சென்னை உலகப்படவிழா
ஈரான் அரசைப் பணிய வைத்த படம் ...
The Seed of the Sacred Fig .
*******************************
சில படங்கள் எடுக்கப்பட்ட கதை கேட்க சுவையாக இருக்கும் . ஆனால் படம் மொக்கையாக இருக்கும் .
சில படங்கள் எடுக்கப்பட்ட விதங்களைப் பற்றிய தகவல்கள் மொக்கையாக இருக்கும் . ஆனால் படம் சிறப்பாக இருக்கும்
ஆனால் ஒரு சில படங்களுக்குதான், படத்தைப் போலவே எடுக்கப்பட்ட வரலாறும் கம்பீரமாக இருக்கும் .
அப்படி ஒரு படம்தான் சென்னை உலகப் பட விழாவில் திரையிடப்பட்ட The Seed of the Sacred Fig .
இது ஒரு பெர்ஷிய மொழிப் படம்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் அரசு அலுவலர் Iman. அவரது மனைவி Najmeh. இந்தத் தம்பதிக்கு Rezvan, Sana என்று இரண்டு, இளம் வயது மகள்கள்.
ஒரே தனி அறை உள்ள வீடு, வளர்ந்த பெண்களுக்கு போதவில்லை என்பதால் இரண்டு அறைகள் கொண்ட வீட்டுக்குப் போக வேண்டும் என்பது மனைவியின் ஆசை. கணவனிடம் அதை சொல்லவும் செய்கிறாள். அவனும் அதன் அவசியத்தை உணர்கிறான்
அரசால் கைது செய்யப்படுபவர்களுக்கு யோசிக்காமல் தூக்குத் தண்டனை கொடுக்கும் வேலை அவனுக்குப் பதவி உயர்வாக வருகிறது . சற்று தயங்கினாலும், மகள்களின் வசதிக்காக அதை ஏற்கிறார் . அவருக்கு அரசு சார்பில் பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கியும் கொடுக்கப்படுகிறது .
கட்டாய ஹிஜாப் சட்டத்தை எதிர்த்து பெண்கள் நாடெங்கும் போராடுகிறார்கள். போராடும் பெண்கள் போலீசால் கண்ட இடங்களில் அடித்து முகம் உடைக்கப்பட்டும் கிழிக்கப்பட்டும் சிதைக்கப்படுகிறார்கள். அவர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடுபவர்களும் போலீசால் கைது செய்யப்பட அவர்களுக்கு தூக்குத்தண்டனை தருவது iman.இன் வேலை .
அப்பா இந்த வேலை செய்வது மகள்களுக்குத் தெரியாது . எனினும் அப்பாவின் பணி, மற்றும் வெளியே உள்ள கலவர சூழல் காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற அம்மாவின் வேண்டுகோளை ஏற்கும் பிள்ளைகள், சமூக ஊடகங்கள் மூலம் போராட்ட நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள். கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான மன நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் .
ஆனால் Iman அதை ஆதரிப்பவன் என்பதால் மனைவியும் கணவன் வழி .
Rezvan இன் நெருங்கிய தோழி Sadaf. கட்டாய ஹிஜாப்புக்கு எதிராகப் போராடிய அவள் கொடூரமாக தாக்கப்பட்டு தப்பிக்க, அவளுக்கு Rezwan, Sana ஆகியோரும் அவர்களின் வற்புறுத்தலால் வேறு வழி இன்றி Najmehவும் அடைக்கலம் கொடுக்கிறார்கள், Iman னுக்குத் தெரியாமல்! அவள் பெரிய புரட்சிக்காரி போல இருக்கிறாள்.
ஒரு நிலைக்கு மேல் அவளுக்கு உதவ முடியாமல் பிள்ளைகளின் விருப்பத்தையும் மீறி அவளை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறாள் Najmeh.
இந்த நிலையில் Iman இன் துப்பாக்கி காணமல் போகிறது ! அது மேலதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டால் Imanனுக்குக் குறைந்தது மூன்று ஆண்டு ஜெயில் . அதிக பட்சம் தூக்குத் தண்டனை .
எங்கே போனது துப்பாக்கி?
தனது குடும்பம் Sadafக்கு உதவியது Imanனுக்குத் தெரியாது என்பதால் அவனுக்கு மனைவி மகள்கள் மீதே சந்தேகம் .
சக அதிகாரியும் நண்பனுமான Alireza மூலம் மனைவி மகள்களையே விசாராணைக்கு ஆளாக்கி மனைவியை நம்பிக்கை இழக்கச் செய்கிறான் Iman .
இன்னொரு பக்கம் இந்த போராட்டத்தில் அரசுக்கு ஆதரவாக இருந்து தூக்குத் தண்டனை தருவது போன்ற மக்கள் விரோதப் பணிகளில் இருக்கும் Iman போன்ற நபர்களின் முகவரி அடையாளங்களைக் கண்டுபிடிக்கும் போராட்டக்காரர்கள் அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, அவர்களை போராட்டக்காரர்கள் கும்பலாகத் திரண்டு தாக்கும் சம்பவகள் நடக்கின்றன .
ஒரு நிலையில் Iman னின் அடையாளம் மற்றும் முகவரியும் வெளியிடப்பட அவர்களும் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படுவார்களோ என்ற நிலை .
மகள்களுக்கு அப்பா செய்யும் ஈவு இரக்கமற்ற அநியாய வேலை தெரிய வருகிறது . அநியாயமாக பாதிக்கப்பட்ட தங்கள் தோழி Sadaf ஐ கண்டுபிடிக்க உதவும்படி சொன்னபோது அப்பா மறுத்த காரணமும் புரிகிறது . Sadaf என்ன ஆனாள் என்று தெரியாத மகள்களுக்கு அப்பா மீது மரியாதை போகிறது .
இந்த நேரத்தில் Sadaf வந்து உதவுவதுதான் திரைக்கதை என்று நான் நினைக்க , ஒரு அட்டகாச திருப்பம்.
Iman சில நாட்களுக்கு டெஹ்ரானில் இருந்து கிளம்பி எங்காவது குடும்பத்தோடு போய்விடுவது பாதுகாப்பு என்று சக அதிகாரியால் அறிவுறுத்தப்பட , தனது கிராமத்தில் உள்ள வீட்டுக்கு குடும்பத்துடன் போகிறான் .
வழியில் ஒரு குழு அவனைப் படம் பிடித்து பின் தொடர, அவர்களை Iman , சக அதிகாரி கொடுத்த இன்னொரு துப்பாக்கியால் சுடப் போக , சரி இதுதான் கதை என்று பார்த்தால் அங்கேயும் ஒரு திருப்பம்..
Iman தனது மனைவி மகள்களுடன் சொந்த கிராமத்தை அடைந்து , ஒரு நாள் அன்பு காட்டுவது போல போக்குக் காட்டி விட்டு, பிறகு தனது காணமல் போன துப்பாக்கியை எடுத்தது யார் என்ற விசாரணையை துவங்குகிறான் .
இப்போது அவன் அப்பாவாக, கணவனாக இல்லை .
யோசிக்காமல் தூக்குத் தண்டனை கொடுக்கும் அரசு அதிகாரியாக இருக்கிறான்.
தொலைந்த துப்பாக்கி என்ன ஆனது ? நடந்தது என்ன என்பதே படம்.
பெரும்பாலும் நான்கே பேர் உள்ள காட்சிகள். மூணு மணி நேரப் படம். நிதானமான கதை சொல்லல், ஆனால் துளி கூடப் போரடிக்க வில்லை, இருக்காய் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்கிறோம் .
இரவு நேரக் காட்டில் அமைதியின் ஆழத்தில் ஒரு காட்டு யானை கம்பீரமாக நடப்பது போல நகர்கிறது படம்
பிள்ளைகளுக்காக தவறான வேலையை ஒத்துக் கொண்ட தகப்பன் ஒரு நிலையில் பிள்ளைகளுக்கு எதிராகவே இப்படி நடந்து கொள்வானா என்ற கேள்வி வராமல் இல்லை.
அவன் மகள்களின் நலனுக்காக தப்பான வேலையை ஏற்றான் என்று சொல்லாமல் அது அவனது பதவி பண ஆசை என்று கூட சொல்லி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது .
ஆனால் என்ன சொல்ல வேண்டும் என்பதில் படம் தெளிவாக இருக்கிறது . நம்மை நேசிப்பவர்களின் நன்மைக்காக நாம் தவறு செய்ய ஆரம்பித்தால், ஒரு நிலையில் அதே தவறை நாம் நேசிப்பவர்கள் மேலும் செய்து விடுவோம் . கவனம் என்பதுதான் படம் சொல்லும் சேதி . அதுதான் இந்தப் படத்தின் சிகரம்.
அபாரமான திரைக்கதை , ரசித்துக் கொண்டாட முடிகிற வசனம் . ஆங்காங்கே குபீர் குபீர் காமெடிகள்
ஆறு மாதம் முன்பு கேன்ஸ் உலகப்பட விழாவில் நேரடியாக வெளியான இந்தப் படம் நடுவர் சிறப்பு விருது உட்பட ஆறு விருதுகள் பெற்றது .
.
கடந்த செப்டம்பர் 18 இல்தான் படம் பிரான்சில் வெளியானது . அதற்குள் பல விழாக்களில் திரைக்கதை இயக்கத்துக்கான விருதுகள். இன்னும் இரண்டு வாரம் கழித்துதான் ஜெர்மனியில் ரிலீஸ் ஆகிறது .
காரணம் பிரச்னைகள் அப்படி
படத்தின் எழுத்தாளரும் இயக்குனருமான Mohammad Rasoulof , படத்தின் தனது ஈரானிய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக படம் எடுப்பதையே வழக்கமாகக் கொண்டவர் . இவருக்கும் ஈரானிய தணிக்கைத் துறைக்கும் ஏழாம் பொருத்தம் இல்லை இல்லை எழுபத்தி ஏழாம் பொருத்தம் .
மூன்று முறை இவரை சிறையில் அடைத்து இருக்கிறது ஈரான் அரசு.
இவரது There Is No Evil படம் 2020 இல் 70th Berlin உலகப் பட விழாவில் முதல் பரிசு பெற்ற போது இவர் ஜெயிலில்தான் இருந்தார் .
2023 Cannes உலகப் படவிழாவுக்கு இவர் நடுவராக அறிவிக்கப்பட்ட போதும் இவர் ஈரானில் ஜெயிலில் இருந்தார். காரணம் ஈரானில் அபதான் என்ற நகரில் தரமற்று கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து பலர் மண்ணில் புதைந்த போது அதைக் கண்டித்து இவர் அறிக்கை விட்டதுதான்.
ஓராண்டு சிறை தண்டனை. முடிந்து, இரண்டு ஆண்டுகள் நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று விரட்டப்பட்டார்
கேன்ஸ் உலகப் படவிழாவுக்கு இந்த The Seed of the Sacred Fig படம் தேர்வான உடன் , கொதித்து எழுந்த ஈரான் அரசு படத்தில் Iman ஆக நடித்த Missagh Zareh, Najmeh வாக நடித்த Soheila Golestani, Rezwan ஆக நடித்த Mahsa Rostami, Sana வாக நடித்த Setareh Maleki ஆகியோரை கடுமையான விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது . படத்தை கேன்ஸ் உலகப் படவிழாவில் இருந்து திரும்பப் பெறச் சொல்லி Mohammad Rasoulof - ஐ வற்புறுத்தி அதைச் செய்து முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியது . ஆனால் நடக்கவில்லை
கேன்ஸ் விழாவில் படம் திரையிடப்படுவதற்கு இரண்டு வாரம் முன்பு ''Mohammad Rasoulof க்கு எட்டு வருட சிறை தண்டனை மற்றும் கசையடிகள் வழங்கப்படும் . அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு மேற்கண்டு அபராதமும் வழங்கப்படும்'' என்று ஈரான் அரசு அறிவித்தது.
இயக்குனரும் அவரது யூனிட் ஆட்கள் சிலரும் ஐரோப்பாவுக்குத் தப்பினார்கள் . பல நாட்கள் உயிர் பயத்தோடு நடந்தும் ஓடியும் எல்லைகளைக் கடந்தார்கள்.
ஒரு வழியாக ஜெர்மன் எல்லையை அவர்கள் அடைய , இயக்குனரின் கைரேகையை வைத்து அவரை அடையாளம் கண்ட ஜெர்மன் அரசு அவரை பத்திரமாக, கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலுக்கு அனுப்பி வைத்தது .
அதை ''மிகக் கடினமான சிக்கலான நீண்ட வேதனையான பயணம் ''என்கிறார் இயக்குனர் Mohammad Rasoulof .
விழாவில் Iman ஆக நடித்த Missagh Zareh, Najmeh வாக நடித்த Soheila Golestani, ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது .
இல்லை இல்லை... பயப்பட ஒன்றும் இல்லை . காரணம் அவர்கள் ஈரானிலியே சிக்கிக் கொண்டதுதான்
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் Najmeh வாக நடித்த Soheila Golestani ஈரானில் நிஜமாகவே கட்டாய ஹிஜாபுக்கு எதிரான போரட்டத்தில் பங்கேற்று ஜெயிலுக்குப் போனவர்.
படத்தின் கதையைப் போலவே படப்பிடிப்பும் திக் திகீர் என்று ரகசியமாகத்தான் நடந்து இருக்கிறது . எடுக்கப்பட்ட காட்சிகளை ஜெர்மனிக்கு ரகசியமாக கடத்திக் கொண்டு போய்தான் அங்கே எடிட்டிங் உள்ளிட்ட பின் பணியாகக வேலைகள் எல்லாம் நடந்து இருக்கிறது.
படத்தில் கட்டாய ஹிஜாப்புகு எதிராக போராடும் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் கொடூர வன்முறை காட்சிகள் எல்லாமே ... நிஜ வன்முறைக் காட்சிகள்! எதுவுமே சித்தரிக்கப்பட்டது இல்லை. படம் பார்த்தால் மேலே சொன்ன வார்த்தைகளின் வீரியம் விளங்கும்
அடுத்தடுத்து உலகம் எங்கும் வெற்றிகளைக் குவிக்கப் போகும் படம் இது
இதோ ... படம் உலகம் எங்கும் புகழ் பெற ஆரம்பித்த நிலையில் , ஹிஜாப் அணியாத பெண்களுக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை திரும்பப் பெற்று இருக்கிறது .
அங்க நிக்கிறான் படைப்பாளி Mohammad Rasoulof
ஆம் . . The Seed of the Sacred Fig படத்தின் பாய்ச்சலே இனிமேதான் இருக்கு .
ஒரு படம் எடுத்தால் குறைந்த பட்சம் போட்ட காசு வரணும் .
அதிக பட்சம் இப்படி இருக்கணும் .
நாம என்ன பண்ணிட்டு இருக்கோம் தெரியுதா?
பின்குறிப்பு : நேற்று உலகப் பட விழாவில் படம் துவங்கிய உடன் உள்ளே பரபரப்பாக வந்து அமர்ந்தார் தேவயானி. ஆர்வத்துடன் படம் பார்த்தார் .
படம் முடிந்து கிளம்பும்போது , " என்ன தேவயானி ... najmeh கேரக்டரில் நடிக்கலாமா என்ற திட்டத்துடன் போகிறீர்களா? " என்றேன் . சட்டென்று என்னைக் கூர்ந்து அர்த்தபுஷ்டியுடன் பார்த்தவர் அதற்குப் பதில் சொல்லாமல் " படம் சூப்பரா இருந்தது" என்று சொல்லி விட்டுப் போனார்
--- சு . செந்தில் குமரன்
18/12/ 2024 காலை 9:10 மணி
No comments:
Post a Comment