Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Monday 26 February 2024

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ்

 *கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன*






கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூல் ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன.


முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு - சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெருங்கவிதை நூல் மகா கவிதை. அது சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது என்று மலேசிய இந்தியக் காங்கிரஸின் தேசியத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சென்னையில் அறிவித்தார்.


மலேசியப் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்களும், தேர்ந்த திறனாய்வாளர்களும் கூடிய மதியுரைஞர் குழு பெருந்தமிழ் விருதுக்கு மகா கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. மாஹ்சா பல்கலைகழக வேந்தர் டான்ஸ்ரீ முஹம்மது ஹனிபா, மலாய்ப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரைஞர் முனைவர் கோவி.சிவபாலன், டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா, பாவலர் முனைவர் முரசு நெடுமாறன், தமிழ்ப்பெருந்தகை கம்பார் கனிமொழி குப்புசாமி, இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், மலாய்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை, மேனாள் காவல்துறை ஆணையாளர் டத்தோஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன், மலேசியப் புத்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் டத்தோ பரமசிவம் முத்துசாமி, மலேசியப் புத்ரா பல்கலைக்கழக முதுநிலை விரிவுரைஞர் முனைவர் வீரமோகன் வீரபுத்திரன் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்து மகா கவிதையை விருதுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.


மார்ச் 8ஆம் தேதி மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் புகழ்பெற்ற உலக வர்த்தக மையத்தில் விருதளிப்பு விழா நடைபெறுகிறது. மலேசிய இந்தியக் காங்கிஸின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமை தாங்குகிறார். மலேசிய இந்தியக் காங்கிஸின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னிலை வகிக்கிறார். பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.


“மகா கவிதையைப் பெருந்தமிழ் விருதுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் மதியுரைஞர் குழுவுக்கு என் வணக்கம். விருதளிப்பு விழாவை முன்னெடுத்திருக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவருக்கும் என் நன்றி.  இந்த விருதை நான் பெரிதும் மதிக்கிறேன். பெருந்தமிழ் விருது தமிழ் உலகுக்கு ஒரு மகுடம். ஆனால், இது என் ஒரு தலைக்கு மட்டுமல்ல. ஒரு தமிழ்த் தலைமுறையின் ஒவ்வொரு தலைக்கும் சூட்டப்படுவது என்றே கருதுகிறேன். மலேசியத் தமிழர்களுக்கும் மலேசியத் திருநாட்டுக்கும் மலேசிய மக்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்” என்றார் கவிஞர் வைரமுத்து.

No comments:

Post a Comment