Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Saturday, 26 October 2024

ஹிட் லிஸ்ட் படத்தின் கதாசிரியர் தேவராஜ், நடிகர் விஜய்க்கு கடிதம்

 *ஹிட் லிஸ்ட் படத்தின் கதாசிரியர் தேவராஜ், நடிகர் விஜய்க்கு கடிதம்*





*இதை செய்வாரா தளபதி விஜய்... ஹிட் லிஸ்ட் படத்தின் கதாசிரியர் தேவராஜ் கடிதம்*


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழ்நாடு அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து "தமிழக வெற்றிக் கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்புகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.


இந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, "வெற்றிக் கொள்கைத் திருவிழா" என்ற பெயரில் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் நடைபெற இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


மேலும், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பலர் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், "ஹிட் லிஸ்ட்" படத்தின் கதாசிரியர் தேவராஜ், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.


அந்த கடிதத்தில் கதாசிரியர் தேவராஜ் குறிப்பிட்டுள்ளதாவது..,


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு குடிமகனின் வேண்டுகோள் கடிதம். இங்கே மக்களின் சேவைக்கென்று பலர் அரசியல் கட்சிகள் தொடங்கினாலும். காலப்போக்கில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, என் சாதி மக்கள், என் மத மக்கள், என் இன மக்கள் என அவரவர்கள் சார்ந்த இனத்துக்குள்ளயே சிக்கிக்கொள்கிறார்கள். மேலும் அவர்களின் அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் பாதுகாக்கவேண்டிய சாதிய மக்களையே இன்னொரு சாதி-மத மக்களின் மீது ஏவிவிட்டு பிரிவினையை மேலும் உருவாக்கிக்கொண்டே போகிறார்கள். இப்படி அவர்களின் சுய லாபத்துக்காக நம் நாட்டில் சமத்துவத்தை வளரவிடாமல் தொடர்ந்து இங்கே வாக்கு அரசியல் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.


தங்களின் அரசியல் மக்களுக்கானதாகவும் மனிதம் போற்றுவதாகவும் இருக்குமென நான் முழுமையாக நம்புகிறேன். 


இப்போது நம் நாட்டில் ஆளும் கட்சிகள் முதல் எதிர் கட்சிகள் வரை, சாதிவாரிக் கணக்கை எடுத்தாக வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஒவ்வொரு சாதிகளிலும் மதங்களிலும் உள்ள மக்களின் அளவைப் பொறுத்து கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒவ்வொரு வகுப்பினருக்கும் சரியான விதத்தில் இட ஒதுக்கீட்டை பிரித்துக் கொடுக்கலாம் என்பது அவர்களின் இந்த திட்டம் ஒரு வகையில் அனைத்து சாதிய மதங்களுக்கும் சமமான உரிமைகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய சிறந்த திட்டமாக இப்போது நமக்கு தோன்றலாம், ஆனால் அதை நாம் ஆழமாக யோசித்தால் இந்த சட்டத்தால் ஏற்படக்கூடிய அபாயங்கள் நமக்கு புரியும்.


ஒரு வேளை நீதிமன்றங்கள் உத்தரவு கொடுத்து மத்திய அரசும் சாதிவாரியக் கணக்கெடுப்பை எடுத்து அதை மக்களுக்கும் அறிவித்துவிடுகிறது என்றால், இங்கே அதனால் இடஒதிக்கீடுப் பிரச்சனை ஒரு வேலை சரி செய்யப்படலாம். ஆனால், ஒன்றாக இருக்கும் மக்களிடையே இடைவெளியை அது மேலும் அதிகப்படுத்தும் என்பதுதான். நாம் உணர்ந்துக் கொள்ளக்கூடிய உண்மை. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஊரிலும் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே செய்யும். ஒரு இடத்தில் கூடுதலாக இருக்கும் சாதிக்கார்கள் இங்க எங்க ஆளுங்கதான் அதிகம் தெரியுமா..?" என்று மேலும் தற்பெருமைகள் பேசத்தொடங்கும். அது குறைவாக இருக்கும் சாதியின் கூட்டத்தை அதிகாரம் செய்யவும் அடக்கி ஆளவும்தான் நினைக்கும். ஆகையால் இந்த திட்டம் ஏற்கனவே மக்களிடையே பலகீனமாக இருக்கும் சமத்துவத்தை மேலும் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றிவிடும். 


இன்று வரை எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையிலும் யாரோ சுயலாபத்துக்காக சொல்லிவிட்டுப்போன வர்ணாசிரமத்தைப் பிடித்துக்கொண்டு பிறப்பில் "நாங்கதான் இங்கே உயர்ந்தவர்கள்" என தற்பெருமை பேசுகிற பிற்போக்கு மக்களுக்கு இந்த சாதியவாரி கணக்கெடுப்பு மேலும் சாதகமாகவே அமையும். எனவே தயவு செய்து தளபதி விஜய் அவர்கள் இந்த விஷயத்தை தொலைநோக்குப் பார்வையோடு கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.


