ஸ்ரேயாஸ் 2k23-24 & “ஷா கலா உத்சவ்’’ 24
சென்னை, தி.நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் அனைத்து கல்லூரிகளுக்கிடையிலான கலைவிழா – ‘’ தி மேஜிக் ஆஃப் மெட்ராஸ் ”
ஸ்ரேயாஸ் 2k23-24 நடைபெற்றது. தொடக்க விழாவில் பிரபல திரைப்பட நடிகர் திரு சதீஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கல்லூரிச் செயலர் ஸ்ரீமதி உஷா அபயஸ்ரீஸ்ரீமால், முதல்வர் முனைவர் சா.பத்மாவதி, துணை முதல்வர் ச.ருக்மணி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் தம் வரவேற்புரையில் சிறப்பு விருந்தினர் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகத் திரைத்துறையில் சாதனைகள் புரிந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். சிறப்பு விருந்தினர் உரையாற்றுகையில் கல்லூரி மாணவிகள் தங்கள் வாழ்க்கையில் தேவையற்ற பழக்கவழக்கங்களைத் தவிர்த்து நல்ல நணபர்களை உருவாக்கிக் கொள்வதுடன் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டுமென்றார். இந்நிகழ்ச்சியில் பாலசந்திரன், மணிசந்திரா, ஹரி, சரண், ஸ்ரீதர், டி.எஸ்.கே, திருச்சி சரவணகுமார், ரோஷன் உள்ளிட்ட திரைத்துறைத் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
முதல் நாள் அனைத்துக் கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளும் இரண்டாம் நாள் ஷசுன் கல்லூரியின் துறைகளுக்கிடையிலான போட்டிகளும் நடைபெற்றன இக்கலைவிழாவில் தனிப்பாடல், குழுப்பாடல், நடனம், முக ஓவியம், மீம்ஸ் உருவாக்குதல், நவீன நடை, மூழ்கும் கப்பல், இசைக்கேற்ற நடனம், ரீல் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டன. அண்ணா ஆதர்ஷ் கல்லூரியைச் சேர்ந்த கீர்த்தனப்பிரியா “மிஸ் ஸ்ரேயாஸ்” பட்டத்தை வென்றார். கல்லூரிகளில் முதலிடத்திற்கான கோப்பையை ஜெ.பி.எ.எஸ் கல்லூரியும் இரண்டாவது இடத்தை மகளிர் கிறித்தவக் கல்லூரியும் வென்றன.
ஷசுன் கல்லூரித் துறைகளுக்கிடையிலான போட்டிகளில் கணினித்துறை முதலிடத்தையும் சிறப்பு வணிகவியல் துறை இரண்டாம் இடத்தையும் வென்றன. சிறப்பு வணிகவியல் துறையைச் சேர்ந்த தாரிகா “மிஸ் ஷசுன்” பட்டத்தை வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் கலைவிழா ‘’ஷா கலா உத்சவ்” 24 ஞாபகம் வருதே – பள்ளிக்காலம்- ஏக்கம் நிறைந்த நினைவுகள் என்ற தலைப்பில் நடைபெற்றது. தொடக்க விழாவில் பிரபல கர்நாடக இசை மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகர் திரு.பி.உன்னிகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கல்லூரிச் செயலர் ஸ்ரீமதி உஷா அபயஸ்ரீஸ்ரீமால், முதல்வர் முனைவர் சா.பத்மாவதி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஷக்தி செல் இயக்குநர் முனைவர் ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்லூரி முதல்வர் தம் வரவேற்புரையில் சிறப்பு விருந்தினரின் சாதனைகளை எடுத்துக் கூறி, அவரது பள்ளி அனுபவங்களை நினைவு கூர்ந்தார். சிறப்பு விருந்தினர் அவர்கள் உரையில் மாணவிகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த களம் அமைத்துக் கொடுத்திருக்கும் ஷசுன் கல்லூரியையும், மிக அழகாக இவ்விழாவிற்கு அனைத்து வகையிலும் வடிவமைப்புகளைச் செய்து தந்திருக்கின்ற காட்சி ஊடகவியல் துறையினரையும் பாராட்டினார். தொடர்ந்து “ஷக்தி செல்” பயணம் குறித்த காணொளிக் காட்சி திரையிடப்பட்டது. அடுத்து ஷசுன் சக்தி செல் மற்றும் ஷசுன் கலை மற்றும் பண்பாட்டு மையத்தின் ஆண்டறிக்கைகள் வாசிக்கப்பட்டன.
நாத சங்கமம் - சேர்ந்திசை, பாரம்பரிய நடனம், குழுநடனம், நாடகம், வானொலி-காணொளித் தொகுப்பு ஆகியவற்றுடன் ஓவியம், நவீன நடை, சமையல் கலை, அழகுக்கலை, கைவினை மற்றும் கலைப்பொருட்கள் மேடையில் காட்சிப்படுத்தப்பட்டன. ஷசுன் மாணவியரின் கலைத்திறமைக்கான களமாக அமைந்த இவ்விழாவில் நாடகக்குழு முதலிடத்தை வென்றது. “மிஸ் சக்தி” பட்டத்தை மாணவி இந்திரா வென்றார்.நிறைவு விழாவில் “பிக்பாஸ்” தொலைக்காட்சி நிகழ்ச்சிப்புகழ் அனன்யா அவர்கள் வெற்றி பெற்ற குழுவினருக்குப் பரிசு வழங்கினார்.
No comments:
Post a Comment