Featured post

Draupathi 2 Movie Review

 Draupathi 2 Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம draupathi 2 படத்தோட review அ பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  mohan g...

Wednesday, 23 July 2025

*15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' படத்தின் 'ஹேப்பி' பாடல்


*15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' படத்தின் 'ஹேப்பி' பாடல்*


*20 பிரபல பாடகர்கள் பாடியதோடு திரையிலும் தோன்றியுள்ள 'ஹேப்பி' பாடல் வைரல் ஆனது குறித்து இயக்குநர் சித்தார்த் சந்திரசேகர் பெருமிதம்*


ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பலே பாண்டியா'. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார். 


'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹேப்பி' பாடல் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகி 10 லட்சம் பார்வைகளை கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கவிஞர் வாலி எழுதிய இப்பாடலை 20 பிரபல பாடகர்கள் பாடியதோடு திரையிலும் தோன்றி இருந்தனர்.


ஹரிசரண், தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன் மாதவ், பரவை முனியம்மா, மலேசியா வாசுதேவன், ரஞ்சித், ஆலாப் ராஜு, ரகீப் ஆலம், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், வேல்முருகன், மாணிக்க விநாயகம், முகேஷ், மால்குடி சுபா, திவ்யா, அனிதா, சுசித்ரா, விஜய் யேசுதாஸ், ராகுல் நம்பியார் ஆகியோர் வாலியின் உற்சாக வரிகளில் நேர்மறை எண்ணங்கள் ததும்பும் இப்பாடலை பாடி இருந்தனர். மலேசியா வாசுதேவன் தவிர மற்ற அனைவரும் திரையிலும் தோன்றி பாடலுக்கு அழகு சேர்த்தனர். 


இத்தனை ஆண்டுகள் கழித்து 'ஹேப்பி' பாடல் வைரல் ஆனது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள இயக்குநர் சித்தார்த் சந்திரசேகர், "இன்றைய தலைமுறையினர் இப்பாடலை ரசிப்பது கவிஞர் வாலி அவர்களின் சாகாவரம் பெற்ற வரிகளையும், தேவன் ஏகாம்பரத்தின் இளமையான இசையையும், 20 பாடகர்கள் ஒன்றிணைந்த அரிதான நிகழ்வையும் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. இப்பாடலை வெறும் இரண்டே தினங்களில் அனைவரையும் ஒன்றிணைத்து புதுச்சேரியில் படமாக்கினோம். அக்காபெல்லா வகையிலான இப்பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தார்," என்றார். 


தொடர்ந்து பேசிய இயக்குநர் சித்தார்த் சந்திரசேகர், "பலே பாண்டியா படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. கவிஞர் தாமரையும் பாடல் எழுதி இருந்தார். மகிழ்ச்சியை பரப்பும் 'ஹேப்பி' பாடலுக்கு பங்காற்றிய அனைவரையும் இந்த தருணத்தில் நினைவு கூர்வதோடு இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார். 


பிரபல திரைப்பட விளம்பர வடிவமைப்பாளரான சித்தார்த் சந்திரசேகர், 'சந்திரமுகி', 'அந்நியன்', 'கஜினி', 'ஏழாம் அறிவு' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது சென்னையின் முன்னணி இன்டீரியர் டிசைனராக வெற்றிக் கொடி நாட்டியுள்ளார். இவரது நிறுவனமான பென்சில் அண்டு மாங்க் சென்னையின் முக்கிய அடையாளங்களான அமெரிக்க துணைத் தூதரக நூலகம் மற்றும் ஷெரட்டன் கிராண்ட் ஹோட்டல் ஆகியவற்றின் உட்புறங்களை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment