வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழி நடக்கும் இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் 'மனு முறை கண்ட வாசகம்' பாடல்*
"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பிரகடனம் செய்து தமிழகத்தில் இருந்து ஒட்டு மொத்த உலகத்திற்கும் அன்பையும் பண்பையும் போதித்த திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய 'மனு முறை கண்ட வாசகம்' பாடலை பிரபல இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ளதோடு காணொலியாகவும் தயாரித்துள்ளார்.
வள்ளலாரின் வழிகாட்டுதல்களை தனது வாழ்க்கை முறையாக பின்பற்றி வரும் சத்யா, அவரது ஸ்டூடியோவில் கடந்த 14 வருடங்களாக அணையா விளக்கை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
'மனு முறை கண்ட வாசகம்' பாடலுக்கு இசை அமைக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் உணர்வு இந்த வருட தைப்பூசத்தின் போது நிறைவேறியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறிய சத்யா, இப்பாடல் வெகு விரைவில் வெளியாகும் என்று கூறினார்.
இது குறித்து பேசிய அவர், "வள்ளலார் நமக்கு வழங்கியுள்ள அற்புதமான வழிகாட்டு பாடல்களில் ஒன்று தான் 'மனு முறை கண்ட வாசகம்'. 'நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!' என்று செல்லும் இப்பாடலின் அறநெறிகளை பின்பற்றினாலே போதும், உலகில் அன்பு சூழ்ந்து அமைதி நிலவும். எனவே, இந்த பாடலை இன்னும் அதிகமானோருக்கு எடுத்து செல்லும் வகையில் இசையமைத்து பாடியுள்ளேன்," என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய இசை அமைப்பாளர் சத்யா, "அன்பும் அறமும் மட்டுமே உலகத்தையும் மக்களையும் தழைக்க செய்யும் மந்திரங்கள். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வள்ளலார் போதித்த இவை இன்றைய நவீன உலகத்திற்கும் மிகவும் பொருத்தமாக உள்ளன. இப்பாடலை வள்ளலார் வழி நடப்போர் மட்டுமின்றி அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன்," என்று தெரிவித்தார்.
சி. சத்யா இசையமைத்து பாடி தயாரித்துள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் 'மனு முறை கண்ட வாசகம்' பாடல் காணொலி வடிவில் உலகமெங்கும் விரைவில் வெளியாக உள்ளது.
***
No comments:
Post a Comment