*கிராமிய பின்னணியிலான முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரம் 'தெய்வ மச்சான்'*
*'தெய்வ மச்சான்' பத்திரிக்கையாளர் சந்திப்பு*
*'தெய்வதிரு' மரியாதையை விரும்பியவர்- பாண்டியராஜன் சொன்ன நகைச்சுவை கதை*
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
ஏப்ரல் 21ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது படத்தின் தயாரிப்பாளர்கள் உதயகுமார், வத்சன் வீரமணி, நாயகன் விமல், நடிகர் பாண்டியராஜன், நடிகை அனிதா சம்பத், நடிகை தீபா சங்கர், நடிகர் கிச்சா ரவி, பாடலாசிரியர் அருண் பாரதி, படத்தொகுப்பாளர் இளையராஜா, இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் உதயகுமார் பேசுகையில்,'' 'தெய்வ மச்சான்' எனும் இந்த திரைப்படத்தை எங்களுடைய உதய் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனத்துடன் மேஜிக் டச் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். கிராமத்து பின்னணியிலான முழு நீள நகைச்சுவை திரைப்படமாக தயாராகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசித்து சிரித்து அனுபவிப்பார்கள். இந்த திரைப்படம் நடிகர் விமலுக்கு 'விலங்கு'க்குப் பிறகு பெரிய வெற்றி படமாக அமையும். இந்தத் திரைப்படத்தில் பாண்டியராஜன், அனிதா சம்பத், தீபா சங்கர் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் முழுமையான ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்கள்.'' என்றார்.
நடிகர் பாண்டியராஜன் பேசுகையில், '' மச்சான் என்ற ஒரு வார்த்தையில் அற்புதமான ஒரு உறவொன்று இருக்கிறது. மனைவியின் தம்பி அல்லது அண்ணன். தூத்துக்குடி பகுதியில் மீனவர்கள் முத்து குளிக்க கடலுக்குள் இறங்கும்போது இடுப்பிற்குள் கயிறு கட்டி கடலுக்குள் குதிக்கும் முன், அதன் மறுமுனையை மச்சான் எனும் உறவின் முறையில் இருப்பவரிடம் தான் நம்பிக்கையுடன் அளித்துவிட்டு குதிப்பர். கடலுக்குள் முத்துக்காக குதித்தவர் முத்து கிடைத்தாலும்... கிடைக்கவில்லை என்றாலும்... கயிறை இழுத்து விட, அதன் நுட்பம் அறிந்து கடலுக்குள்ளிருந்து மேலே வரவழைப்பவர் மச்சான்.
இதே தருணத்தில் அண்ணன் - தம்பி என்ற உறவாக இருந்தால், சொத்து விசயத்தில் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடலுக்குள் குதித்தவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவர். ஆனால் மச்சான் என்ற உறவு தான், தன் தங்கையின் தாலி பாக்கியம் நீடித்து நிலைக்க வேண்டும் என்ற பரிதவிப்புடன் நுட்பமாக கவனித்து கடலுக்குள் குதித்தவரை காப்பாற்றுவர். அந்த வகையில் மச்சான் என்ற உறவு அழுத்தமானது. மேலும் தெய்வ மச்சான் என்பது அதைவிட சிறப்பானது.
ஒரு முறை நண்பர் ஒருவருக்கு திருமண பத்திரிகையை வைத்து அழைப்பு விடுத்தார் மற்றொரு நண்பர். அந்த நண்பர் பத்திரிக்கையில் உறவினர்களின் பெயரையும் வாசித்துக் கொண்டே வந்தார். இவரை மட்டும் 'உயர்திரு' என்று குறிப்பிட்டும், மற்றொருவரை 'தெய்வத்திரு' என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக அவர் வருத்தப்பட்டு புகார் தெரிவிக்க... அவரிடம் இந்த 'தெய்வத்திரு'விற்கான விளக்கத்தை சொன்ன பிறகு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த தெய்வ மச்சான் படமும் யதார்த்தமான ஜாலியான அனைத்து தரப்பு ரசிகர்களும் சிரித்து மகிழக்கூடிய ஜனரஞ்சகமான படமாக உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் நாயகனான விமல் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களிலும் எளிமையாக பழகக்கூடியவர். அவர் ஒரு முறை என்னிடம் 20 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஒரு போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் காருக்குள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தது பார்த்தேன் என விவரித்தார். மற்றொரு முறை என்னுடைய பிறந்தநாளன்று திடீரென்று வருகை தந்து மாலை அணிவித்து, பரிவட்டம் சூட்டி, புகைப்படம் எடுத்து ஆசி கேட்டார். அந்த அளவுக்கு எளிமையான மனிதர் விமல்.
அவர் மட்டுமல்ல படத்தின் தயாரிப்பாளரும் இயல்பாக பழகக் கூடியவர். ஒட்டுமொத்த படக் குழுவும் படப்பிடிப்பு தளத்தில் மறக்க இயலாத அனுபவத்தை வழங்கினார்கள். '' என்றார்.
இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் பேசுகையில், '' இந்த கதை மீது நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் உதயகுமார் மற்றும் வத்சனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் கதைக்கு பொருத்தம் என்பதால் 'தெய்வ மச்சான்' என பெயர் சூட்டி இருக்கிறோம். படத்தின் முன்னோட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. படத்திற்கும் ஆதரவளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நாயகன் விமல் பேசுகையில்,'' தெய்வ மச்சான் முழு நீள நகைச்சுவை படம். பாண்டியராஜனுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். 1997- 98 ஆம் ஆண்டு வாக்கில் நான் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பாண்டியராஜன், ஒரு வாகனத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது உணவருந்த கூட நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கக்கூடிய நட்சத்திர நடிகர் என்றும், இவரைப் போல் நாமும் ஒரு நாள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே உணவருந்த வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. ஆண்டவன் புண்ணியத்தில் நடிகராகி அதேபோல் வாகனத்தில் பயணிக்கும் போது உணவருந்தும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்தத் திரைப்படத்தில் எனக்கு தங்கையாக அனிதா சம்பத் நடித்திருக்கிறார். தீபா அக்காவும் கிச்சா ரவியும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். என்னுடைய நண்பனாக பால சரவணன் நடித்திருக்கிறார். 'விலங்கு' என்னும் இணையதொடருக்கு பிறகு மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் நாங்கள் இருவரும் ஜாலியாக நடித்திருக்கிறோம்.
பூகம்பம் என்ற நாளைய இயக்குநர் போட்டியில் கலந்து கொண்ட ஒரு குறும்படத்தை எனக்கு காண்பித்தனர். அந்த குறும்படம் காமெடியாக இருந்தது. இதனை முழு நீள திரைப்படமாக உருவாக்குவதற்கு வேறு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டவுடன், இயக்குநர் சில எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அது சிறப்பாக இருந்தது. வேல. ராமமூர்த்தி குதிரை மீது அமர்ந்து வேட்டைக்காரராக வருகை தந்து நாயகனான என் கனவில் சொல்வது எல்லாம் நடந்து விடும். அவர் கனவில் வந்து சொன்னவை எல்லாம் நடந்துதா..? இல்லையா..? என்பது தான் இப்படத்தின் கதை. தயாரிப்பாளர் உதயகுமார் எப்போதும் சிரித்த முகம் தான். தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, எங்களுடைய படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது. அப்போது கூட எதை பற்றியும் கவலைப்படாமல் சிரித்தபடியே சூழலை எதிர்கொண்டார். அவருடைய நல்ல நோக்கத்திற்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.'' என்றார்.
தயாரிப்பாளர் வத்சன் வீரமணி பேசுகையில், '' நானும் , இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமாரும் நாளைய இயக்குநர் தருணத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கிறோம். குறும்படங்களுக்காக நிறைய விருதுகளை வாங்கி இருக்கிறோம். திரைப்படத்தில் இணைய வேண்டும் என எதிர்பார்த்தோம். பல தடைகளைக் கடந்து 'தெய்வ மச்சான்' படத்தில் இணைந்திருக்கிறோம். இதற்காக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜனுக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். கொரோனாவிற்கு பிறகு இந்த படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தேன். தொடங்கிய தருணத்திலேயே இதனை தொடர்ந்து நான் மட்டும் தனியாக சுமக்க இயலாது என்பதனை உணர்ந்து, உடனடியாக நண்பரான உதயகுமார் அவர்களை சந்தித்து நிலையை விளக்கினேன். அவர் கதையை கேட்டவுடன் சரி தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என வாக்குறுதி அளித்தார். 'விலங்கு' இணைய தொடரின் படப்பிடிப்பு தளத்தில் விமலை நேரில் சந்தித்து இந்த கதையை கூறினோம். அவருக்கு பிடித்துப் போனது. நவம்பர் மாதம் திண்டுக்கல் அருகே உள்ள ஐயம்பாளையம் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். எங்களுடைய குழுவினருக்கு உள்ளூர் மக்கள் பேராதரவு அளித்தனர். அந்த மக்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அனிதா சம்பத் கடைசி தருணத்தில் ஒப்பந்தம் செய்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கிய எங்களை ஆச்சரியப்படுத்தினார். நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கினர்.'' என்றார்.
நடிகை தீபா சங்கர் பேசுகையில்,'' 'சொப்பன சுந்தரி படத்தில் நான் ஓவர் ஆக்டிங் செய்திருப்பதாக விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் குறைத்து நடிக்க முயற்சிக்கிறேன். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பாண்டியராஜனுடன் நடித்த அனுபவம் மறக்க இயலாது. நான் சின்ன வயதில் இருந்த போது பாண்டியராஜன் திரையில் தோன்றி பாடிய 'காதல் கசக்குதையா..' என்ற பாடலை பார்த்து ரசித்தேன். அந்த காலகட்டத்தில் நாங்கள் பார்த்து ரசித்த கதாநாயகர்களுள் பாண்டியராஜனும் ஒருவர். இந்தப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் விமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் திறமையாக நடித்திருக்கிறோம். இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.
அனிதா சம்பத் பேசுகையில்,'' இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் படத்திற்கும் பேராதரவு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தேவையான முக்கியத்துவத்தை இயக்குநர் மார்ட்டின் வழங்கி இருக்கிறார். '' என்றார்.
No comments:
Post a Comment