Featured post

Hotstar Specials Police Police to Stream from September 19 on JioHotstar

 Hotstar Specials Police Police to Stream from September 19 on JioHotstar New promo reveals launch date; introduces Shabana Shahjahan as law...

Tuesday, 15 July 2025

காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' - மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி*

 *'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' - மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி*






*ரிக்கி கேஜ், டினா குவோ, மசா டக்குமி மற்றும் கைலாஷ் சத்யார்த்தி இணைந்து உருவாக்கியுள்ள புதுமையான இசை ஆல்பம் 'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்'*


*மும்முறை கிராம விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்திக்கு செலுத்தும் சர்வதேச இசை அஞ்சலி*



உலகின் முன்னணி இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், டினா குவோ மற்றும் மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். 


இவர்களில் ரிக்கி கேஜ் மூன்று முறை இசையின் உச்ச மரியாதையான கிராம விருதுகளை வென்றுள்ளதும், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளதும் ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி கிராமி விருதை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 


'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' (GANDHI - Mantras of Compassion) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை ஆல்பம் ஜூலை 14 அன்று வெளியானது. இந்த தலைப்பின் பொருள் கருணையின் மந்திரம் காந்தி என்பதாகும். 


காந்தியடிகளின் தத்துவங்களான அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக 40 நாடுகளில் இருந்து 230 இசைக் கலைஞர்களின் பங்களிப்போடு இந்த இசை ஆல்பம் உருவாகி உள்ளது. உலக நாடுகள் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் இந்த காலகட்டத்தில் மகாத்மா காந்தி போதித்த விழுமியங்கள் இன்றைக்கும் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த ஆல்பம் அமைந்துள்ளது. 


பண்டைகால சர்வதேச மற்றும் இந்திய இசை முதல் இன்றைய நவீன இசை வரை அனைத்தையும் ஒன்றாய் பிணைத்து ஒரு ஆத்மார்த்த இசை அனுபவத்தை வழங்கும் 'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' இசை ஆல்பம் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இது குறித்து பேசிய ரிக்கி கேஜ், "மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் முதல் நெல்சன் மண்டேலா வரை பல தலைமுறைகளின் தலைவர்களுக்கு மகாத்மா காந்தி உந்து சக்தியாக திகழ்கிறார். அவரது தத்துவ ஜோதியை அணையாமல் காப்பதற்கான எங்களது சிறிய காணிக்கையே இந்த ஆல்பம். மகாத்மா காந்தியை போன்று எல்லைகளை கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இசைக்கும் உள்ளது," என்று தெரிவித்தார். 


இசை ஆல்பம் குறித்து பேசிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, "மகாத்மா காந்தியை கொன்றவருக்கு சில மனிதர்கள் என்றுமே மறைவதில்லை என்பது தெரிந்திருக்கவில்லை. காந்திக்கு என்றும் அழிவில்லை, அவரது வாழ்க்கைப் பாடங்கள் காலத்தை கடந்தவை மற்றும் ஒட்டுமொத்த உலகத்திற்குமானவை. தேசம், காலம் உள்ளிட்ட அனைத்தையும் கடந்து காந்தியடிகள் நம்மை தொடர்ந்து வழி நடத்துகிறார். அதற்கான சான்று தான் இந்த இசை அஞ்சலி," என்று கூறினார். 


லோனி பார்க், ஜோர்டன் புட்டோவ், கைலாஷ் சத்யார்த்தி மற்றும் வானில் வெய்காஸ் ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தின் இணை தயாரிப்பாளர் சுமதி ராம் ஆவார். 


இந்த இசை ஆல்பத்தின் பின்னணியில் உள்ள உத்வேகம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அமெரிக்கரான சுமதி ராமின் தாய்மண் சார்ந்த கலாச்சார வேர்களோடு பிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இசை ஆல்பத்தின் உருவாக்கம் தொடங்கியது முதல் நிறைவு வரை, குழுவினருடன் இணைந்து ஆக்கபூர்வமாக பணியாற்றியது குறித்து சுமதி திருப்தி கலந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' ஆல்பத்தின் இசை காந்தியின் கொள்கைகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், சத்தியாக்கிரகம், சர்வோதயம், ஸ்வதர்மா, சுதேசி மற்றும் சுயராஜ்யம் போன்ற கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல நம்மைத் தூண்டுவதாகவும் சுமதி கூறினார். 


"இந்த ஆல்பம் இன்றைய உலகிற்கு காந்தியின் லட்சியங்களை எடுத்துச் சொல்லும் அதே வேளையில் ரிக்கி கேஜின் பிரத்தியேக இசை பாணியை தாங்கி வருகிறது. இந்த ஆல்பம் வெறும் அஞ்சலி என்பதோடு மட்டுமில்லாமல், ஒற்றுமை, சத்தியம், அகிம்சை மற்றும் கருணை போன்ற விழுமியங்களை சிந்தித்து, உணர்ந்து, அன்புடனும் மகா கருணையுடனும் வாழ்வதற்கான அழைப்பாகவும் திகழ்கிறது," என்று சுமதி ராம் கூறினார்.


இந்த இசை ஆல்பத்தின் தலைப்பு 'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்',  இப்படைப்பின் ஆழமான ஆன்மாவை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு பாடலும் காந்தியின் போதனைகளான அன்பு, சகிப்புத்தன்மை, மன வலிமை மற்றும் அமைதியான எதிர்ப்பு ஆகியவற்றின் சாரத்தை தாங்கி வருகிறது. உலகம் ஆழமான சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், இந்த இசை ஆல்பம் காந்தியின் போதனைகளின் சக்தியையும் இன்றைய காலகட்டத்திற்கும் அவை பொருத்தமாக உள்ளதையும் நினைவூட்டுகிறது.


ஜூலை 14ம் தேதி வெளியாகி உள்ள இந்த இசை ஆல்பம் உலகளாவிய அளவில் எதிரொலிக்கும் இசைப் பயணமாக இருக்கும். இது காந்தியின் வாழ்க்கையை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அவரது செய்தியை மக்களின் உணர்வில் உயிர்ப்பிக்க முயலும் ஒரு பயணமாக இருக்கும்.


***

No comments:

Post a Comment