இப்படி பிரிவினையை உருவாக்கக்கூடிய இந்த சாதிவாரி கணக்கெடுப்பையே, நீங்கள் ஒரு புதிய சமத்துவத்தை உருவாக்கும் ஆயுதமாக உருமாற்றவேண்டும் என்பது எனது விருப்பம். 


இந்திய அரசு சாதிவாரிய கணக்கெடுப்பை நடத்துவற்கு முன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதி மதத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ள விருப்பமில்லாதவர்களுக்கு சமத்துவர் என்ற ஒரு பிரிவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் அழுத்தமாக முன் வைக்க வேண்டும். 


இப்போதும் ஒரு தனி மனிதன் விரும்பினால் சாதி-மதம் இல்லாத அடையாளச் சான்றிதழை சட்டப்படி அரசாங்கத்திடம் பெறமுடியும். ஆனால் அதைப் பெற இங்கே நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. அதனால் என்னைப் போல பலருக்கும் சாதி மதமற்ற சான்றிதழைப் பெற எண்ணமிருந்தும் அதைச் செய்ய முடியாமல் இருக்கிறோம்.


நீங்கள் மனிதம் காக்கும் எண்ணத்தோடு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கையாக 'சாதி மதம் இல்லாத நாடு' என்று அறிவித்து தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் தங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களின் வழிகாட்டுதலின்படி சாதி மதம் இல்லாத சான்றிதழை மக்கள், எளிய முறையில் பெற்றுக்கொள்வதற்கான முகாம்களை நடத்த வேண்டுமென்று கோருகிறேன். 


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சமத்துவத்தின் பலத்தையும் அதன் மகத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்தும் விதமாக தாங்கள் ஒரு நடைப் பயணம் மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகிறேன். இதை செய்வதற்கு முழு தகுதியானவர் நீங்கள் என்பதற்கு சான்று உங்களின் பள்ளிச் சான்றிதழ். 


தமிழக வெற்றிக் கழகம் மிகத் தீவிரமாக இந்த புரட்சியை செய்தால்.. கூடிய விரைவில் இந்த நாட்டில் சாதி மதத்தின் கூட்டத்தை விட, மனிதத்தை நேசிக்கும் மக்களின் கூட்டம் அதிகம் என்பதை 'சாதிவாரிய கணக்கெடுப்பில் சமத்துவர் என தங்களை இணைத்துக்கொண்ட மக்களின் எண்ணிக்கையே அதைச் சொல்லும். அப்போது இங்கே உள்ள போலி அரசியல் வாதிகளின் முகத்திரையும் கிழியும். அதன் பிறகு, மக்களே மனிதம் போற்றும் புதிய ஆட்சியை உங்களிடம் நிச்சயம் ஒப்படைப்பார்கள்.


நீங்கள் ஆட்சிக்கு வந்ததும். சாதி மதம் இல்லாத சான்றிதழைப் பெற்றுக்கொண்ட நாளைய தலைமுறை சமுத்துவர்களுக்கு நம் நாட்டை கட்டிக்காக்கக்கூடிய காவல்த்துறை, நீதித்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை முதலியதுறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தினீர்கள் என்றால், இதுவரை ஏட்டில் மட்டுமே இருந்த சமத்துவம் என்ற வார்த்தை எல்லோருடைய எண்ணத்திலும் வளரத்தொடங்கும். மனிதம் போற்றும் தலைவராக எதிர்காலத்தில் நீங்கள் போற்றப்படுவீர்கள். 


உங்கள் அரசியல் பயணம் இந்த நாட்டில் புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும். மனிதத்துக்கான ஒரு அடையாளத்தை நீங்கள் உருவாக்கினால் உலக வரலாற்றிலே இதை செய்த முதல் அரசியல் தலைவராகவும் பார்க்கப்படுவீர்கள். மொத்த உலகமே உங்களின் இந்த முயற்சியை மனதாரப் பாராட்டும். உங்களை உயிராக நேசிக்கும் உங்கள் ரசிகர்களை மனிதம்' காக்கும் காவலராக நீங்கள் மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தேவராஜ்.


கதாசிரியர் தேவராஜ் முன்னதாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான "நெருப்புடா," ஜெயம் ரவி நடித்து வெளியான "பூமி" போன்ற படங்களில் துணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இதைத் தொடர்ந்து தான் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் சரத்குமார் மற்றும் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடித்து வெளியான "ஹிட் லிஸ்ட்" படத்திற்கு கதாசிரியர் ஆனார்.

No comments:

Post a Comment