*மதுவுக்கு எதிரான இதுபோன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் ; 'மாவீரன் பிள்ளை' படம் பார்த்துவிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு*
மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் அதிகரித்து வரும் நிலையில், மதுவினால் ஏற்படும் அவலத்தை குறித்தும் மதுவிற்காக போராடி உயிர்நீத்த சமூக ஆர்வலர்கள் குறித்தும் ஒரு அருமையான விழிப்புணர்வு படமாக தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மாவீரன் பிள்ளை.
KNR ராஜா தயாரித்து, இயக்கி, அவரே கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் 'காட்டுக் காவலாளி' வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிகர் ராதாரவி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதிலும் கடந்த பல வருடங்களாக மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டு பல்வேறு தரப்பு போராட்டங்களை நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் ஐயா அவர்கள் இந்த படம் பற்றி கேள்விப்பட்டு இந்த படத்தை பார்த்தார்.
படம் பார்த்து முடித்ததும் மாவீரன் பிள்ளை படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த திரு ராமதாஸ் அவர்கள், “மதுவிலக்கிற்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி நமது பாட்டாளி மக்கள் கட்சி தான்.. சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் அதிகம் வெளியானால், குற்றங்கள் குறையும்.. தமிழகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படும்” என்று பாராட்டியுள்ளார்.
அவரது இந்த பாராட்டை தொடர்ந்து மாவீரன் பிள்ளை படக்குழுவினர் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment