*தளபதி விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் நவம்பர் 21 அன்று அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது*
*ஜாகுவார் ஸ்டுடியோஸ் பி. வினோத் ஜெயின் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை வெளியிடுகிறார்*
தளபதி விஜய் நடித்த 'கில்லி', 'சச்சின்', 'குஷி' உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.
'மிருகா', 'மாயப்புத்தகம்', ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'கோல்மால்' உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எண்ணற்ற படங்களை விநியோகம் செய்தவருமான பி. வினோத் ஜெயின், ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
இது குறித்து பேசிய அவர், "கடந்த 2001ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியான 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தளபதி விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம், வைகைப்புயல் வடிவேலுவின் என்றென்றும் நெஞ்சில் நிற்கும் நகைச்சுவை, இசைஞானி இளையராஜாவின் இதயம் தொடும் இசை என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள படத்தை வரும் நவம்பர் 21 அன்று மீண்டும் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. அனைத்து வயதினரும் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான இப்படத்தை ரசிகர்களும் மக்களும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து கண்டுக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.
தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, அபிநயா ஸ்ரீ, ஸ்ரீமன் சார்லி, மதன் பாப் உள்ளிட்டோர் நடித்துள்ள 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை ஸ்வர்க்கசித்ரா சார்பில் அப்பச்சன் தயாரிக்க சித்திக் இயக்கியிருந்தார். ஆனந்தக்குட்டன் ஒளிப்பதிவு செய்ய பி. லெனின் மற்றும் வி.டி. விஜயன் படத்தொகுப்பை கையாண்டிருந்தனர்.
***
*






No comments:
Post a Comment