Featured post

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : 'தி வெர்டிக்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் தள்ளிவைப்பு

 இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : 'தி வெர்டிக்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் தள்ளிவைப்பு..! 'தி வெர்டிக்ட்' படத்தின் செகண்ட்...

Saturday, 10 May 2025

நோர்வே திரைப்பட விழாவில் கலைமகன் விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா

 *நோர்வே திரைப்பட விழாவில் கலைமகன் விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா*






*நோர்வே திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகர் சௌந்தரராஜா*


தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள சௌந்தரராஜா நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். 


அந்த வகையில், இவர் மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற பெயரை அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பில் மரங்களை நடுவது மற்றும் பொது மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார்.


நடிப்பு மற்றும் சமூக பணி என பிசியாக சுழன்று கொண்டிருக்கும் நடிகர் சௌந்தரராஜாவுக்கு நோர்வா தமிழ் திரைப்பட விருது விழாவில் "கலைமகன் 2025" என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் கடந்து சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதை பாராட்டி இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. 


இந்த விருது வென்றது குறித்து நடிகர் சௌந்தரராஜா பேசும் போது, "நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் நடிகனாக 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.


இன்னொரு பக்கமாக, இயற்கையின்மீதும் சமூகத்தின்மீதும் கொண்ட பற்றினால், கடந்த 10 ஆண்டுகளாக சமூக ஆர்வத்துடன் “மண்ணுக்கும் மக்களுக்கும்” என்ற சமூக நல அறக்கட்டளை மூலம் பல அறப்போராட்டங்களை நடத்தி வருகிறேன்.


குறிப்பாக, 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, முதற்கட்டத்தில் முக்கியமான பத்து பேரில் நானும் ஒருவனாக இருந்தேன். இறுதி வரை போராடியவர்களில் நானும் ஒருவன். அதோடு ஸ்டெர்லைட், நெடுவாசல், நீட் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், காவேரி தண்ணீர் பிரச்சினை, விவசாயிகளுக்கு ஆதரவாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் எனப் பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் என் குரலை பதிவு செய்துள்ளேன்.


மண்ணின் மீதுள்ள அன்பினால், இயற்கை வளங்களை பாதுகாப்பதும், நீர் நிலைகளை காப்பதும், மரங்களை நட்டு வளர்ப்பதும் என தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து உள்ளேன். கடந்த ஏப்ரல் 2025 முதல் நேர்மையான இயற்கை விவசாயிகளுக்காக “மண்ணுக்கும் மக்களுக்கும் நம்மாழ்வார் விருது” மற்றும் ரூ.5,000 பரிசுத்தொகையை, ஆறு மாதங்களுக்கு ஒரு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறேன்.


நான் சினிமா துறையில் சில விருதுகளைப் பெற்றிருந்தாலும், சமூக ஆர்வலராக பல விருதுகளைப் பெற்றுள்ளேன். இன்று என் கலை மற்றும் சமூக களப்பணிக்காக, சர்வதேச அளவில் நடைபெற்ற நோர்வே தமிழ் திரைப்பட விருது விழாவில் எனக்கு “கலைமகன் 2025” விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விருதை நோர்வே நாட்டின் ஒஸ்லோ மேயர் திரு அமீனா மெபல் ஆண்ட்ரசன்  மற்றும் நம் ஈழத்தமிழர் வசீகரன் ஆகியோர் கைகளால் வாங்கியது எனக்கு பெருமை, இதை உலகத் தமிழர்களின் பாராட்டாக நான் கருதுகிறேன்.


இந்த விருது எனக்கு புதிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியும் கொடுத்து இருக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த விருதை, உலகெங்கும் உள்ள நேர்மையான இயற்கை விவசாயிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்," என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment