*கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது
நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது,
என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம்.
நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். சுகுமாரின் ஒளிப்பதிவைப் பார்க்கும்போது அழகான கனவு போல இருக்கும். லிங்குசாமி சார், போஸ் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குனர் நிதிலன் பேசும்போது,
இயக்குனர் பிரபு சாலமன் மிகவும் யதார்த்தமான, நேர்மையான மனிதர். அவர் மனதில் பட்டதை தயங்காமல் வெளிப்படையாக கூறி விடுவார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஓடாத நல்ல படம் வேண்டாம், ஓடுகின்ற மோசமான படம் வேண்டாம், ஓடுகின்ற நல்ல படம் வேண்டும் என்று பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார். அப்போது குறை நிறைகளை அழகாக எடுத்துக் கூறுவார். குறைகளைக் கூட நேர்மறையாக கூறுவார். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு பிரபு சாலமன் சார் முக்கிய காரணம். அவருக்கு என்னுடைய நன்றி.
கும்கி தமிழ் சினிமாவில் முக்கியமான படம் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோல ஃபேன் பாய் சம்பவம் என்று கூறுவார்கள் அல்லவா? அதுபோல ஃபேன் சம்பவம் என்று ஒன்றை கூறினார். அவர் கூறியதை போல அப்படம் மாபெரும் வெற்றியடைந்தால் இன்னொரு அமைதிப்படை படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படம் கும்கி-2 படத்திற்கு பிறகு வெளியாகும் என்று நினைக்கிறேன்.
பைசன் படத்தில் மாஸ் காட்டிய நண்பர் பிரசன்னா, சுகுமார், மதி மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அசோசியேட் அனைவருக்கும் வாழ்த்துகள்.
கும்கி -1 படம் வெற்றிபெற்றது போல, அதைவிட பெரிதாக கும்கி-2 வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குனர் மடோன் அஸ்வின் பேசும்போது,
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணர்வு இப்போதும் வருகிறது. ஏனென்றால், நீதிபதியாக இருந்த பிரபு சாலமன் சார் இருக்கிறார். அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கீகீ-யும் இருக்கிறார். அந்த சீசனில் கலந்து கொண்ட நான், நிதிலன், பாக்கியராஜ் கண்ணன், அஸ்வத் மாரிமத்து போன்ற ஒரு குழுவை வழி நடத்தி இயக்குனர் ஆவதற்கு காரணமாக இருந்தவர் பிரபு சாலமன் சார் தான்.
என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு கதை சொல், நான் தயாரிக்கிறேன் என்றார். நான் வேலையை விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என்னிடம் இப்போது கதை இல்லை, ஆகவே உங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன் என்றேன்.
அவருக்கு பிடித்த கதை சொல்லும் இடம் அவருடைய இன்னோவா கார் தான். தொடரி படம் முதல் இன்னும் வெளியாகாத மேம்போ படம் வரை ஒரு வரி கதை தெரியும். அதில் கும்கி -2 மட்டும் பேசவில்லை. பேசியிருந்தால் இந்த கதையையும் நான் படித்திருப்பேன்.
கும்கி-1 படத்தை திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தது போல இப்படத்தையும் திரையரங்கிற்கு சென்று மக்கள் கொண்டாடுவதை பார்க்க ஆவலாக உள்ளேன்.
என்னுடைய மண்டேலா மற்றும் மாவீரன் படங்களில் இருக்கும் குறை நிறைகளை கூறிய லிங்குசாமி சாருக்கு நன்றி.
இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் பிருந்தா சாரதி பேசும்போது,
லிங்குசாமி படத்திற்கு தொடர்ந்து நான் தான் வசனம் எழுதி வருகிறேன். நன்றாக எழுதுவேன் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய நண்பன் என்ற காரணத்தினால் எனக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
அவரது குடும்பத்தில் இருந்து மதி இரண்டாவது தலைமுறையாக சுலபமாக சினிமாவிற்கு வந்தாலும் வெற்றிபெறுவது எளிதல்ல என்பதை கொரோனா சொல்லியிருக்கிறது. மதி இதுபோல நல்ல கதைகளைக் கேட்டு நிறைய படங்கள் நடித்து வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஒரு காட்டில் பறவைகள், விலங்குகள், அணில் போன்றவை எங்கிருக்கும். காட்டில் ஒரு மழைத்துளி விழுந்தால் எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு காட்டைப் பற்றி நுணுக்கமாக அறிந்து வைத்து அழகாக காட்டியிருக்கிறார் சுகுமார். வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை அறிந்து வைத்திருக்கிறார்.
சமீபத்தில் நான் அதிகமாக கேட்ட பாடல் தீக்கொளுத்தி. இப்பாடலும், பைசன் படமும் நிவாஸ் கே பிரசன்னாவிற்கு மிகப்பெரிய கதவு திறந்திருக்கிறது. இந்த சமயத்தில் கும்கி-2 வருவது இன்னமும் சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னாவிற்கு வாழ்த்துகள்.
மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படம் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன் என்றார்.
இயக்குனர் சரண் பேசும்போது,
இப்படம் தயாரிப்பில் இருக்கும்போது லிங்குசாமி அலுவலகத்தில் பார்த்தேன். படம் முழுவதும் காடாகவே இருக்கிறதே என்று நினைத்தேன். பிறகு தான் ஜெயந்தி லால் காடா காரணம் என்று தெரிந்தது.
நான் கதாநாயகன் மதி சார்பாக இங்கு நிற்கிறேன். ஒவ்வொரு நாயகனும் வளரும் நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு, அவர்கள் ஆர்வத்திற்கு தீனிப் போடும் இயக்குனர், எந்த தடையும் சொல்ல தயங்காத தயாரிப்பாளர் என்று இவ்வளவும் கிடைப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. இவை அனைத்தும் மதிக்கு கிடைத்திருக்கிறது.
பிரபு சாலமன் படத்தில் உணர்வுபூர்வமாக இருக்கும். அவர் கைப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட தூர பயணத்திற்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றது. அது போல மதியும் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.
10 வருடமாக மறைந்திருந்து இசையமைத்துக் கொண்டிருந்த நிவாஸ் கே பிரசன்னா இன்று பாடுகிறார். நீண்ட வருடத்திற்குப் பிறகு நல்ல இசையை பைசன் படத்தில் தான் கேட்டேன்.
அதேபோல், மண்டேலா படத்தைப் பார்த்து வியந்தேன். பல இளம் இயக்குனர்கள் இங்கு வந்து இந்த விழாவை ஆரம்பித்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாயகியின் அப்பாவை எனக்கு நன்றாக தெரியும். அவர் நாயகியின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். ஷ்ரதாவை வரவேற்கிறேன்.
லிங்குசாமி ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக நுணுக்கமாக செதுக்குகிறார் என்று அருகில் இருந்து பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்டவர் இப்படத்திற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.
பலருடைய வெற்றிக்கும், அவர்களுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக திருப்பதி பிரதர்ஸ் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் உயரத்திற்கு செல்ல வேண்டும். அவர்களின் 100வது படத்தின் விழாவிற்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
கும்கி-1 படத்தை என்னுடைய படத்தின் படப்பிடிப்பில் திருநெல்வேலியில் இருந்தேன். திரையரங்கில் சென்று பார்க்கும் போது நீர்வீழ்ச்சி காட்சியில், சூப்பர் ஸ்டார் படத்திற்கு போடுவது போல திரையை சுற்றி லைட் போட்டு இப்பாடலை படமாக்கியவர் சுகுமார் என்று பெயர் போட்டார்கள். திரையரங்கில் அனைவரும் கொண்டாடினார்கள்.
யானை இருக்கும் படம் என்றும் தோற்காது. இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்றார்.
நடிகர் மதி பேசும்போது,
இது என்னுடைய முதல் மேடை. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய ஜெயந்தி லால் காடா சாருக்கு நன்றி.
பிரபு சாலமன் சார் படத்தின் நாயகனாக, அவருடைய பூமியாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அவர் கூறியதை கேட்டு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இங்கு வந்திருக்கும் இயக்குனர் அஸ்வின், நிதிலன் சார், பிருந்தா சாரதி சார், சரண் சார், ஜெகன், விஜய் பாலாஜி சார், என் நண்பன் உன்னி அனைவருக்கும் நன்றி. என்னை இப்படத்திற்கு அழைத்து வந்தது லிங்குசாமி சார் தான். சினிமாத் துறைக்கு என்னை அழைத்து வந்தது லிங்குசாமி சார் மற்றும் போஸ் சார் தான்.
சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டிருக்கிறேன். அவருடைய இசையில் இப்படம் அமைந்திருக்கிறது. பொத்தி பொத்தி பாடலை கேட்ட அனைவரும் நன்றாக இருக்கிறது என்றார்கள்.
பைசன் படம் போல இப்படமும் வெற்றியடையும் என்று நம்புகிறேன். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் சரண்யாவிற்கு மிக்க நன்றி என்றார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசும்போது,
என்னை கதாநாயகன் என்று கூறுகிறார்கள். ஆனால், இசையில் நான் ஆன்மாவோடு கலந்து இன்னும் ஆழமாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் நடப்பதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது பிரபு சாலமன் சார் தான். 2020 கொரோனா காலத்தில் சென்னையில் சாலையில் யாரும் இருக்க மாட்டார்கள். காலையிலேயே வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் விடுவோம். ஒரு நாளைக்கு 2 வேளை தான் சாப்பாடு. ஒவ்வொரு காட்சியாக ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டே இருப்போம்.
இப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் வந்த கும்கி-யில் இமான் சார் கூட்டணியில் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தில் இருந்து தான் இப்படத்திற்கான ஆன்மாவை எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு நன்றி.
நாயகன் மதி நேரத்தை மிகச் சரியாக கையாள்வதில் ஒழுக்கத்தை பார்த்தேன். 7 மணி என்றால், 7.01 மணிக்கோ, 6.59 மணிக்கோ வரமாட்டார். சரியாக 7 மணிக்கு தான் வருவார்.
இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய சக்தியாக நினைக்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் காடா பேசும்போது,
கும்கி-2 பட தலைப்பை பென் ஸ்டூடியோஸ்-க்கு கொடுத்ததற்காக லிங்குசாமி சாருக்கும் போஸ் சாருக்கும் நன்றி. இந்த சிறிய படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து இங்கு வந்திருக்கும் மிகப்பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி.
கும்கி-2 படத்தை பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. காட்டில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமம். ஆனால், அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக மதி மிகவும் போராடி நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஹ்ரித்திக் ரோஷன்.
இசைக்கு மொழி கிடையாது. கும்கி முதல் படத்தில் இசை நன்றாக இருந்தது. அதுபோல, கும்கி-2 படத்தில் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மிக நன்றாக இருக்கிறது என்றார்.
இயக்குனர் பிரபு சாலமன் பேசும்போது,
என்னுடைய நண்பர்கள், அனைத்து தயாரிப்பாளர்கள், குடும்ப உறவினர்கள் என என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். இப்படத்திற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள், பட்ட பாடுகள் சொல்லி முடியாது.
இதற்காக என்னுடன் உழைத்த என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் புவன், கலை இயக்குனர் தென்னரசு, நான் நினைப்பதை எடுத்துக் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மதி, ஆன்ட்ரோ, ஷ்ரதா, அர்ஜுன் தாஸ் மற்றும் நிறைய நடிகர்கள் பங்கெடுத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. நெல்லையம்புதி என்ற இடத்தில் படப்பிடிப்பிற்காக காட்டிற்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். முதன்முதலில் லோகேஷன் பார்க்க போகும்போது உடலில் உள்ள உள்உறுப்புகள் அனைத்து குலுங்கி போனது.
அந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு. ஒரு டார்மென்ட்ரிகுள்ள குளிரில் முழு படக்குழுவினரும் மிகவும் சிரமப்பட்டார்கள். அங்கிருக்கும் உன்னி கடித்து பலருக்கும் தோல் பிரச்னை வந்து அவஸ்தைப்பட்டார்கள்.
இப்படம் நீளமான பயணம். 2018-ல் தொடங்கி, 2019-ல் முடித்துவிட்டு டிசம்பரில் போட்டு காட்டினோம். ஆனால் 2020-2021ல் ஊரடங்கு. கொரோனா வந்து அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் மிகவும் உறுதுணையாக இருந்தது லிங்குசாமி சார் மற்றும் ஜெயந்திலால் காடா சார் தான்.
முதல் ரீல் ஹார்ட் டிஸ்க் பெங்களுருவில் இருக்கும். அடுத்த ரீல் எந்த இன்ஜினியரிடம் இருக்கிறது என்று தெரியாது. அதன் பிறகு 2023ஆம் ஆண்டு இப்படத்திற்கான் அடுத்தகட்ட வேலைகளை தொடங்கினோம்.
எனக்கு எப்போதும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதற்காக நான் நிறைய சண்டைபோட வேண்டியிருந்தது.
தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார்.
என்னுடைய பிள்ளைகளான அஸ்வின், நிதிலன், இயக்குனர் பிருந்தா சாரதி, ஜெகன், சரண் ஆகியோர் இங்கு என்னை வாழ்த்த வந்திருக்கிறீர்கள், நன்றி.
அதேபோல், பாரதி கண்ணன், இயக்குனர் திருச்செல்வம், ஆகாஷ் வந்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா காலத்தில் இறந்துவிட்டார்கள்.
டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் 11 ஆஸ்காரை கையில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் இசையமைப்பாளருக்கு அளிக்கிறேன் என்றார். ஏனென்றால், இந்த கப்பலை நான் கட்டினேன், ஆனால் அவர் தான் உயிர் கொடுத்தார் என்றார். அதுபோல, அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவிற்கு ஆன்மாவை கொடுத்திருக்கிறார்.
படம் பார்க்கும் போது பல இடங்களில் அவருடைய இசை கதையை மீண்டும் எழுதியிருப்பது தெரியும். நிவாஸ் கே பிரசன்னாவை நான் மிகவும் தொந்தரவு செய்திருக்கிறேன். அவர் துயரத்தை நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும், படம் நன்றாக வருவதற்காகத்தான் என்று அவரும் புரிந்துகொண்டார். இது அவர் ஜொலிப்பதற்கான நேரம் என்றார்.
இயக்குனர் லிங்குசாமி பேசும்போது,
காடா சார் எங்களுக்கு காட் மாதிரி தான். அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு ஹிந்தி தெரியாது. ஆனாலும், நாங்கள் 2 முதல் 3 மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். ஆனால், சினிமாவிற்கு மொழி கிடையாது என்பதை நான் உணர்ந்தேன்.
காடா சார் இல்லையென்றால் ரஜினி முருகன் படம் வெளியாகி இருக்காது. பையா இந்தி படத்திற்காக சந்திக்கும் போது, 14 கோடி ரூபாய் கொடுத்தார்.
ஒரு வருடத்திற்கு ஹிந்தியில் 189 படங்கள் வெளியிட கூடிய மாபெரும் தயாரிப்பாளர் காடா அவர்கள்.
கும்கி-1 படத்தின் விழாவிற்கு ரஜினி சார் மற்றும் கமல் சார் வந்து வாழ்த்தினார்கள். ஆனால், அவர்களுடைய படங்களை ஹிந்தியில் வெளியிட கூடியவர் ஜெயந்திலால் காடா சார். அவர் மதியை அறிமுகப்படுத்தியிக்கிறார். ஹிருத்திக் ரோஷன் என்று மதியை ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.
இப்படம் மிகவும் காலதாமதமாகியிருக்கலாம். ஆனால், காடா சார் படத்தைப் பார்த்துவிட்டு பிரபு சாலமனை சிறந்த இயக்குனர் என்று பாராட்டினார்.
கும்கி-1 படம் திருவண்ணாமலையில் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பதற்காக போய் இருந்தேன். எங்கள் திரையரங்கில் இதற்கு முன் உலகம் சுற்றும் வாலிபன், திரிசூலம், ஒரு தலை ராகம், 16 வயதினிலே, முரட்டுக் காளை இதுபோன்ற படங்களுக்குத்தான் இதுபோன்ற கூட்டம் வந்தது. அந்த பட்டியல் கும்கி படமும் இடம்பெற்றிருக்கிறது என்று கூறினார்கள்.
கும்கி-1 படத்தின் பாடல்களை விட கும்கி-2வில் இருக்குமா என்று தெரியாது. ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவின் முந்தைய படம் போல இப்படத்தில் இருந்துவிட்டாலே போதும். சினிமாவின் ஒட்டுமொத்த வெளிச்சமும் நிவாஸ் கே பிரசன்னா மீது தான் இருக்கிறது.
நிதிலன் இயக்கிய மகாராஜா படம் என்னுடைய 10 சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.
கும்கி-2 நிச்சயம் மாபெரும் வெற்றியடையும்.
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்
தொழில்நுட்பக் குழு:
இயக்கம் – பிரபு சாலமன்
தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – எம். சுகுமார்
எடிட்டிங் – புவன்
கலை இயக்கம் – விஜய் தென்னரசு
சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா
ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்
தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்
ஸ்டில்ஸ் – சிவா
புரமோஷன் – சினிமாபையன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

No comments:
Post a Comment