*தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு நான்கு தலைமுறைகளாக பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் குடும்பம்*
*விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் 'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்*
வீனஸ் பிக்சர்ஸ் திரு டி. கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜனின் வழிகாட்டுதலோடு நான்காவது தலைமுறையாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜனும் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்து வருகின்றனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பான குடும்ப திரைப்படம் 'தலைவன் தலைவி' உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில், முன்னணி நட்சத்திரங்களுடன் சத்யஜோதி குடும்பம் இணைந்தாலே பிளாக்பஸ்டர் வெற்றியில் தான் முடியும் என்பது தசாப்தங்கள் மற்றும் தலைமுறைகள் தாண்டி மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது.
மக்கள் திலகம்' எம்ஜிஆர் நடித்த 'ரிக்ஷாக்காரன்' மற்றும் 'காவல்காரன்', நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'உத்தம புத்திரன்', ஜெமினி கணேசன் நடித்த 'கல்யாண பரிசு', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மூன்று முகம்', 'பணக்காரன்' மற்றும் 'பாட்ஷா', உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'மூன்றாம் பிறை' மற்றும் 'காக்கி சட்டை', கேப்டன் விஜயகாந்த் நடித்த 'ஹானஸ்ட் ராஜ்', கே. பாக்யராஜ் நடித்த 'அந்த ஏழு நாட்கள்', முரளி நடித்த 'இதயம்', கார்த்திக் நடித்த 'கிழக்கு வாசல்', அஜித் குமார் நடித்த 'விஸ்வாசம்', தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய மெகா ஹிட் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவன் தலைவி'யும் ரசிகர்களிடமிருந்து உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.
குதூகலமான மற்றும் உணர்ச்சிமயமான குடும்ப திரைப்படமான 'தலைவன் தலைவி' வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்து திரைப்படத்தை கண்டு களித்து வருகின்றனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் படக்குழுவினருக்கு பாராட்டுதல்களையும் ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
No comments:
Post a Comment