Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Wednesday, 26 March 2025

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா ஆழ்ந்த இரங்கல்

 *மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா ஆழ்ந்த இரங்கல்*



என் மிக நெருங்கிய‌ நண்பர் மனோஜ் பாரதிராஜா மறைந்து விட்டார் என்ற செய்தி நேற்று மாலை என்னை இடியாய் தாக்கியது. நாங்கள் ஒரே நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள். மனோஜ் மறைவு குறித்து அறிந்தவுடன் சுமார் பத்து நிமிடங்களுக்கு அப்படியே உறைந்து விட்டேன். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. துக்கம் கூட பின்னர் தான் உறைத்தது, தூக்கமும் தொலைந்தது.


மனோஜ் ஒரு மிகச் சிறந்த கலைஞன். ஒரு நடிகனாக பல படங்களில் தன்னை நிரூபித்துள்ளார். இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார். என்னுடைய குறும்படங்களை பார்த்து பாராட்டுவார், நீ இயக்குநராக ஜொலிக்க வேண்டும் என்று கூறுவார். எங்களுக்குள் தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடக்கும், ஒருவருக்கொருவர் நேர்மறை எண்ணங்களை நாங்கள் தொடர்ந்து ஊட்டிக் கொள்வோம்.


தனது தந்தை இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மீது அளவுகடந்த‌ அன்பும் பக்தியும் கொண்டவர் மனோஜ். தன்னுடைய குழந்தைகள், மனைவி மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் மீது பேரன்பு உடையவர். அவர்கள் அனைவரையும் அனாதையாக விட்டுவிட்டு மனோஜ் மறைந்து விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள நெஞ்சம் மறுக்கிறது. என்ன ஆறுதல் சொன்னாலும் இந்த இழப்புக்கு ஈடாகாது. 


எங்கள் நட்பு சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. அவருடைய முதல் படம் தாஜ்மகாலும் என்னுடைய முதல் படம் திருநெல்வேலியும் ஓராண்டு இடைவெளியில் திரைக்கு வந்தன. தொடர்ந்து தொடர்பில் இருப்போம். திடீரென்று ஒரு ஆறு மாதங்கள் பணி காரணமாக ஒரு சிறு இடைவெளி ஏற்படும். பின்னர் ஒன்று கூடுவோம், அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். 


நெருங்கிய நண்பர் மனோஜின் மறைவால் மிகுந்த அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளேன். இந்த நிலையில் மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அப்பா பாரதிராஜா அவர்களும், அம்மாவும் இந்த இழப்பை எப்படி தாங்கிக்கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை. அப்பா பாரதிராஜா அவர்கள் ஒரு குழந்தை மாதிரி. அவரது அழுகை என்னை உலுக்குகிறது. 


மனோஜின் மறைவு எங்கள் நட்பு வட்டாரத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வாழ்க்கை மீது கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கையில் ஒரு இலக்கை நோக்கி போகும் போது பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் கடந்து தான் நாம் முன்னோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.


மிக இள வயதில் நம்மை விட்டு மனோஜ் பிரிந்து சென்றதை ஜீரணிக்க முடியவில்லை. என் நண்பனின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 


***

No comments:

Post a Comment