்போதைய ‘நினைத்தேன் வந்தாய்’ தொடரும் தான். ஓடிடியில் வெப் சீரிஸ் தயாரிப்பவர்கள் தொலைக்காட்சி தொடர்களை தான் அதிகம் கணக்கில் எடுக்கிறார்கள். ஏனென்றால் பெரும்பாலும் ஓடிடி-க்கான பார்வையாளர்கள் தொலைக்காட்சி ரசிகர்களாக இருப்பதால் அவர்களுக்கு நன்கு தெரிந்த முகமாக அதிலும் சினிமாவில் நடித்திருந்தால் கூடுதல் அம்சமாக கருதுகிறார்கள். அப்படிப்பட்ட நபர்கள் நடிக்கும்போது நிச்சயமாக அந்த வெப் சீரிஸுக்கு என ஒரு வரவேற்பு இருக்கும் என நினைக்கிறார்கள். அதனால் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் சேர்ந்தாற்போல் நடிப்பதால் ஒரு நடிகனாக எனக்கு ஒரு மிகப்பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இதுபோன்ற நல்ல கதைகள் தொடர்கள் மூலமாக ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.


Johnson Pro

No comments:

Post a Comment