நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்! கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி !!
பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்! புதிய கண்டுபிடிப்புகளைத் தேடி வருகிறது.
தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் "பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்" என்ற புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. A2Z லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காமென் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, புதுமையான முயற்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உள்ளது.
இந்த நிகழ்ச்சியை, செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை, புகழ்பெற்ற நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில் இந்நிக்கழ்ச்சி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று தனியார் அரங்கில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் பார்த்திபன் கூறியதாவது…
நாளைய அப்துல்கலாம் ஆகவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த கனவை உருவாக்க நினைத்த RAV, A2Z லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காமென் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
பொதுவாக கொலை குற்றங்களை செய்ய உடந்தையாக இருப்பவர்களுக்கு அதிக தண்டனை, அதே போல் நல்லது செய்யத் தூண்டுபவர்களுக்கு புண்ணியம் அதிகம், அது மாதிரி அதிக புண்ணியம் எனக்கு கிடைக்கும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்டேன்.
இப்படியான ஒரு முன்னெடுப்பை பிரம்மாண்டமாக எடுத்துச் செல்லும் விஜய் தொலைக்காட்சிக்கு என் நன்றிகள். இது சாதாரண நிகழ்ச்சி அல்ல. பல கனவுகளோடு வாய்ப்புகள் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஊன்றுகோலாக இருந்து, அவர்களின் கனவை ஒரு கட்டத்திற்கு எடுத்துச்சென்று அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் இந்த நிகழ்ச்சிக்கு, நான் உடன் நிற்பது எனக்கு மகிழ்ச்சி. கலாம் சாருக்கும் எனக்கும் இடையே நிறைய உணர்வுப்பூர்வமான அன்பு இருக்கிறது. அதைப்பற்றி நிகழ்ச்சியில் நான் நிறைய பகிர்ந்துகொள்வேன்.
இந்த நேரத்தில் நான் நடிகர் விவேக் சாரை அதிகம் மிஸ் செய்கிறேன். பல படவாய்ப்புகள் எனக்கு வந்தபோது அதை பொருத்தமான வேறு நபர்களுக்கு நான் அனுப்பியிருக்கிறேன் அதே போல இந்த நிகழ்ச்சியையும் நடிகர் விவேக் இருந்திருந்தால் அவரைத்தான் செய்ய சொல்லியிருப்பேன். இதற்கு பொருத்தமானவர் அவர் தான். அவரில்லாததால் இந்த நிகழ்ச்சியை நானே ஏற்று நடத்துகிறேன்.
சினிமாவே ஒரு மிகப்பெரிய அறிவியல் அதிசயம் தான். அதில் சாதிக்க நினைத்து பல இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். எனக்கு அறிவியல் பெரிதாக தெரியாது. ஆனால் அறிவியல் உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்த நிகச்சியை நான் தொகுத்து வழங்குவது எனக்குப் பெருமை என்றார்.
ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தளமான, சபா டோஸ் அவர்களின் "பிட்ச் இட் ஆன்" முயற்சி, தென்னிந்தியா முழுவதும் பயணித்து அசாதாரணமான கண்டுபிடிப்புகளைத் தேடும் ஒரு புரட்சிகரமான நிகழ்வை அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நகரங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களின் யோசனைகளை வணிக ரீதியாக மாற்றியமைக்க ஒரு முன்னோடியான வாய்ப்பை வழங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் சிறந்த கண்டுபிடிப்புகளை, புகழ்பெற்ற வல்லுநர்கள் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும்.
தேர்ந்தெடுக்கப்படும் முதல் 100 கண்டுபிடிப்புகள் சென்னையின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அங்கு, சிறந்த 10 கண்டுபிடிப்புகள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் வழிகாட்டும் 15 நாள் இன்குபேஷன் திட்டத்தில் பங்கேற்கும்.
இந்தியாவின் அடுத்த பெரிய யோசனை, தொலைவான ஒரு கிராமத்தின் எளிய கேரேஜிலேயே இருக்கலாம்.
இந்த நிகழ்ச்சி, கண்டுபிடிப்புக்கும் தொழித்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு பாலமாக அமையும்.