Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Monday, 28 April 2025

சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட்

 *சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்







ட் ஃபேமிலி' படத்தின்  ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் { முன்  வெளியீட்டு நிகழ்வு} !!* 


நடிகர் சசிகுமார் - சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின்  ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன்,  திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில்  படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். 


எதிர்வரும் மே மாதம் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வினில்.... 



இயக்குநர் ராஜு முருகன் கூறியதாவது...

எல்லாருக்கும் வணக்கம்,  டூரிஸ்ட்ஃபேமிலி படம் பார்த்துவிட்டேன்,  ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு கலகலப்பான, உணர்வுப் பூர்வமான  ஃபேமிலி என்டர்டெயினர்  படமாக இருந்தது.  தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில்  அன்பைப் பேசுகிற,  நம்முடைய மென் உணர்வுகளைப் பேசுகிற மனிதத்தைப் பேசக்கூடிய படைப்புகள் வருவது அரிதாகிவிட்டது. அப்படி வருகிற சில படங்கள் கூட,  கிராப்ட் அளவில் சரியாக இல்லாமல், சுவாரசியம் இல்லாமல் போவதால்,  மக்களுக்கான படங்களாக இல்லாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில் தான், கதையும் படைப்புத் திறனும் சரியாகக் கலந்த கலவையாக  இந்த  அற்புதமான படைப்பு வந்துள்ளது. இந்தப்படம் பார்த்த போதே கண்டிப்பாக இப்படத்தைக் கண்டிப்பாகத் திரையரங்குகளில் மக்கள் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். இயக்குநர் அபிஷன் ஜீவிந் உடைய முதல் படம் போலவே தோணவில்லை, படத்தில் அத்தனை முதிர்ச்சி இருந்தது. ஒரு சிக்கலான பின்னணியை  எடுத்துக்கொண்டு,  எந்த அரசியலும் பேசாமல், மனிதர்களுக்கான அற்புதமான அரசியலைப் பேசியுள்ளார்.  நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை, அறிவுரையாக இல்லாமல், 

செம ஜாலியாக சொல்லியுள்ளார். அவருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. சசிகுமார் சாரை பார்க்கும்போது மிகுந்த  ஆச்சரியமாக இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ அவருக்கென்று மக்களிடம் ஒரு மரியாதை இருந்துகொண்டே இருக்கும். சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள், அடுத்த தளத்தில் இருக்கிறது, அந்தளவில்  மிக  முக்கியமான படமாக டூரிஸ்ட்ஃபேமிலி இருக்கும். அழகான கதைகள் கொண்ட மலையாள படங்கள் மாதிரி தமிழில் வருவதில்லை எனும் ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை உடைக்கிற ஒரு தயாரிப்பு நிறுவனமாக மில்லியன் டாலரை நான் பார்க்கிறேன். அப்படி ஒரு அழகான படைப்புகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். இப்படம் அவர்களுக்கு ஹார்ட்ரிக் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 


இயக்குநர் சசி கூறியதாவது...

ஒரு திரைப்படம் பார்க்கிற யாரையுமே சங்கடப்படுத்தாமல் அதே சமயத்தில், சந்தோஷப்படுத்துகின்ற வகையில் ஒரு படம் செய்வது அதிலும் அதை அதை முதல் படமா செய்வதற்கு மிகப்பெரிய மனது வேண்டும். இயக்குநருக்குப் பெரிய மனது இருக்கிறது. படத்தில் ஒவ்வொரு காட்சியும் அத்தனை அழகாக அற்புதமாக உள்ளது.  ஸ்ரீலங்கா பின்னணியில் ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதில் அரசியல் பேசாமல், அன்பைப் பேசியதற்காகவே இது தமிழ் சினிமாவில்  மிக முக்கியமான படமாக உருக்கும்.  மில்லியன் டாலர் நிறுவனம் மெயில் பார்த்து இந்தக்கதையைக் கேட்டிருக்கிறார்கள், இது தமிழ் சினிமாவில் நடக்காத அதிசயம், அவர்கள் நல்ல கதைகளைத் தேடி, தயாரிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு அப்பாவாக சசிகுமார் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார், சிம்ரன் மேடம் உடனான காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது. முழுக்க முழுக்க அன்பைப் பேசும் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்



இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது.. 

இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை, டீசர் பார்த்து அவ்வளவு சிரித்தேன், இங்குப் படம் பார்த்தவர்கள் பேசுவதைக் கேட்கும்போது படம் பார்க்கும் ஆவல் கூடுகிறது. சசிகுமார் சார் முகத்தில் இத்தனை நாள் பார்க்காத மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. சசிகுமார் சாரை, மதுரையிலிருந்து இலங்கைக்குக் கூட்டிப்போனதற்கே  பெரிய பாராட்டுக்கள். இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கிறேன் என ஒத்துக்கொள்ளவே ஒரு தைரியம் வேண்டும் அது அவரிடம் இருக்கிறது. ஒரு கதை சுருக்கத்தைப் படித்து ஒரு நிறுவனம் படம் செய்ய ஒத்துக்கொள்கிறது என்றால் அதை நம்ப முடியவில்லை, நல்ல கதைகளைத் தேடித் தயாரிக்கும் மில்லியன் டாலர் நிறுவனம் பெரிய வெற்றி பெற வேண்டும். பசங்க படம் தயாரித்த காலகட்டத்தில் சசிகுமார் சாரை பார்த்தது போலத் தான் அவர்களைப் பார்க்கிறேன் அதே உற்சாகம் அவர்களிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 


இயக்குநர் த செ ஞானவேல் கூறியதாவது..  

இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டேன் கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும்.  ஒரு ஒரு போர் பத்தி, அது ஏற்படுத்துகின்ற விளைவுகள் பத்தி,  ஒரு குண்டு சத்தம் இல்லாமல் ஒரு அது சம்பந்தமான ஒரு அழுகாட்சி இல்லாமல்,  மிக ஆழமாகப் போரின்  வலியை வந்து இந்தப் படம் பேசியுள்ளது.  இதோட நகைச்சுவை எல்லாரும் பேசுவார்கள்  ஆனால்  வலியைச் சொன்னால் கூட  நமக்கு அது பாதிக்காது, ஆனால்  வலியை மறைத்துக் கொண்டு  சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்னு இல்ல அப்படின்னு சொல்றது இருக்கு இல்லையா அது மிகத் துயரமானது. அழகான ரசனையான ஒரு நகைச்சுவைக்கு பின்னால் ஒரு போர் என்ன செய்யும் அப்படிங்கிறது தான் இந்த கதை.  பெண்கள், குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றைப் பாதுகாப்பது போன்ற சில விதிகள் போரில் முக்கியம்.  ஆனால் இப்போது உலகம் கொடூரமாக மாறிவிட்டது, மனிதாபிமானம் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் கொடூரங்களை நாம் தினமும் பார்க்கிறோம். இலங்கையில் போர் எவ்வளவு இரக்கமற்றது என்பதை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். அது உருவாக்கிய தாக்கம் பேரழிவை ஏற்படுத்துவதால் மக்கள் இன்று வரை துன்பப்படுகிறார்கள். படத்தைப் பார்க்கும்போது நான் பிரமித்துப் போனேன், ஏனென்றால் அது போன்ற ஒரு நாட்டிலிருந்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இயக்குநர் விநாயக் சந்திரசேகர் கூறியதாவது..  

இந்தப் படத்தில் நான் எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால்  மில்லியன் டாலர் தயாரிப்பு எப்போதும் என்னுடைய படமாகத்தான் பார்க்கிறேன், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் எனக்கு இப்படத்தின் கதை சுருக்கத்தை அனுப்பினார், படிக்க அத்தனை சுவாரஸ்யமாக இருந்தது. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஒரு ஆச்சரியம், அவர் ஒரு கல்லூரி ஜூனியர் மாதிரி இருக்கிறார், ஆனால் ஒரு விளையாட்டுப் போட்டியில் திடீரென்று வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வீரரைப்  போல் ஆச்சரியப்படுத்துகிறார். சசிகுமார் பற்றி நினைக்கும் போதே சுப்பிரமணியம் படம் ஞாபகம் வந்துவிடும், அப்படி ஒரு சிறப்பான படத்தைக் கொடுப்பது, அவரைத் தவிர வேறு யாராலும்  முடியாது. இப்படத்தில் அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார்.  குட் நைட் ஸ்கிரிப்டை முடித்த போது, யாருக்கும் அது உண்மையில் பிடிக்கவில்லை யாரும் தயாரிக்க முன்வரவில்லை. நான் மனச்சோர்விலிருந்தபோது, ​​தயாரிப்பாளர் யுவராஜ் யாரும் தயாரிக்கவில்லை என்றால், நான் செய்கிறேன் என்று சாதாரணமாகக் கூறினார். மறுநாள் அவர் போன் செய்து தனது சொத்தை அடமானம் வைத்துவிட்டுத் திட்டத்தைத் தொடங்குவோம் என்று கூறினார்.அதை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். மில்லியன் டாலர் எப்போதும் நல்ல கதைகள் செய்யும், இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது..  

எல்லோருக்கும் வணக்கம் வள்ளுவர் சொன்னதிலிருந்து ஆரம்பிக்கலாம் அன்பின் வழியது உயிர்நிலை அப்படின்றது ஒரு முக்கியமான ஒரு குரலா நான் பார்க்கிறேன், அதவே கவிஞர் வைரமுத்து எ அன்பே சிவம்ல அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா ! அப்படின்றாரு அதுக்கும் கொஞ்சம் முன்னாடி போனால்,  அவரே  அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயசு 100 ன்னு சொல்றாரு.  அவ்வளவு அன்பு நிறைஞ்ச ஒரு படம் எடுத்த அபிக்கு  100 வருட ஆயுள் கிடைக்கட்டும்.  அவ்வளவு அன்பு இருக்கிற  இந்த படம்  இப்போதைய  காலகட்டத்தில்  மிக   முக்கியமான ஒரு படமாகப் பார்க்கிறேன்.  இப்படத்தில்  அனைவருமே மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள், சசி சார் சிம்ரன் மட்டும் இல்ல அவங்கள சுத்தி நடிச்சிருக்க அத்தனை பேரும் மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள். இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த மில்லியன் டாலர் நிறுவனத்திற்கு நன்றிகள், அன்பான மனிதர்கள் யுவராஜ் மகேஷ் விஜய் எல்லாரும் எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



இயக்குநர் புஷ்கர் காயத்திரி கூறியதாவது...

சசிகுமார் சார் படங்கள் மென்மையாகத் தொடங்கி இரத்தக்களரியாக முடியும்,  அப்படித்தான் நாம்  வழக்கமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் எதுவுமே இல்லை, படத்தில் முழு குடும்பத்தையும் உள்ளடக்கிய ஒரு அழகான காட்சி உள்ளது, ஸ்பாய்லர்கள் இல்லை, ஆனால் அந்தக் காட்சிக்காகவே நாங்கள் படத்தை மீண்டும் பார்ப்போம். அந்த குறிப்பிட்ட காட்சி அத்தனை அழகாக  இருந்தது. அந்த சிறுவர்களிடம் எப்படி நடிப்பை வாங்கினார்கள் என இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சசிகுமார் & சிம்ரன் என்று குறிப்பிட்டதற்குத் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். பல படங்களில் சிம்ரன் மேடத்தின் பங்களிப்பு கவனிக்கப்படாமல் போய்விட்டது, இது நிச்சயமாக அந்தப் பட்டியலில் சேராது. இந்தப் படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.  ஃபீல்-குட் படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறுமா? என்ற குழப்பமான சூழ்நிலை இருக்கும்போது. மில்லியன் டாலர் பிக்சர்ஸ் சரியான படங்களை  ஹிட்டாக கொடுத்து தொடர்ச்சியாக நல்ல படங்கள் ஜெயிக்கும் என நிரூபித்து வருகிறது. இந்தப்படமும் அவர்களுக்குப் பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்



நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது...

எல்லாருக்கும் வணக்கம் இந்த படத்தைப் பார்த்து அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தேன். சமீபமாக  சசிகுமார்  சார் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே அற்புதமாக உள்ளது. அவர் அடுத்துச் செய்யப்போகும் படம் பற்றியும் தெரியும். இப்போதெல்லாம் எமோஷனலாக இருந்தால் கிரிஞ்ன்னு சொல்லிவிடுகிறார்கள். அயோத்தி டைரக்டர் இந்த டைரக்டர் என எல்லாருக்கும் பெரிய நம்பிக்கை கொடுக்கிறார் சசி சார். இப்படத்தின் இரண்டாம் அத்தனை எமோஷனலாக இருந்தது, இசையில் ஷான் கலக்கியிருக்கிறார், திரைக்கதைக்குள் சென்று பின்னணி இசை அமைத்துள்ளார்.  ஒவ்வொரு தயாரிப்பாளரும் படம் எடுக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும்போது, ​​மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தங்கள் ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.  



நடிகர் மணிகண்டன் கூறியதாவது..  

'டூரிஸ்ட் ஃபேமிலி'  படம் ரெடியான இந்த இரண்டு வாரத்தில் படம் பற்றி நிறைய நல்ல விசயங்களைக் கேட்க முடிகிறது. ஆனால் எனக்கு 1.5 வருடங்களுக்கு முன்பே இந்தப்படம் பற்றித் தெரியும்.  அதாவது இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முழு ஸ்கிரிப்டையும் எனக்குச் சொன்ன போதே மிரட்டலாக இருந்தது. அவர் கதை சொல்வதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சசி சாரைத் வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துப் பார்க்க முடியவில்லை படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும். இசையமைப்பாளர் ஷான் நல்ல நண்பர் மணிக்கணக்கில் அவருடன் போனில் பேசுவேன், அவர் மனைவி திட்டுவார். இப்படத்தில் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.  இப்படி ஒரு கதையை நம்பி தயாரிப்பது அத்தனை எளிதான விசயமல்ல, ஆனால் அதை மிக எளிதாக மில்லியன் டாலர் சாதித்துள்ளனர். கண்டிப்பாக இந்தப்படம் பார்க்கும் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.  


லப்பர் பந்து இயக்குநர்  தமிழரசன் பச்சமுத்து கூறியதாவது

இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு திரையரங்கில் கைதட்டல் நிச்சயம், இது ஒவ்வொரு அறிமுக இயக்குநரின் கனவு. கண்டிப்பாக இப்படம்  பெரிய வெற்றியைப் பெறும். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மும்பை இந்தியன்ஸ் போன்றது. அவர்கள் எங்கிருந்து புதிய திறமைகளைத் தேடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மிக அட்டகாசமான கதைகளைத் தயாரிக்கிறார்கள். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் எதிர்காலத்தில் என்ன பெரிய படங்களைத் தயாரித்தாலும், இதே போல புதிய இளைஞர்களைத் தொடர்ந்து திரைத்துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


லவ்வர் பட  இயக்குநர்  பிரபுராம் வியாஸ் கூறியதாவது..   

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் திரைக்கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம். அவர்கள் டூரிஸ்ட் ஃபேமிலி மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒரு அறிமுக இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார்கள். இது அவர்களால் மட்டுமே முடியும். இந்தப்படமும் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும் நன்றி. 


தயாரிப்பாளர் அருண் விஸ்வா கூறியதாவது… 

டூரிஸ்ட் ஃபேமிலி உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படம். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஒரு பிராண்டாக மாறிவிட்டது. நடிகர்களும் இயக்குநர்களும் விரைவாக நட்சத்திரங்களாக மாறுவது வழக்கம். ஆனால் ஒரு தயாரிப்பு நிறுவனம் அதை அடைவது மிகவும் கடினம். குட் நைட் அப்புறம் லவ்வருக்குப் பிறகு, அந்த தயாரிப்பு நிறுவனம் மீது, மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.   டீசரிலேயே டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய  வெற்றி பெற்று விட்டது. எனது நண்பர்கள் பலர் இப்படம்  பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். கண்டிப்பாக இப்படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் வாழ்த்துக்கள். 


நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது… 

டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம் என்று என்னால் உறுதியாகச்  சொல்ல முடியும்.  சில மாதங்களுக்கு முன்பு, இலங்கையைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்தார்கள். நாங்கள் இங்கு வந்து 35 வருடங்கள் ஆகின்றன, ஆனால் எங்களுக்கு இன்னும் ஒரு மரியாதைக்குரிய அடையாளம் கிடைக்கவில்லை என்று அவர்கள் கவலையுடன் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.  அந்த வலி இந்தப்படம் பார்க்கும் போது புரிந்தது.  இந்த படத்தைத் தாண்டி அபிஷன் ஜீவிந்த் பெரிய வெற்றியைப் பெறப் பெற முடியாது. சசிகுமாருக்கு சுப்பிரமணியபுரம் என்றால், எனக்கு நாடோடிகள், அது போல அபிஷனுக்கு இந்த டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும்.  இதை விடச் சிறந்த படத்தை உருவாக்குவது சாத்தியமில்லை.  நாடோடிகள் வெளியானபோது, கேபி சார் என்னுடன் சேர்ந்து அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தார். நாங்கள் ஒரு தியேட்டருக்குச் சென்றோம், பார்வையாளர்கள் டைட்டிலுக்கே கைதட்டினார்கள், கேபி சார் என்னை நோக்கித் திரும்பி, அவர்கள் அனைவரும் ஏன் டைட்டிலுக்கு  ஆரவாரம் செய்கிறார்கள் என்று கேட்டார்.  எனக்கும் அது புரியவில்லை. படம் வரும் படத்தின் மீது மக்களுக்கு நல்ல அன்பு இருந்தது.  இந்தப் படத்திற்கும் அந்த  மேஜிக் நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தில் பல காட்சிகளை மறக்க முடியவில்லை, படத்தில் ஒரு நாய் கூட அற்புதமாக நடித்துள்ளது. படத்தைப் பார்த்த பிறகு, அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் இருந்தேன், மேலும் ஒரு சிறிய பகுதியிலாவது என்னை டப்பிங் கலைஞராக்குமாறு குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன் ஆனால் படத்தை முடித்துவிட்டார்கள். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றியைக் குவிக்கும் நன்றி.



பாடலாசிரியர் மோகன்ராஜன்  கூறியதாவது..  

இங்குள்ளவர்களுக்கு இது புதிதாக இருக்கலாம் இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது முன்பே தெரியும். இந்தப்படம் மீது அத்தனை நம்பிக்கை இருந்தது. இயக்குநர் அபிஷன் ஜீவிந் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த டீசரை இயக்குநர் சசி சார் பார்த்த பிறகு,  அது அவருடைய திரைப்படப் பாடல்களில் ஒன்றின் கவிதை வரியை நினைவுபடுத்தியதாகச் சொன்னார். என்னிடம் போன் நம்பர் வாங்கி உடனே இயக்குநரைப் பாராட்டினார்.  நான் படத்தைப் பார்க்க வரச் சொன்ன ஒரே நபர் அவர்தான். படம் முடியும் வரை அந்த மூன்று மணி நேரம் நான் மிகவும் பயந்தேன். ஆனால் பார்த்த பிறகு அவர் மிகவும் மனதைத் தொடும் வாழ்த்துக்களைச் சொன்னார். இந்த மேடையிலும் அதையே பகிர்ந்து கொண்டார். அவருக்கு நன்றி. அண்ணன் சசி மிக நன்றாக நடித்துள்ளார். இப்படையான கதையைத் தைரியமாகத் தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பல படங்கள் தயாரிக்க வேண்டும் நன்றி. 


படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் கூறியதாவது...

டூரிஸ்ட் ஃபேமிலி என்பது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் உடன் எனது மூன்றாவது படம், இன்றுவரை அவர்களின் அனைத்து படங்களுக்கும் நான் எடிட்டராக இருக்கிறேன். எனக்கு முழு  ஆதரவு தந்து, தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்கு  அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரும் ரசிப்பீர்கள் நன்றி. 


ஆவேசம் நடிகர் மிதுன் கூறியதாவது:

டூரிஸ்ட் ஃபேமிலியில் மூத்த பையன் நான் தான். ஆவேசம் எனக்கு முதல் படமாக அமைந்தது. அதே போல் மிகச் சிறப்பான படமாக  டூரிஸ்ட் ஃபேமிலி அமைந்துள்ளது. இந்த மாதிரி  ஸ்கிரிப்ட்டில் நான் நடிக்க என்று எனக்குச் சந்தேகம் இருந்தது. சிறுவயதிலிருந்தே எனக்குத் தமிழ் புரியும். ஆனால் இலங்கை தமிழ் பேசும் பையனாக நடிக்க எனக்குப் பதட்டமாக இருந்தது. படத்தில் நடிக்க உதவியதற்காக முழு குழுவினருக்கும் நன்றி. சசி சார், சிம்ரன் மேடம், இயக்குநர் அபி அண்ணா அனைவருக்கும்  நன்றி  



குழந்தை நட்சத்திரம் கமலேஷ் கூறியதாவது...

நான் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் அது தான் எனக்கு அறிமுகமாக அமைந்தது. அதன் பிறகு நான் ஜோதிகா மேடத்துடன் ராட்சசி படத்தில் அறிமுகமானேன். அதன் பிறகு கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. சசி சார், சிம்ரன் மேடமுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. படப்பிடிப்பு தளத்தில் என்னைச் சொந்த பையன் போலப் பார்த்துக் கொண்டார்கள், இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கூறியதாவது…

நான் இந்தத் துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மனநிலையில் இருக்கிறேன்.  இந்த 10 வருடத்தில் அதிர்ஷ்டவசமாக, நான் பல நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, அது முற்றிலும் என் அதிர்ஷ்டம். ஜெய் பீம் படத்திற்குப் பிறகு, நான்  உருவாக்கும் இசையைப் பெரிய பொறுப்பாகவே பார்க்கிறேன். நான் எந்த படத்திற்கும் சாதாரணமாக இசையமைக்க விரும்பவில்லை.  அந்தப்படம் சிறப்பாக இருக்க வேண்டும். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்  எனது திரைப்பயணத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் பெருமைப்படக்கூடிய நல்ல  திரைப்படங்களை எனக்குத் தந்துள்ளனர்.  ஜெய் பீம் படத்திற்கு முன்பே மணிகண்டன் மூலமாக  அவர்களுடனான எனது பயணம் தொடங்கியது. குட் நைட் படத்தின் இசை வெற்றிக்கு அவரது நடிப்பு ஒரு முக்கிய காரணம். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனித்திறமை கொண்ட  இயக்குநர். அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படத் இயக்குநராக இருப்பார், ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள், சசிகுமார் சார் எல்லோருடன் இயல்பாக ஒரு சகோதரப் பிணைப்பைக் கொண்டு வந்து விடுகிறார். இப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்.  தமிழ் சினிமாவின் அடையாளமாக  டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இப்போது தமிழில் என்ன மாதிரியான படங்கள் வருகின்றன என்று கேட்டால், அதற்கான  பதிலாக  டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும்.




இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது…

நான் சின்னப் பையனா இருந்தபோது, என் அம்மா நிறையப் பேரை ஊக்கப்படுத்திப் பாராட்டுவார். நான் இயக்குநர் ஆனதுமே எல்லோரும் என் அம்மாவை பாரட்டிபார்கள், ஏனென்று யோசித்தேன். இப்போது அவங்களலாதான் நான் நல்ல ஆளா இருக்கேன்னு எனக்குப் புரியுது. * என் அப்பா ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார். சாலையோரத்தில் தூங்கி வேலை செஞ்சிருக்கார். நான் ஒரு இயக்குநரான பிறகு, என் எல்லா கஷ்டங்களையும் நானும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நான் உறுதியா இருந்தேன். ஆனால் நான் வளர்ந்து வந்தபோது, என் அப்பா எனக்கு இதுபோன்ற கஷ்டங்களைச் சந்திக்க விடவே இல்லை. சசிகுமார் சார் இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா நடித்திருக்கிறார். என்னையும் சேர்த்து மூணு குழந்தைகள். அவர் எனக்கு அப்பா மாதிரி தான். சிம்ரன் மேடம் படத்துல வந்த பிறகுதான், இந்தப் படம் அடுத்த கட்டத்துக்குப் போச்சு, எல்லாரும் அதைப் பத்திப் பேச ஆரம்பித்தார்கள்.  அவருக்கு நன்றி. யோகி பாபு சார் ஆரம்பத்தில் எங்களுக்கு 5 நாள் கால்ஷீட் கொடுத்தார். முதல் நாள் ஷூட்டிங் முடிஞ்சதும், அவர் வந்து, பணத்தைப் பத்தி கவலைப்படாதீங்கன்னு சொல்லி, இந்தப் படத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும்  டேட்ஸ் தருவதாகச் சொன்னார். எம்.எஸ். பாஸ்கர் சார் நேரம் தவறாதவர். அவர் மிகத் திறமையான  நடிகர். ஒவ்வொரு காட்சிக்கும், அவர் 3 விதமான நடிப்பை வழங்குவார், எனக்கு மிகவும் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கச் சொல்வார். எனது வெற்றியில் 50% ஐ ஷான் ரோல்டனுக்கு அர்ப்பணிப்பேன். இசையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அவர் ஒரு தூணாக இருந்து வருகிறார். எனது இயக்குநர் குழு சிறந்தது. எனது அடுத்த படத்திற்கும் அவர்களைக் கூடவே வைத்துக்கொள்வேன்.  படத்தை விளம்பரப்படுத்துவதில் முழுமையாகச் செயல்பட்ட வெங்கட்ரமணனுக்கு நன்றி. படத்தில் 'இராகி' என்ற அழகான பாடலையும் அவர் பாடியுள்ளார். இந்த சிறிய டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை  உலகம் முழுவதும் பரவலாக எடுத்துச் சென்று எங்களுக்கு ஒரு பெரிய வெளியீட்டை வழங்கிய விதுரரின் சகோதரருக்குப் பாராட்டுகள். மில்லியன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு என் நன்றிகள்.




தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் கூறியதாவது… 

டூரிஸ்ட் ஃபேமிலி ஸ்கிரிப்டை படித்ததும் எனக்குப் பிடித்தது. இந்தக்கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என  நம்பினேன், கதை சொன்ன உடனேயே இயக்குநர் அபிஷன் ஜீவிந்திடம் நீ தமிழ் சினிமாவில் பெரிய உயரத்திற்குச் செல்வாய் என பாராட்டினேன்.  படத்தைப் பார்த்த பிறகு, அவர் சொன்ன அளவிற்கு 100% கொடுக்கவில்லை, ஆனால் அவர் 200% செய்து முடித்தார் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.  ஒரு ஸ்கிரிப்டைக் கேட்டு, தயாரிக்க முடிவு செய்த பிறகு, ஷான் ரோல்டனின் இசை, பரத் விக்ரமனின் எடிட்டிங் என அவர்களை நியமித்துவிட்டு  நான் நிம்மதியாகி விடுவேன். அதில் ஆடியோ உரிமைகளும் அடங்கும். சசிகுமார் சாரைத் தேர்ந்தெடுத்த பிறகு, திங்க் மியூசிக் சந்தோஷ், விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வகையிலிருந்து வருகிறார். எங்கள் விநியோக  கூட்டாளியான விதூர்  சகோதரருடன் சேர்ந்து, வினோத் சிஜே சகோதரரும் படத்தை இவ்வளவு பெரிய அளவில் கொண்டு செல்வதில் ஒரு பெரிய சொத்தாக இருந்துள்ளார். ஒரு சின்ன படம்  ஒரு பெரிய வெளியீட்டைக் காண்பது அரிது. சசிகுமார் சார் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமே இல்லை. எங்கள் எல்லா சித்திரவதைகளையும் தாங்கிக்கொண்டு இந்தப் படத்தில் நடித்ததற்கு நன்றி.  இப்போதும் நீங்கள் உங்கள் மற்ற படப்பிடிப்பை ஒத்திவைத்து, எங்களுடன் இருக்கிறீர்கள் நன்றி.  நான் அடிக்கடி குழந்தைகள் காப்பகத்திற்குச் செல்வேன். நாங்கள் அந்த  குழந்தைகளுக்கு குட் நைட் திரைப்படத்தைத் திரையிட்டோம், அவர்களின் எதிர்வினைகளைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் அனைவரும் இதுபோன்ற மகிழ்ச்சியான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரிக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர். அன்று நான் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்தேன், அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் நன்றி. 




நடிகர் சசிகுமார் கூறியதாவது… 

இவ்வளவு தரமான படத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களுக்கு நன்றி. நான் கம்பெனி புரொடக்‌ஷன்ஸைத் தொடங்கியபோது, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி சார் தான் எனக்கு அதற்கு உத்வேகமாக இருந்தார், அவர்களின் 90 படங்களில், 48 படங்கள் அறிமுக இயக்குநர்கள் தான். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து புதிய இயக்குநர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன், மேலும் அவர்களின் சிறந்த சிந்தனைக்காக மட்டுமே அவர்களின் பேனர் படங்களைப் பார்க்குமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். * இன்றுவரை தங்கள் உரிமைகள் மற்றும் அடையாளங்களுக்காகப் போராடும் அகதிகள் மீது பெரும் அக்கறையும் அன்பும் உள்ளது.   அயோத்தி மற்றும் நந்தனைப் போலவே, டூரிஸ்ட் ஃபேமிலி அகதிகளின் வலியை அழுத்தமாகச் சொல்லும், மிகவும் தகுதியான பாதையை அமைக்கும் படமாக இருக்கும் என்று  என்று நம்புகிறேன்



ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment